கிழக்கு மாகாண விவசாயிகளை காப்பாற்றுங்கள்..!
60 வயதைக்கடந்த விவசாயிகளுக்கான ஓய்வூதியக்கொடுப்பனவு கடந்த ஒரு வருடமாக வழங்கப்படாமல் இழுத்தடிப்பது நாடடின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய அநியாயமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது பற்றி முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, கமக்காரர் ஓய்வூதிய திட்டத்துக்கமைய 20, 22 வருடங்களாக ஒழுங்காக தவணைப்பணம் கட்டி வந்த விவசாயிகள் தமது 60 வயதை கடந்த பின் தமக்கு ஓய்வூதியமாக கிடைக்கும் என நம்பிய ஓய்வூதியப்பணம் கடந்த ஒரு வருடமாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.
விவசாயிகளுக்கான ஓய்வூதியப்பணமாக அவர்களின் வயதுக்கேற்ப ஆயிரம் ரூபா முதல் ஆயிரத்து நானூறு ரூபா வரை தபாற்கந்தோர்கள் மூலமாக ஒவ்வொரு மாதமும் 25ந் திகதிகளில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2012 ஜனவரி முதல் இப்பணம் வழங்கப்படாமையால் ஏழை வயோதிப விவசாயிகள் பாரிய துன்பங்களுக்கு முகம் கொடுப்பதாக எமது கட்சியின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த அநியாயம் பற்றி தவணைக்கட்டனம் எடுத்தோர் மற்றும் விவசாய அமைச்சர் உட்பட நாட்டின் ஜனாதிபதிக்கும் அறிவித்தும் எதுவித நடவடிக்கைகளும இதுவரை எடுக்கப்படவில்லை என அம்மக்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக அதிக விவசாயிகள் வாழும் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச விவசாயிகள் பெரும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.
இத்தனைக்கும் சம்மாந்துறை பிரதேச சபை என்பது ஆளும் சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் தவிசாளர் ஜனாதிபதியின் இணைப்பாளராகவும் இருக்கின்றார். அத்துடன் அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சம்மாந்துறையில் அமைச்சர் ஒருவரும் இருக்கின்றார். அதன் தலைவர் அமைச்சரவை அமைச்சராகவும் இருக்கின்றார். மு. கா. வை சேர்ந்தவரே கிழக்கு மாகாண விவசாய அமைச்சராகவும் இருக்கின்றார். அதே போல் அமைச்சர் அதாவுள்ளாவின் கட்சிக்கு சம்மாந்துறையை சேர்ந்த உறுப்பினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக உள்ளனர்.
இவ்வாறு அரசுக்கு முட்டுக்கொடுக்கும் இத்தனை பரிவாளங்கள் இருந்தும் சம்மாந்துறை, மற்றும் கிழக்கு மாகாண ஏழை வயோதிப விவசாயிகள் உட்பட நாட்டின் அனைத்து விவசாயிகளும் எதிர் நோக்கும் மேற்படி ஓய்வூதிய பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்காமல் அதனையும் அரசாங்கம் சுருட்டி வைத்துக்கொண்டிருப்பது மிகப்பெரிய அநியாயமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment