இலங்கைக்கான நிதியுதவியை 20 சதவீதத்தால் வெட்டுகிறது அமெரிக்கா
சிறிலங்காவுக்கான நிதியுதவியில் 20 சதவீதத்தை வெட்டுவதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி முடிவு செய்துள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், மனிதஉரிமைகள், மீள்கட்டுமானம், அரசியல் மீளிணக்கப்பாடு போன்றவற்றில் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் ஏற்பட்டுள்ள விரிசலின் விளைவாகவே இந்த நிதிஉதவிக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்தவாரம் அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஜோன் கெரியின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவில், தெற்காசியாவிலேயே சிறிலங்காவுக்குத் தான் அதிகளவு நிதிக்குறைப்பு மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு 11 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்க ஜோன் கெரி முன்மொழிந்துள்ளார்.
இது 2012ம் ஆண்டின் நிதியுதவியில் 20 சதவீதம் குறைவாகும்.
“சிறிலங்காவில் எமது பெருமளவு நிதியை நிகழ்ச்சிநிரல்படுத்துவதில் கடினமாக உள்ள சூழலை உண்மையில் இது பிரதிபதிலிக்கிறது.
வடக்கில் இடம்பெயர்ந்தவர்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்பவும், மீள்கட்டுமான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவும் நிறையவே நம் முயற்சிகளை மேற்கொண்டோம்.
பல சந்தர்ப்பங்களில் திட்டங்களை நாம் மேற்கொள்ள முயன்றபோது, சிறிலங்கா இராணுவம் அதில் தலையிட்டதால், எம்மால் அந்தத் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள முடியாது போனது” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
”எனவே, சிறிலங்கா ஒரு நடுத்தர வருவாய் உள்ள நாடு என்ற வகையிலும், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நெருக்கடிகளை சந்திக்கும் நாடு என்ற வகையிலும், எமது வளங்களை குறைக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வந்தோம்“ என்றும் தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார்.
2012ம் ஆண்டில் சிறிலங்காவுக்கான அமெரிக்க அபிவிருத்தி உதவிகள் 8 மில்லியன் டொலர்களாக இருந்தது.
2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை ஜோன் கெரி 6 மில்லியன் டொலர்களாக குறைக்க பரிந்துரைத்துள்ளார்.
பங்களாதேசுக்கான அமெரிக்க உதவி 81.6 மில்லியன் டொலரில் இருந்து 80.9 மில்லியன் டொலராக மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சிறிலங்காவின் அண்டை நாடான மாலைதீவுக்கான நிதியுதவிகளை அமெரிக்கா அதிகரித்துள்ளது.
சிறிலங்காவுக்கான நிதியுதவியில் பெரும் பகுதியை நீதித்துறை மறுசீரமைப்பு சார்ந்த திட்டங்களுக்கே அமெரிக்கா வழங்கவுள்ளது.
அமெரிக்காவின் பேச்சும் குடிகாரனின் பேச்சும் ஒன்றுதான் விடிஞ்சால் போச்சு.
ReplyDelete