Header Ads



அமெரிக்கர்களுக்கு என்றால் ரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சாஸூ..!



(வினவு) ஈராக்கில் திங்கள் கிழமை நடந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 55 மக்கள் உயிரிழந்தனர். அதே நாளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மராத்தான் ஓட்டப்பந்தய நிகழ்வில் 2 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 

ஈராக்கில் ஏப்ரல் 15, 2013 திங்கள் கிழமை நடந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 55 மக்கள் உயிரிழந்தனர். அமெரிக்க இராணுவம் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு நடக்கவிருக்கும் முதல் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த கொடூர தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

சதாம் ஹூசைன் தலைமையிலான அப்போதைய ஈராக் அரசாங்கம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து கடந்த 10 ஆண்டுகளாக ஈராக்கை ஆக்கிரமித்திருந்தது.

போருக்கு முன்பு அமெரிக்காவும், பிரிட்டனும் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய ஆதாரங்களை போலியாக தயாரித்தார்கள் என்பதும், ஈராக்கில் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதும் பின்னர் நிரூபணமாயின. அமெரிக்காவின் போரினாலும் தொடர்ந்த ஆக்கிரமிப்பினாலும் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான (1.1 லட்சம் முதல் 1.2 லட்சம் வரை) அப்பாவி ஈராக்கிய மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்க படையெடுப்பின் 10-ம் ஆண்டு நிறைவை குறிக்கும் மார்ச் 19-ம் தேதி நாடு முழுவதும் நடந்த குண்டு வெடிப்புகளில் 65 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தொடர்ந்த வன்முறை சம்பவங்களில் சனிக்கிழமை நடக்கவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

திங்கள்கிழமை நடந்த தாக்குதல்களுக்கு முந்தைய நாள், ஞாயிற்றுக் கிழமை நடந்த வன்முறை சம்பவங்களில் தேர்தலில் போட்டியிடும் ஒரு சன்னி வேட்பாளர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

திங்கள் கிழமையன்று சன்னி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அன்பர் மாநிலம், சதாம் உசைனின் சொந்த ஊரான திக்ரித், எண்ணெய் வளம் மிகுந்த கிர்குக் மாநிலம், ஷியாக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெற்கு ஈராக்கிய நகரங்கள் என்று நாடு முழுவதும் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

அதிகாலை 6.30 மணிக்கு கிளர்ச்சியாளர்களின் முன்னாள் தளமான பலுஜாவில் தற்கொலை போராளி ஒருவர் குண்டுகள் பொருத்திய காரை போலீஸ் சோதனைச் சாவடி மீது மோதியதில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர்.

ரமாதிக்கும் பலூஜாவுக்கும் இடையேயான நெடுஞ்சாலையில் காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அரசுக்கு எதிரான போராட்டங்களின் பத்திரிகை தொடர்பாளரின் 2 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர். அதே பகுதியில் இன்னொரு கார் குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.

பசௌபா, புஹ்ரிஸ், காலிஸ், மொசுல், முசாயப், நசிரியா, ருத்பா, தர்மியா, திர்கித் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டனர், பல டஜன் பேர் காயமடைந்தனர்.

மிகக் கடுமையான தாக்குதல்கள் தலைநகர் பாக்தாத் மீது நடத்தப்பட்டன. பல கார் வெடிகுண்டுகளும் மற்ற வெடிப்புகளும் 25 பேரை பலி வாங்கின.

கமாலியா என்ற கிழக்கு புறநகர் பகுதியில் நடந்த தாக்குதலில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்தனர். ‘ஜன்னல்கள் நொறுங்கி விழுந்து குழந்தைகள் பயத்தில் அலறினார்கள்’ என்றார் அருகிலுள்ள பள்ளியின் ஆசிரியரான காசிம் சாத். குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கிச் சுட்டனர்; கவிழ்க்கப்பட்ட காய்கறி வண்டிகள் ரத்தம் படிந்து கிடந்தன; கடை முகப்புகள் நொறுங்கி போயிருந்தன.

கடும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள பாக்தாத் பன்னாட்டு விமான நிலையத்தின் நுழைவாயிலில் உள்ள கார் நிறுத்தத்தில் 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இரவு நெருங்கும் வேளையில் கிழக்கு நகரப் பகுதியான ஹபிபியாவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர். தலைநகரில் கமிலா, ஷூர்தா, பலாடியத், மற்றும் உம்-அல்-மாலிப் பகுதிகளில் மற்ற தாக்குதல்கள் நிகழ்ந்தன.

மூன்று குண்டுகள் அவை வெடிப்பதற்கு முன்பே நீக்கப்பட்டு விட்டதாக ஈராக்கின் இராணுவ மேஜர் ஜெனரல் ஹசன்-அல்-பய்தானி தெரிவித்திருக்கிறார்.

பல இனத்தவர்கள் வாழும் கிர்குக் நகரில் அரபுக்கள் வாழும் பகுதியில் ஒன்று, குர்துகள் வாழும் பகுதியில் ஒன்று, துருக்கியர்கள் வாழும் பகுதியில் ஒன்று என்று மூன்று கார் வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். நகருக்கு வெளியே வெடித்த மூன்று குண்டுகள் மூலம் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக்கை இப்படி குண்டுகள் வெடிக்கும் நாடாக மாற்றியது யார்? ஷியா, சன்னி பிரிவுகளை தூண்டி விட்டு மோதவிட்டு ஈராக்கை எப்போதும் மோதல்களில் வாழும் நாடாக வைத்திருப்பது அமெரிக்காதான். தனது மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்கு இத்தகைய உள்நாட்டு மோதல்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது அமெரிக்காவிற்கு புதிதல்ல.

ஈராக்கில் ஒரே நாளில் 55 பேரை பலி கொண்ட குண்டு வெடிப்புகள் நடந்த அதே நாளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மராத்தான் ஓட்டப்பந்தய நிகழ்வில் 2 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது யார் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் நடந்த சமீபத்திய துப்பாக்கிச் சூடுகளை வைத்துப் பார்க்கும் போது இது வெள்ளை நிறவெறியர்களாலோ இல்லை அமெரிக்க வாழ்க்கையால் சீர்குலைந்த வெள்ளையர்களாலோ நடத்தப்பட்டு இருக்கலாம். இல்லை ‘அல்கைதா’வாகக் கூட இருக்கட்டும். அல்கைதாவும் கூட அமெரிக்காவின் தயாரிப்புதானே!

ஈராக்கின் குண்டு வெடிப்பு செய்திகளை கண்டு கொள்ளாத உலகம் பாஸ்டன் குண்டு வெடிப்பிற்கு ஒப்பாரி வைக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் உலக ஊடகங்கள் வரை தனிச்சிறப்பாக பாஸ்டன் குண்டு வெடிப்பின் மீது அனுதாபமும், கண்டனமும் தெரிவிக்கின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், போஸ்டன் குண்டுவெடிப்புகளை கண்டித்து ஒபாமாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஒருவேளை ஈராக் மக்களெல்லாம் குண்டு வெடிப்பில் சாக விதிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம். அமெரிக்கர்களுக்கு என்றால் ரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சாஸூ என்பது உண்மைதானே?



2 comments:

  1. அமெரிக்காதான் குண்டைவைத்தது சுயகாரியங்களுக்காக வேறு பேச்சுக்கு இடமே இல்லை. அமெரிக்கா அரசாங்கத்தை விட ஒருகேவலமானதும் ஐதாங்கேட்ட அரசாங்கமும் உலகில் உண்டா இல்லவே இல்லை அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் நாங்கள் தலையாட்டவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை அமெரிக்க எங்களுக்கு சோறுபோடவுமில்லை எங்களுக்கு அமெரிக்காவென்றால் மயிருக்கும் நாங்கள் கணக்கெடுப்பதில்லை. மொத்தத்தில் அமெரிக்கா மற்றவர்களுக்கிடையில் பிரச்சினையை உண்டுபண்ணி அதில் தொழில் நடத்தும் ஒரு கேவலமான் நாடு இதுதான் யாவருமறிந்த உண்மை.

    ReplyDelete
  2. We don't need to worry about America and we don't depend on their hands. We earn and live Alhamthulillah.

    We only live and wait for kiyamathday is our aim.

    ReplyDelete

Powered by Blogger.