சிரியாவில் இந்திய ஜிஹாத் போராளிகள்...!
சிரியாவில் அதிபர் பஷர் அசதுக்கு எதிராக அரசு எதிர்ப்பு போராளிகள் அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவின் ஆதரவோடு போராடி வருகின்றனர். இப்போராளிகளில் இந்திய ஜிஹாதிகளும் இருப்பதால் இந்தியா இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வருகை தந்துள்ள சிரிய அதிபர் பஷரின் அரசியல் ஆலோசகர் பவுத்தைனி ஷாபான் கூறியுள்ளார்.
சிரிய அதிபர் பஷரிடமிர்ந்து சிறப்பு தூதராக இந்திய பிரதமருக்கு செய்தி கொண்டு வந்துள்ள ஷாபான் வரவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கூடுதல் கவனம் எடுத்து ரஷ்யா மற்றும் சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார். சிரிய அரசுக்கு எதிராக ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இரண்டு நாடுகளும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஷாபான் சிரியாவில் அரசுக்கு எதிராக 38 நாடுகளை சார்ந்த போராளிகள் போராடுவதாகவும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட இங்கிலாந்து போராளிகளும் அதில் உள்ளதாக கூறினார். மேலும் சிரியாவில் அசதுக்கு எதிரான போரை துருக்கி மற்றும் கத்தர் நாடுகள் தாம் நடத்துவதாகவும் சவூதி அரேபியா அதற்கு உதவுவதாகவும் ஷாபான் கூறினார்.
மேலும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா முழுமையும் இக்வானுல் முஸ்லீமின் ஆட்சியை நிலை நாட்ட துருக்கி முயல்வதாக குற்றம் சாட்டிய ஷாபான் மத்திய கிழக்கில் முஸ்லீம் உலகை இன ரீதியாக துண்டாட அமெரிக்கா முயற்சி செய்வதாகவும் கூறினார். இந்தியாவிலுள்ள மசூதிகளுக்கு நிதி உதவி செய்யும் நாடுகளால் தான் சிரியா இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டது என்று கூறிய ஷாபான் இந்தியா இவ்விஷயத்தில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். inneram
Post a Comment