கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளருக்கு ஓர் திறந்தமடல்
(அபூஇல்மா)
தற்போது கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் தவணை ஒன்றிட்கான பரீட்சைகள் நடாத்தப்படுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுவருகின்றன. பாடசாலை மட்டக்கணிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தவணைப் பரீட்சைகள் நடைபெறாது எனவும், முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.மேல்மாகாணத்தில் தவணைப்பரீட்சை நடாத்திய அதிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட செய்தி ஒன்று பத்திரிகையில் வெளியானதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
எது எப்படி இருந்தபோதும் ஒரு தெளிவு இல்லாத நிலையில் மீண்டும் தவணைப்பரீட்சைக்குள் பல பாடசாலைகள் விழுந்துள்ளன.பரீட்சைகளில் காணப்படும் குறைபாடுகளைக்களைவதற்காகவே பாடசாலை மட்டக்கணிப்பீடு அறிமுகம் செய்யப்பட்டது.என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மாகாணக்கல்விப்பணிப்பாளர்,வலயக்கல்விப்பணிப்பாளர் போன்றோர் மதில்மேல் பூனைபோல் உள்ளனர். பரீட்சை நெருங்கிவிட்டால் போதும் கல்வி வியாபாரிகளான தனிநபர்களும்,குழுக்களும் பாடசாலைக்குள் படையெடுக்கின்றனர். 10-15 வீதம் தருகிறோம் எம்மிடம் பரீட்சைத்தாள்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனச்சலுகைகளை அள்ளி வீசுகின்றனர்.இதில் பல பாடசாலைகள் வினாத்தாள்களின் தரத்தையோ மாணவர்களின் எதிர்காலத்தையோ பற்றி எவ்வித சிந்தனையுமின்றி வீதக்குழியில் விழுந்துள்ளன.
இதில் சில கல்வியதிகாரிகளும் செல்வாக்குசசெலுத்துவதைக் காணமுடிகிறது. இப்படியான பரீட்சைகளை நடாத்துவதன் முலம் சில தனி நபர்களும்,குழுக்களும் பல இலட்சம் ருபாய்களை ஒவ்வொரு கல்வித்தவணையிலும் பெற்றுக்கொள்கின்றனர்.இவ்வாறான பரீட்சைத்தாள்களை மாகாணக்கல்விப்பணிமனை அல்லது வலயக் கல்விப்பணிமனைகள் தமது வளவாளர்களைக்கொண்டு தயாரித்து விநியோகிப்பதன்முலம் பெருந்தொகைப்பணத்தை வருமானமாகப் பெற்றுக்கொள்ளலாம். இப்பணத்தை கிழக்குமாகாண மாணவர்களின் கல்வி மேன்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஓவ்வொரு பாடசாலையும் தாம் தாம் விரும்பியவாறு விரும்பியவர்களிடமிருந்து வினாத்தாள்களைப்பெற்று பரீட்சை நடாத்துவதால் பரீட்சைத்தரத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.சில பரிட்சை வினாத்தாள்கள் கடந்தகாலங்களில் நடாத்தப்பட்ட வினாத்தாள்களில் சிறு திருத்தத்துடன்வெளியாவதையும் நிருபிக்கலாம்.
ஆகவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இவ்வாறு பரீட்சை நடாத்துவோரின் கல்வித்தகைமைகள்,தொழிற்தகைமைகள்,தொழில் அந்தஸ்துகளையும் ,இவர்களின் பரீட்சை வினாத்தாள்களையும் திரட்டி பகுப்பாய்வு செய்வதுடன், இவ்வாறு பரீட்சை நடாத்த சட்டப்படி அங்கீகாரம் உள்ளதா? என்பதையும் பெற்றோர்களுக்கு ஊடகங்கள் வாயிலாகத்தெரியப்படுத்தவும்.
இவ்வாறான பரீட்சைகள் நடாத்தமுடியுமென்றால் அவற்றை மாகாணக் கல்வியமைச்சால் நடாத்துமாறு வேண்டிக்கொள்வதுடன், மாணவர்களிடம் அறவிடப்படும் பரீட்சைக் கட்டணங்களுக்கு பாடசாலையால் கட்டாயம் பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படவேண்டும் என்பதையும் சுற்றுநிருபங்கள் முலம் வலியுறுத்துமாறும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
சில வியாபாரிகளான ஆசிரிய, அதிபர்களினால்தான் பாடசாலைகளில் நிர்வாகத்தில் ஊழலும், ஒழுக்கச் சீர்கேடுகளும், நிறைந்து காணப்படுகிறது.
ReplyDeleteபோதாததற்கு அரசியலினால் தலையீடுகளும், பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும், ஏன் பொதுப் பரீட்சைகளில் அரசியல் வாதிகளின் பிள்ளைகளுக்கு ஆள் மாறாட்டத்திற்க்கு உதவிய ஆசிரியர்கள் இன்றும் சில பாடசாலைகளின் அதிபர்களாக உள்ளனர்( உதாரணத்துக்கு - அக்கரைப்பற்றில்).
நேர்மையை கற்றுக்கொடுக்க வேண்டியவர்கள் சலுகைகளுக்கு வாலாட்டும்போது, உம் திறந்த மடலுக்கும் ஓர் இடமாற்றம் வரலாம் .
தம்பி சொல்லுறதுள உண்ம கிடக்குத்தான் ஆனா கல்விப் பணிமணைகள் சோதினைகளை நடாத்தினா விழுங்கமாட்டாக என்று சொல்ல முடியாது. எல்லா மணைக்குள்ளயும் முதளைகள்தான் பாளி அடிச்சிக் கிடக்கு. ஆக்களயே விழுங்கிற சாதிகள்...
ReplyDeleteஉங்கள் கருத்து நல்லதுதான். ஆயினும் மாகாண கல்வி திணைக்களத்தின் பொறுப்பில் பரிட்சைகளை நடத்தும் பொறுப்பை விட்டு வைத்தால் மட்டும் நீங்கள் எதிர் பார்க்கும் வீதக் கொள்ளை நின்று விடுமா என்ன? மட்டக்களப்பிலோ அல்லது திருகோண மலையிலோ உள்ள அட்சகக் காரர்களும், அலுவலர்களும் சேர்ந்து வீதத்துக்குள் நீதமில்லாமல் மூழ்கிய வரலாறுகள் உங்கள் திறந்த மடலில் மூடிக் கிடக்கின்றனவே.
ReplyDeleteஐயா, அபூஇல்மா அவர்களே உங்கள் திறந்த மடல் உங்கள் உண்மைப் பெயரைக் கூட திறந்து காட்டி இருப்பதை எல்லோரும் அறிவர். நீங்களே எழுதி நீங்களே பரீட்சை நடாத்துவதற்கு ஒரு முஸ்தீபா எடுக்குறீர்கள்? இடையிலே தொலைந்து போன பதவி மீண்டும் தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படி பரீட்சை நடாத்துவதாக இருந்தால் மாகாணத்தின் வளவாளர்களை ஒன்று திரட்டுங்கள்; வினாத்தாள்களை செவ்வை பாருங்கள்; அதன் மென் பிரதிகளை zip பண்ணி வலயங்களுக்கு அனுப்புங்கள். வலயங்கள் அச்சிட்டு பரீட்சைகளை நடாத்தட்டும். சுற்று நிருபங்களையும் கூடவே அனுப்பி வையுங்கள்.