Header Ads



இப்படியும் ஒரு சாதனை (படம் இணைப்பு)



மூன்று முறை சோப்பு, ஷாம்பு போட்டு ஒன்றரை லிட்டர் தண்ணீரில் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி குளித்து காட்டினார்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று ‘நீர் நாடி‘ விழா நடந்தது. இதில், தர்மபுரியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கோவிந்தசாமி (29) பார்வையாளர்கள் முன்னிலையில் குறைந்த அளவு தண்ணீரில் குளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தரையில் சாக்கு விரித்து, ஜட்டியுடன் குளிக்க தொடங்கிய கோவிந்தசாமி, தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி நனைத்து, உடல் முழுவதும் சோப்பு போட்டு, தலைக்கும் ஷாம்பு போட்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றினார். இவ்வாறு 3 முறை சோப்பு போட்டும், 3 முறை ஷாம்பு போட்டும் ஒன்றரை லிட்டர் தண்ணீரில் 10 நிமிடத்தில், உடலில் சோப்பு நுரை இல்லாதவாறு சுத்தமாக குளித்து முடித்தார். 

கோவிந்தசாமியை பார்வையாளர்கள் பாராட்டினர். கோவிந்தசாமி கூறியதாவது: நான் 5ம் வகுப்பு வரை படித்தேன். படிக்க வசதி இல்லாததால் ஆடு மேய்க்க சென்றேன். ஆடு மேய்க்கும் போது காட்டில் குடிக்க தண்ணீர் கிடைக்காது. 2 லிட்டர் தண்ணீர் எடுத்து செல்வேன். அதை குடிக்க பயன்படுத்திய நான், வெயில் நேரத்தில் அந்த தண்ணீரை உடலில் ஊற்றி குளிக்கவும் செய்தேன். கிராமங்களில் குடிநீர் வீணாக ஓடுவதை பார்த்தால் எனக்கு வேதனையாக இருக்கும். முதலில், பொதுமக்கள் முன்னிலையில் 3 லிட்டரிலும், பின்னர் 2 லிட்டரிலும் குளித்து காட்டினேன். தற்போது ஒன்றரை லிட்டரில் குளித்துள்ளேன். 1.2 லிட்டரில் குளிக்க பயிற்சி எடுத்து வருகிறேன். தண்ணீர் சிக்கனம் தொடர்பாக இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்பேன். எனது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சித்து வருகிறேன்.

No comments

Powered by Blogger.