'ஒஸாமாவின் வபாத்திற்கு பின் அல்ஹைதா வலுவாக உள்ளது'
ஒஸாமா பின் லேடனின் மறைவுக்கு பின் அல் காயிதா பலவீனமாக உள்ளது என்று கருதுவது தவறு என்றும் உண்மையில் ஒஸாமா பின் லேடனுக்கு பின் அல் காயிதா வலுவாக உள்ளதாகவும் அரபு புரட்சி அதற்கு முக்கிய காரணம் என்றும் அல்காயிதா தொடர்பான புத்தகங்கள் எழுதுவதில் நிபுணரான அப்துல் பாரி அத்வான் துபாயில் நடந்த எமிரேட்ஸ் இலக்கிய விழாவில் கூறினார்.
சிரியாவில் தற்பொழுது அரசுக்கு எதிராக நடைபெறும் போரில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்கும் ஆயுதங்கள் அல் காயிதாவுக்கு கிடைக்க கூடும் என்பதே அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் அச்சமாக உள்ளதாக குறிப்பிட்ட அத்வான் சிரியா வழியாக அல் காயிதா தங்களை தாக்கலாம் என்று இஸ்ரேல் பயப்படுவதாக கூறினார்.
1989லிருந்து அல் குத்ஸ் அல் அரபி பத்திரிகையின் ஆசிரியராக உள்ள அத்வான் பல சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு மத்திய கிழக்கு தொடர்பான ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்காயிதாவின் ரகசிய வரலாறு, பின் லேடனுக்கு பின்னால் என பல புத்தகங்களையும் எழுதியுள்ள அத்வான் ஆப்கனின் தோரா போரா மலையில் பின் லேடனுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின் லேடன் காலத்தில் அல் காயிதாவுக்கு ஒரே முகவரி தான் என்று கூறிய அத்னான் பின் லேடன் மறைவுக்கு பின்னால் பிரமிட் அடிப்படையிலான கட்டமைப்பு இல்லாமல் ஒழுங்கற்ற வலைப்பின்னலாக இருப்பதே ஆபத்தானது என்று கூறினார். மேலும் ஒரு நாடு செயலிழந்து போவதே அல் காயிதா வளர்வதற்கான உரமாகும் என்பதால் சிரியா விவகாரத்தை இஸ்ரேல் உன்னிப்பாக கவனித்து வருவதாக அத்னான் கூறினார்.
ஒரு தலையை வெட்டினால் ஐந்தாக வளரும் பூதத்தை போல் தற்போது அல் காயிதா ஒன்றாக இல்லாமல் ஆப்கன், சிரியா, ஏமன், ஈராக், சிரியா, உஸ்பெகிஸ்தான், சீனா என வெவ்வேறு தலைகளாக காட்சியளிக்கிறது என்றார். சிரியாவில் போராடும் குழுக்களிலும் பல அல் காயிதாக்கள் இருக்கலாம் என்றும் அவை அல் நுஸ்ரா என புதுப்பெயர்களில் வரலாம் என்றும் அத்னான் கூறினார்.
முன்பிருந்ததை போல் அல் காயிதாவில் சேருவதற்கு முன்னால் ஒருவர் சித்தாந்த வகுப்பில் சேர வேண்டியதில்லை என்றும் இணையத்தை கையாள தெரிந்த யாரும் அல் காயிதாவில் சேர முடியும் என்றும் கூறிய அத்னான் பலர் நினைப்பது போல் அல் காயிதாவில் படிப்பறிவற்றவர்கள் இல்லை என்றும் ஒசாமாவை சுற்றிலும் அரபுலகின் சிறந்த மூளைகள் இருந்தன என்றும் கூறினார். inneram
Post a Comment