Header Ads



இடியப்பச் சிக்கலான ஹலால் பிரச்சினை


ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கடந்த திங்களன்று புதிய தீர்வொன்றை முன் வைத்தது.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் காணப்பட்ட இணக்கப்பாட்டின்படியே ஜம்மியத்துல் உலமா இத்தீர்மானத்துக்கு வந்துள்ளது. நாட்டின் பிரதான மூன்று பௌத்த நிகாயாக்களின் தேரர்களதும் வணிகக் கழகத்தினதும் ஆசிர்வாதத்துடனே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக இது தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் மகாநாட்டில் பௌத்த முஸ்லிம் சமயத் தலைவர்கள் தெரிவித்தனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா எடுத்த இத்தீர்வானது நாட்டு நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி இச்செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்தார். நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த உரிமையை இழந்துள்ளனர். இந்த தீர்வு முஸ்லிம்களின் பெரும்பான்மையானோரைத் திருப்திப்படுத்தவில்லை என்பது உண்மை.

எவ்வாறான போதும் நாட்டை முதன்மைப்படுத்தி நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டே ஜம்மியத்துல் உலமா இத்தீர்மானத்துக்கு வந்துள்ளது. இந்த நாட்டின் பல்வேறு நெருக்கடியான கட்டங்களில் எமது மூதாதையர்கள் நாட்டை முன்னிலைப்படுத்தியே தீர்மானங்களை எடுத்துள்ளனர். சுதந்திரப் போராட்டமாக இருக்கலாம், மற்றும் வடக்கு, கிழக்கு யுத்தமாக இருக்கலாம், இதன் போதெல்லாம் முஸ்லிம் சமூகம் நாட்டை முதன்மைப்படுத்தியே தீர்மானங்களை எடுத்ததற்கு வரலாறு சான்று பகர்கின்றது.

ஜம்மியத்துல் உலமா இத்தீர்மானத்தை எடுப்பதற்கு முக்கிய பங்களிப்புச் செய்தவர்கள் வர்த்தக சமூகமும் இலங்கை வணிகர் கழகமும் இதில் முக்கியம் வகிக்கின்றன. இலங்கை வணிகர் கழகப் பிரதிநிதிகள் ஹலால் சான்றிதழுக்கு அறவிடும் கட்டணம் மிகக் குறைவானது என செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இருந்து வருகிறது. ஹலால் சான்றிதழுக்கு கூடுதலான கட்டணம் அறவிடப்படுகின்றது என்ற பிரச்சாரத்தை கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் தெரிவித்து வந்தன. இது தொடர்பாக நேற்றுவரை மௌனம் காத்த வர்த்தக சமூகம் இந்தப் பிரச்சினை புற்றுநோய் போன்று நாடெல்லாம் பரவிய பின்பே பேசத் தொடங்கியுள்ளது.

ஹலால் சான்றிதழ் மூலம் ஆகக் கூடுதலான வருமானத்தை இந்த நாட்டு பெரும்பான்மை இனங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களே சம்பாதித்து வருகின்றன. இலங்கையின் ஹலால் வர்த்தகம் மூலம் ஒரு பில்லியன் ரூபா வருமானத்தை வருடாந்தம் சம்பாதித்து வருகின்றது.

இந்தப் பின்னணியிலே வர்த்தக சமூகம் தலையிட்டு தமக்குச் சாதகமான ஒரு முடிவினை எடுப்பதற்கு துõண்டியுள்ளது. வர்த்தக சமூகத்தினர் இந்த விடயத்தில் நேர்மையாக இருந்தால் ஆரம்பத்திலே பகிரங்கமாக தமது நிலைப்பாட்டினை வெளியிட்டிருக்கலாம். வெண்டோல் நிறுவன உரிமையாளரைத் தவிர்ந்த வேறு எவருமே ஹலால் நிறுத்தப்படுவதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி பேசவில்லை.

எவ்வாறான போதும் ஜம்மியத்துல் உலமா முன்வைத்துள்ள புதிய தீர்வு குறித்தும் பொதுபலசேனா மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்றன மாறாகவே கருத்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இப்பிரச்சினை இப்போது இடியப்பச் சிக்கலாக மாறியுள்ளது.

அரசாங்கம் இதுவரை இந்தப் பிரச்சினை தொடர்பாக வாய் திறக்காமல் இருக்கின்றது. ஏனைய அமைப்புக்களுக்கு நாளுக்கு நாள் ஒவ்வொரு கருத்தைத் தெரிவிக்க இடமளித்து விட்டு அரசு பார்த்துக் கொண்டிருக்கின்றது போன்ற ஒரு நிகழ்வினையே காணக்கூடியதாகவுள்ளது. எனினும் அமைச்சரவை நியமித்த குழு இயங்குகின்ற வேளை மற்றும் பலர் இந்த விடயத்தில் தலையிட்டு இதனை இடியப்பச் சிக்கலாக்கியுள்ளார்கள் என்றே கூறத் தோன்றுகின்றது.

அரசு இந்த விவகாரம் தொடர்பாக இனியும் அமைதி காக்காது தமது நிலைப்பாட்டை பகிரங்கமாகத் தெரிவிக்க முன்வர வேண்டும். சில சக்திகளின் பந்தாட்டத்துக்கு ஹலால் விவகாரம் விடப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைவது ஆயிரம் வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் உறவாகும்.

தீர்மானங்களை எடுக்கும்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் அவசரப்படாது நிதானமாகச் சிந்தித்து சமூகத்துடன் கலந்துரையாடி தீர்வுகளை எடுக்க வேண்டும். எடுக்கும் தீர்மானங்கள் சமூகத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகவோ உரிமைகளை இழப்பதாகவோ அமையக் கூடாது.

முஸ்லிம் சமூகம் தொடர்பான தீர்மானங்களை ஜம்மியத்துல் உலமாவுக்கோ மற்றும் அமைப்புக்களுக்கு மட்டுமோ எடுக்க முடியாது. அதற்கான சமூக ஆணை யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதனை மனதில் வைத்துக் கொண்டே சமூக அமைப்புக்கள் செயற்படுவது அவசியமாகும்.

சமூகம் தொடர்பான முக்கிய தீர்மானங்களை எடுக்கும் உயர் சபை ஒன்று உருவாக்கப்படும் வரை சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகத் தீர்மானங்களை எடுக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளோ முஸ்லிம் அமைப்புக்களோ தமது பணி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை உணர்ந்து செயற்படுவது அவசியமாகும்.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. We consider this is a unwise delicious of acju

    ReplyDelete
  3. i feel from this article or essay, muslim council had not call for this meeting for take decision, so essayer find faults from the acju decision am i correct ? for me we throw our egoism for this matter, plz plz... try to find the way to bring up our society in one roof with one flag...

    ReplyDelete

Powered by Blogger.