Header Ads



யானைகளின் அட்டகாசம் தொடருகிறது (படங்கள்)



(எம்.பைஷல் இஸ்மாயில்)

காரைதீவு பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் வீட்டு மதில் மற்றும் பொருட்களும் சேதமடைந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகம் இரவு வேளைகளில்தான் காணப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை (2013.03.23) நள்ளிரவில் காட்டு யானைக் கூட்டம் குறித்த கிராமத்துக்கள் உற்புகுந்து மாவடி கந்தசுவாமி ஆலயத்தின் அருகாமையிலுள்ள கனகசபை விசுவலிங்கம் என்பவரது வீட்டிற்குள் புகுந்து நெல் மூட்டைகளை வெளியே இழுத்து உறிஞ்சியதுடன் இப்பகுதியிலிருந்த வாழை மற்றும் தென்னம் பிள்ளைகளின் குருத்துக்களை சாப்பிட்டதுடன் வீட்டுப் பாவணைப் பொருட்களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

இவ்வாறு உட்புகுந்த காட்டு யானைக் கூட்டம் சுமார் இரு மணி நேரமாக பெரும் அட்டகாசம் செய்துவிட்டு சென்றதாகவும், இதனை அறிந்த பிரதேச வாசிகள் வெளியில் வராமல் பயத்தினால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்ததாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இது பற்றி அவரது மகன் வி.குலேந்திரன் சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இவ்விடயத்தைப்பற்றி குறிப்பிட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

எனவே கடந்த சில நாட்களாக காட்டு யானைக் கூட்டத்தின் அட்டகாசத்தினால் தங்களின் உடமைகளை இழந்து வருகின்ற இந்நிலைமையில் எப்போது தங்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தினால் இரவு வேளைகளில் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்ற காரைதீவு கிராம மக்களின் கவலையையும், அச்சத்தையும் போக்க குறிப்பிட்ட பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோர் இணைந்து இது தொடர்பான உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவர முயற்சிப்பதோடு அம்மக்களுக்கு நல்லதொரு நின்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு துணை செய்ய முயற்சிக்க வேண்டும்.




No comments

Powered by Blogger.