சவூதி அரேபியாவில் ஊசி ஏற்றப்பட்டு துன்புறுத்தப்பட்ட இலங்கை பெண்
(AD)சவுதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாகச் சென்று ஊசி ஏற்றப்பட்டு துன்புறுத்தலுக்கு இலக்கான பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மகவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் சவுதி அரேபியாவில் இந்த கொடுமைகளை அனுபவித்துள்ளார்.
குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர், அப்பெண்ணின் இரு கைகள் மற்றும் கால்களில் ஊசி போன்ற கம்பிகளை ஏற்றி துன்புறுத்தியுள்ளார். பின்னதாக அவரே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார். அங்கு அவ் ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் இம்மாதம் 13 ஆம் திகதி திடீரென இலங்கை வந்துள்ளார். மகவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதான இவர் குருநாகல் பிரதேசத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.
இந்நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பணிப் பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்லும் பெண்கள் பலர் கடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கு உள்ள நிலையில் நாடுதிரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment