Header Ads



பௌத்த பிக்குகள் மீது தாக்குதுல் - ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது


சில தினங்களுக்கு முன் பௌத்த பிக்குகள் மீது தென்னிந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. 

சமயத் தலைவர்கள் மீது தாக்குதல் நடாத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத தரக்குறைவான செயலாகவே நாம் கருதுகின்றோம். இத்தகைய தாக்குதல்களை எந்த மதத்தை சார்ந்தவர்களும் நியாயமானதாகக் கருத மாட்டார்கள் என்றும் நாம் நம்புகின்றோம்.

மாற்று மதத்தினரை மதித்து நடக்க வேண்டும் என்பது அனைத்து மதங்களும் போதிக்கின்ற விடயமாகும். மதத் தலைவர்கள், அப்பாவி பொது மக்கள் போன்றோர் மீதான தாக்குதல்களினால் சமூகங்களுக்கிடையில் விரிசல் நிலை ஏற்படுவதையிட்டு நாம் மிகுந்த கவலையடைகின்றோம். இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர். இவ்வாறான செயற்பாடுகளினூடாக நாடுகளுக்கும், சமூகங்களுக்குமிடையான பிளவுகள் அதிகரிக்குமேயன்றி நன்மை எதுவும் விளையப் போவதில்லை.

குறிப்பிட்டதோர் பிரிவின் மீதான வெறுப்பின் காரணமாக அவர்கள் மீது அத்துமீறி விட வேண்டாம் என்று அல்-குர்ஆன் போதிக்கின்றது. குறிப்பாக, யுத்தத்தின் போது கூட வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் மத குருக்களை இம்சிக்கலாகாது என்பது நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த வழிகாட்டலாகும். இந்நிலையில் இலங்கைக்கெதிரான ஆத்திரங்களை வெளிப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அப்பாவி மக்களை வெளிநாடுகளில் தாக்குதல்களுக்கு உட்படுத்துவது உள்நாட்டில் இனப்பிரச்சினையை தொடர்ந்தும் வளர்ப்பதாகவே அமையும்.

தென்னிந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட குறித்த, மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டிக்கும் அதேவேளை அவ்வீனச் செயலோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த ஆவண செய்ய வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்திய அரசைக் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறே உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ மதங்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் கெடுபிடிகளையும், விசமப் பிரச்சாரங்களையும் தடுத்து நிறுத்தவும், விசமிகளுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவண செய்தல் வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
தேசிய பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

1 comment:

  1. அவ்வாறே உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ மதங்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் கெடுபிடிகளையும், விசமப் பிரச்சாரங்களையும் தடுத்து நிறுத்தவும், விசமிகளுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவண செய்தல் வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.