Header Ads



அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க வேண்டுகோள்



அமெரிக்காவில் ஹிந்து, சீக்கியர், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களைக் கண்காணித்து விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யிடம் அமெரிக்க எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் குழு விவாதம் நடத்தியது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜான் காராமெண்டி உள்பட 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். இது குறித்து ஜான் காராமெண்டி கூறியதாவது:

அமெரிக்காவில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் அராபிய அமெரிக்கர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருவது கவலையளிப்பதாக உள்ளது. அந்த சிறுபான்மை மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஜனநாயக நாட்டில் அவர்கள் அச்சத்துடன் வாழ்வது அமெரிக்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

இதைத் தடுக்க சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களைக் கண்காணிக்கவும் அவற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவும் எஃப்.பி.ஐ.யிடம் பரிந்துரை செய்துள்ளோம். இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையைத் தயார் செய்யுமாறு கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். இது குறித்து சட்டத்துறை உயர் அதிகாரிகளுக்கும் எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே கடிதம்  அனுப்பப்பட்டுள்ளது.

2001 செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் 2,977 பேர் உயிரிழந்ததை அமெரிக்கர்கள் மறக்கவில்லை. அதன் பிறகே சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்பீர் சிங் என்ற சீக்கியர் சுட்டுக் கொல்லப்பட்டதையும் நாங்கள் மறக்கவில்லை. அவரைக் கொன்றவரிடம் விசாரணை செய்தபோது பல்பீர் சிங்கை ஒரு முஸ்லிம் என நினைத்து சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்திருக்கிறார்.

இது போன்ற செயல்கள் நம்மிடையே பிளவை ஏற்படுத்திவிடும். ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அமெரிக்காவில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. நியூயார்க்கிலும் சான் பிரான்சிஸ்கோவிலும் வாழும் 10 சதவீத ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தாங்கள் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக நினைக்கிறார்கள். 

எனவே சிறுபான்மையினருக்கு எதிரான குற்றப்பிரிவு சட்டங்களை, திருத்தத்துடன் கடுமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

No comments

Powered by Blogger.