ஹொஸ்னி முபாரக் மீது மீண்டும் விசாரணை
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு, பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர் பதவி விலக நேர்ந்தது. தனது ஆட்சிக்கு எதிராக போராடியவர்களை கொன்று குவித்ததாக முபாரக்கின் மீது குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து, கெய்ரோ சிறையில் முபாரக் தண்டனை அனுபவித்து வந்தார். சமீபத்தில் கீழே விழுந்த முபாரக்குக்கு நெஞ்சு எலும்புகள் உடைந்து காயம் ஏற்பட்டதால், தற்போது அவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், முபாரக்கின் மீது நடத்தப்பட்ட விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை. எனவே, மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று முபாரக் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, அஹமத் அலி அப்துல் ரஹ்மான், முபாரக் மீது மறுவிசாரணை நடத்த அனுமதி அளித்தார். கடந்த விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை தவிர, புதிய சாட்சிகளை சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் மறுவிசாரணை நடத்தப்படலாம் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இந்த உத்தரவையடுத்து முபாரக் மீதான வழக்கின் மறுவிசாரணை வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் தொடங்கும் என கெய்ரோ மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட வழக்குடன் சுமார் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக பெற்ற ஊழல் வழக்கு தொடர்பான புதிய விசாரணையும் முபாராக்கிற்கு எதிராக ஏப்ரல் 13 முதல் தொடங்கப்படும் என தெரிகிறது. இதே வழக்கில் ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் முபாரக்கின் நண்பர் சலீம் என்பவரும் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment