Header Ads



'மியன்மாரின் பின்லாடன்' - முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த குருவின் இனவாத பேச்சு


(Tn) மியன்மாரில் தீவிரமடைந்துள்ள இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரங்கள் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனநாயக சீர்திருத்த செயற்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 969 என அழைக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பின் பிரசாரங்கள் மத்திய மியன்மாருக்கு வெளியிலும் பரவி வருகிறது.

கடந்த மாதம் மியன்மாரில் ஏற்பட்ட முஸ்லிம்- பெளத்தர்களுக்கு இடையிலான மதக் கலவரத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர். எனினும் அங்கு தொடர்ந்தும் இஸ்லாமிய எதிர்ப்பு துண்டுபிரசுரங்கள், டி.வி.டிக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் இணைய தகவல் பரிமாற்றங்கள் தீவிரமடைந்திருப்பதாக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி தைன் சைன் அரசின் ஜனநாயக சீர்திருத்த செயற்பாடுகளுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரங்கள் கடும் சவாலாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. தமது நாடு வன்முறைகள் மற்றும் ஸ்திரமின்மையால் பாடம் கற்றிருப்பதாக ஜனாதிபதி தைன் சைன் தனது புத்தாண்டு வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

60 மில்லியன் சனத்தொகை கொண்ட மியன்மாரில் நான்கு மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன. ஆனால் முஸ்லிம்கள் தற்போது தனது எதிர்காலம் பற்றி பயத்தில் இருப்பதாக மியன்மார் இஸ்லாமிய விவகார கவுன்ஸிலின் தலைவர் நியுன்ட் மவுஷ்ஷெயின் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக சீர்திருத்த காலத்தில் முஸ்லிம்கள் கொடூர கும்பல்களின் பலிக்கடாவாகி இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இதில் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பான 969 இன் தலைவரான பெளத்த துறவி விரது, முஸ்லிம்களை எதிரிகள் என வர்ணித்து வருகிறார். விரது தம்மை மியன்மாரின் பின்லாடன் என அடையாளப்படுத்தி வருகிறார். இஸ்லாமிய எதிர்ப்பு கலவரத்தில் ஈடுபட்டதற்காக கடந்த 2003 ஆம் ஆண்டு 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனைக்கு உள்ளான இவர் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்ட போது விடுதலையானார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் விரது தனது தீவிர சர்ச்சைக் குரிய பிரசாரத்தை ஆரம்பித்தார். எனினும் அந்நாட்டு அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. “இந்தத் திட்டத்தை பரப்புவதே எனது பணி” என அவர் கூறியிருந்தார்.

இதனிடையே 969 ஸ்டிக்கர்கள் நாட்டின் வர்த்தக நகர் ரங்கூன் மற்றும் மண்டலெ உட்பட பல பகுதிகளிலும் உள்ள கடைகள், வீடுகள் மற்றும் டக்சி வண்டிகளில் பரவலாக காணக்கிடைப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்டிக்கர்களில் சிறுபான்மை முஸ்லிம்களின் சனத்தொகை 20 வீதத்தை விடவும் உயர்ந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பௌத்த தேரரின் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பேச்சு இந்த வீடியோவில் ஆங்கில உபமொழியுடன் இணைக்கப்பட்டுள்ளது.



1 comment:

  1. அல்லாஹ் அனைத்துக்கும் போதுமானவன். அவனிடமே இந்த அவலத்தை முறையிடுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.