சாய்ந்தமருதுவில் புதிய மையவாடியொன்று அமைத்துத் தருமாறு கோரிக்கை
(ஷெரீப்)
சாய்ந்தமருது பிரதேசத்தில் புதிய மையவாடியொன்று அமைத்துத் தருமாறு தாம் விடுத்த கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறையின்றிச் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கல்முனை மாநகர சபைப் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள 16ஆம், 17ஆம் மற்றும் பொலிவேரியன் கிராம மக்கள் தமது ஜனாஸாக்களை மாளிகைக்காடு கிராமத்திலுள்ள மையவாடியிலேயே இதுவரை காலமும் நல்லடக்கம் செய்து வருகின்றனர். சாதாரண இடவசதியுடனுள்ள இம்மையவாடியில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் வேளைகளில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாஸா நல்லடக்க நிகழ்வுகளில் எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் தமது பணிகள் நிறைவேற வேண்டும் என சாய்ந்தமருது 16ஆம், 17ஆம் மற்றும் பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்பார்ப்பதாகவும், தமது பிரதேசத்திலேயே விசாலமான மையவாடியொன்றினை அமைப்பதற்கான போதிய இடவசதிகள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எவ்வித பயன்பாடுமின்றி தரிசு நிலமாகக் காணப்படும் சாய்ந்தமருது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் தமக்குரிய மையவாடியினை அமைத்துத் தருமாறு இங்குள்ள பொதுநல அமைப்புக்களால் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் காலங்கடத்தப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொதுமக்கள் முறையிடுகின்றனர்.
Post a Comment