'யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கான இந்திய விட்டுத்திட்டம் பற்றிய அறிவுறுத்தல்'
2013 ஏபரல் 15ம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வின்போது வழங்கப்பட்ட கருத்துக்களையும் தகவல்களையும் இங்கே தருகின்றோம்.
இந்திய வீட்டுத்திட்டம் என்பது இந்திய மக்களால் இலங்கை மக்களுக்கு வழங்கப்படுகின்ற இரு நாடுகளினதும் அரசாங்கங்களின் ஈடுபாட்டுடன் கூடிய ஒரு செயற்பாடாகும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம், மாவட்ட செயலகங்கள், சர்வதேச அமுலாக்கல் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் இணைந்த கூட்டுப்பொறிமுறை அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி இந்திய வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் எவரும் நேரடியாக தான் வசிக்கின்ற பிரதேசத்தின் கிராம சேவையாளர், பிரதேச செயலகங்களினூடாக விண்ணப்பங்களை வழங்க முடியும். இது மிகச்சாதாரண நடைமுறையாகும்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் விடயத்தில் இத்தகைய சாதாரண நடைமுறையினூடாக மக்கள் விண்ணப்பங்களை வழங்கினார்கள். அவ்வாறு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் 2012 டிசம்பர் தரவுகளின் பிரகாரம் 168 ஆகும். அத்தகைய விண்ணப்பதாரிகளை தமது விண்ணப்பங்களை காணி உறுதி, தோம்பு, வரிப்பணப் பற்றுச்சீட்டு, நில அளவை, வீட்டுத்திட்ட வரைபு, வெளிமாவட்டங்களில் வீடுகள் இல்லை என்ற உறுதிப்படுத்தல் கடிதம் போன்ற அடிப்படை ஆவணங்களை இணைத்து பூரணப்படுத்தும்படி கோரப்பட்டவேளையில் 28 விண்ணப்பதாரிகள் மாத்திரமே தமது விண்ணப்பங்களைப் பூரணப்படுத்தினர். ஏனையோர் பூரணப்படுத்தவில்லை.
இது குறித்து ஆராய்ந்தபோது காணி உறுதிகள் சார்ந்து பல்வேறு சிக்கல்கள் இருப்பதும், மாநகரசபை அனுமதியினைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. அது மாத்திரமன்றி யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் முஸ்லிம்களை இந்திய வீட்டுத்திட்டத்தில் இணைத்துக்கொள்வதில் தொடர்ந்தும் பக்கச்சார்பாக நடந்துகொண்டார். இதற்கமைவாக யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம், இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுக்களை நடாத்தி, அவர்களின் ஆதாரவுடன் “இந்திய வீட்டுத்திட்டம் துரித விண்ணப்பங்கோரல் நிகழ்ச்சித்திட்டம்” என்ற ஒரு செயற்திட்டத்தை கடந்த ஒரு மாதகாலமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதன்போது எமக்கு பல யதார்த்தங்களை கண்டுகொள்ள முடியுமாக இருந்தது.
“இந்திய வீட்டுத்திட்டம் துரித விண்ணப்பங்கோரல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாம் 350 விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்தல் என்ற இலக்கை அடையாளம் செய்தோம். இதற்காக யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களின் மக்கள் சந்திப்புகளை நடாத்தி குறித்த திட்டம் குறித்து மக்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டோம். அவ்வாறு நாம் பெற்ற விண்ணப்பங்கள் 230 ஆகும். அவ்வாறு பெறப்பட்ட 230 விண்ணப்பங்களுள் 197 விண்ணப்பங்கள் மாத்திரமே முழுமையான ஆவணங்களைக் கொண்ட விண்ணப்பங்களாகும். ஏனைய 33 விண்ணப்பங்களும் அடிப்படை ஆவணங்களை மாத்திரம் கொண்ட விண்ணப்பங்களாகும். எனவே பெறப்பட்ட 197 விண்ணப்பங்களும் பின்வரும் ஒழுங்கில் பிரித்து நோக்கப்பட்டன
· அசல் உறுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள் 113
· அரச பத்திரக்காணிகளைக் கொண்ட விண்ணப்பங்கள்- 53
· வெளிப்படுத்தல் உறுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள் – 15
· காணிப்பிணக்குகளைக் கொண்ட விண்ணப்பங்கள் – 16
இவற்றின் அடிப்படையில் வெளிப்படுத்தல் உறுதிகளைக் கொண்ட 15 விண்ணப்பங்களையும் காணி அதிகாரசபை, மற்றும் மாநகர சபை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி, அவை அணைத்தும் அசல் உறுதிகளாக மாற்றப்பட்டு பெறுமானங்கள் தீர்மானிக்கப்பட்டு, இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நோக்கும் போது காணிப்பிணக்குகளைக்கொண்ட விண்ணப்பங்கள் 16இனைத்தவிர ஏனைய 181 விண்ணப்பங்களும் இந்திய வீட்டுத் திட்டத்திற்கான மாநகரசபை அனுமதியைப் பெற்றுக்கொள்கின்ற நிலைக்கு உயர்த்தப்பட்டன.
வடக்கில் இந்திய வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரேயொரு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் யாழ் மாநகர சபைப் பிரதேசமாகும், எனவே மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டிட நிர்மானங்களுக்கு காணப்படும் விதிமுறைகளை நாம் அவசியம் பின்பற்றியேயாகவேண்டிய நிலை காணப்படுகின்றது. இதற்கு மாநகர சபை அடிப்படை விதிகளை நிர்ணயித்திருக்கின்றது.
அத்தகைய விதிகளாவன
Ø காணியின் பரப்பளவும் 6பேர்ச்களாக இருக்க வேண்டும், 1984ற்கு முன்னர் பிரிக்கப்பட்ட காணிகளாயின் 3 பேர்ச் அளவுத்திட்டம் போதுமானதாகும். இதற்கு நில அளவைப் படம் (SURVEY PLAN)இணைக்கப்படல் வேண்டும்
Ø காணியின் உறுதியின் பெயருக்கு வரிப்பணம் செலுத்தப்படவேண்டும், அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும், இதற்கு தோம்பு –(உறுதியின் வரலாறு) இணைக்கப்படல் வேண்டும்
Ø அமையவிருக்கின்ற வீட்டின் திட்ட வரைபடம் (Housing Plan)
எமக்கு கிடைக்கப்பெற்ற 181 விண்ணப்பங்களிற்கும் மேற்குறித்த 3 ஆவணங்களையும் பெற்றுக்கொள்கின்ற செயற்பாடுகள் கடந்த ஒரு வாரகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் பிரகாராம் 38 விண்ணப்பங்கள் 100% பூரணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏனைய 143 விண்ணப்பங்களும் மாநகர சபை அனுமதிக்காக காத்திருக்கின்றன.
நில அளவை: 143 விண்ணப்பங்களுள் 45 விண்ணப்பங்கள் நில அளவை செய்யப்பட்ட நிலையிலும், ஏனைய 98 விண்ணப்பங்கள் நில அளவை செய்யப்படவேண்டிய நிலையிலும் காணப்படுகின்றன
வரிப்பணப்பெயர் மாற்றம் : 143 விண்ணப்பங்களுள் 18 விண்ணப்பங்கள் வரிப்பணம் பெயர்மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், ஏனைய 125 விண்ணப்பங்கள் வரிப்பணம் பெயர்மாற்றம் செய்யப்படவேண்டிய நிலையிலும் காணப்படுகின்றன.
பிணக்குகள் காணப்படுகின்ற காணிகள் குறித்து சட்டத்தரணிகள் மட்டத்திலும், காணி அதிகாரசபை மட்டத்திலும் அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது சார்ந்த முழுமையான பெயர் விபரங்களும் தற்போது யாழ், ஒஸ்மானியா கல்லூரிக்கு முன்பாக விஷேடமாக அமைக்கப்பட்டுள்ள யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் இந்திய வீட்டுத்திட்டத்திற்கான செயலகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன, எனவே இந்திய வீட்டுத்திட்டத்திற்காக விண்ணப்பித்த அனைவரும் எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்தி தமது விண்ணப்பங்களின் நிலை குறித்து அறிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும் புதிதாக இந்திய வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இருக்கின்றவர்களும் தமது விண்ணப்பங்களை காலம் தாழ்த்தாது எம்மிடம் கையளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
மக்களின் கவனத்திற்க்கு: இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாக வழமைபோன்று அரசியல் சுய இலாபம் தேடுவோரும், குழப்பங்களை விளைவிப்போரும், துண்டுப் பிரசுரங்களையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருவது குறித்து விழிப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். இவர்கள் சாதித்தவைகள் எதுவும் கிடையாது, வெறுங்கதை பேசவும், தம்பட்டம் அடிப்பதுவுமே இவர்களது பணியாக இருக்கின்றது. இத்தகைய சுயநல சுயேட்சை அரசியல் வங்குரோத்துக்காரர்கள் குறித்து விழிப்பாக இருக்கும்படியும் அவர்களது விமர்சனங்களைக் கண்டு குழப்பம் அடையத்தேவையில்லை என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்திய வீட்டுத்திட்டம் என்பது தங்கத்தட்டில் வைத்து எமது வீடுதேடி வந்து தரப்படும் உதவித்திட்டம் கிடையாது, அதற்கு மக்களாகிய நாமும் முயற்சிக்க வேண்டும், அந்த வகையில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பங்களை வழங்கியவர்கள் எம்மோடு ஒத்துழைத்து தங்களது விண்ணப்பங்களைப் ப்பூரணப்படுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றமே எமது அடிப்படை நோக்கமாகும்.
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்
மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்
நிலாம்0770-512246
ஜமால்0774-458582
ஷர்மிளா 0776-674795
அஸ்மின் -0770-525391
Post a Comment