அட்டாளைச்சேனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
(ரீ.கே. றஹ்மத்துல்லா)
தேசிய மட்டத்தில் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வுத் திட்டத்தினை சமூக சேவை அமைச்சு அதீத அக்றையுடன் செயற்படுத்தி வருகின்றது. இதற்காக பிரதேச மட்டத்திலுள்ள சமூக சேவைப் பிரிவின் கீழ் செயற்படுத்தப்பட்டுவரும் சமூகப் பராமரிப்பு நிலையங்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தெரிவித்தார்.
சமூக சேவை அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான வீடமைப்புத்திட்டம் மற்றும் சுயதொழில் முயற்சி ஆகியனவற்றிக்கான காசோலை வழங்கலும் அடிக்கல் நடும் நிகழ்வும் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.எம். அமீன் தலைமையில் நேற்று மாலை(14) நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதேச செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கிராம மட்டத்தில் சரியான தகவல்களின் மூலம் இனம் காணப்படும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பினையும், சேவையினையும் பெறும் வகையிலும், அவர்கள் சமூகத்தின் மத்தியில் சுமையாகக் கருதப்படாமல் அவர்களும் இந்நாட்டின் வளங்களாகக் கருதப்பட்டு கிராமமட்திலான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக சமூக சேவை திணைக்களம் புதிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
வடக்குக் கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழல் மற்றும் விபத்து போன்ற காரணங்களாலும், பிறப்பாலும் அங்கங்களை இழந்தவர்கள் அல்லது செயலிழந்தவர்கள் உடல்ரீதியாகப் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இவர்களில் அதிகமானவர்கள் உளரீதியான பாதிப்புக்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருப்பதனையும் அறிய முடிகிறது. இதற்கான மாற்றுச் செயற்திட்டமாக சமூக சேவை அமைச்சின் உளவள ஆலோசகர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊடாக பாதிப்படைந்தவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இவர்களுக்கான சுயதொழில் உதவி, உபகரணங்கள் வழங்குதல், வைத்திய செயற்பாடுகள், வீடமைப்பத்திட்டம் போன்ற உதவிகளும் சமூகப் பராமிரிப்பு நிலையத்தினூடாக ஒருங்கிணைக்கபட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் ஹனிபா மேலும் தெரிவித்தார்.
Post a Comment