முஹம்மது நபி அறபாவில் நிகழ்த்திய உரையை மதிக்கின்றேன் - பிரதம நீதியரசர்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
25 ஆயிரம் சிறிய பரப்பளவு கொண்ட எமது சிறிய நாட்டிலேயே நாம் அனைவரும் வாழவேண்டியுள்ளது. வெளிநாடுசென்று வாழ்வது சாத்தியமற்றது. எனவே நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார விருத்திக்கும் எல்லோரும் பங்களிப்புச் செய்ய முன்வரவேண்டும். இதன் மூலமே நாடு முழுமையான முன்னேற்றத்தைக் காணும்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்த விசேட கூட்டத்தில் சிறப்புரையாற்றுகையில் கூறினார்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் வினோபா இந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம நீதியரசர் தொடர்ந்து கூறுகையில் சிறைக்கைதி ஒருவரைத் தடுத்துவைப்பதற்கு அரசாங்கம் நாளொன்றுக்கு 720 ரூபாவைச் செலவிடுவதுடன் இக்கைதியின் குடும்பப் பொருளாதாரம் முடக்கப்படுவதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கான பங்களிப்பும் தடுக்கப்படுகின்றது.
தடுப்புக்காவல் என்ற சொல்லுக்கு நீதித்துறையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எனவே முடிந்தளவு பொலிசாருக்கும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிக்கும் உள்ள பெரும் பொறுப்பினையுணர்ந்து பொலிஸ் நிலைய மட்டத்திலேயே பிணக்குகளையும், குற்றங்களையும் இலகுவாகக் குறைப்பதற்கு மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கும் கூடுதல் ஆழுமை கொண்டுள்ள பிதிப்பொலிஸ்மா அதிபர் செயல்படவேண்டும். இதற்கமைய குற்றங்களை விசாரித்து பொலிஸ் நிலையங்களிலேயே பிணை வழங்குவதற்கு கவனஞ்செலுத்தவேண்டும்.
சட்டத்தரணிகளைப் பொறுத்தவரையில் மக்களுக்குப் பணியாற்றவேண்டும் என்ற சேவையை உணர்ந்து செயல்படவேண்டும். சட்டத்தைப் பாதுகாக்கக்கூடியவர்கள் சட்டத்தரணிகள் என்ற முழு நம்பிக்கையிலேயே பொதுமக்கள் தமது வழக்குகளைச் சட்டத்தரணிகளிடம் ஆற்றுப்படுத்துகின்றனர். இந்த நம்பிக்கைக்கு மாறாகப் பிழையான வழியில் வழக்குகளை எடுத்துச்சென்று மக்களுக்குத் தீங்கிழைக்கக்கூடாது. இதன் மூலமே தொடர்ச்சியான நம்பிக்கையை மக்களிடமிருந்து பெறமுடியும்.
பிரதம நீதியரசர் என்ற பதவியை பொதுமக்களாலேயே எனக்குக் கிடைத்தது. இதனால் ஒரு சாதாரண குடிமகனாகவே என்னைக்கருதி நீதியைக்காப்பாற்றுவதற்கு மக்களுடன் நல்லுறவை நீதித்துறையில் வளர்த்து செயல்பட விரும்புகின்றேன். நபிகள் நாயகம் (அறபாவில் நிகழ்த்திய உரையை நான் மதிக்கின்றேன்) அடிமைத்தனத்தையும் கர்வம் கொண்ட மேலாதிக்கத்தையும் நான் காலில் போட்டு மிதிக்கின்றேன் எனக் கூறிய கருத்தினை நினைவுபடுத்துகிறேன். எனவே நீதிபதிகளைப் பொறுத்தவரையில் தான் நீதிபதி என்ற கர்வம் கொண்டு செயல்படுவதை நான் முழுமையாக வெறுக்கின்றேன்.
நாட்டின் அபிவிருத்திக்கு நீதித்துறையில் செயல்படும் எல்லோரும் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும். என்னைப்பொறுத்தவரையில் வாக்குறுதிகள் எதனையும் இங்கு வழங்குவதற்கு நான் விரும்பவில்லை. எனினும் விரைவில் நீதித்துறையில் திருப்புமுனை ஒன்று ஏற்படும் என்று எல்லோரும் எதிர்பார்க்கமுடியும்.
சாதாரன வயலில்வேலை செய்யும் தொழிலாளியையும் நீதித்துறை சமமாகக் கருதவேண்டும். இதில் ஜேசுநாதர் அருளிய உன்னைப்போல் அனைவரையும் நேசி என்ற சகோதரத்துவம் மனிதத்துவத்தை மதிக்கும் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். எனக் கூறினார் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்.
=
ஒங்களுக்குத் தான் அரபா உரை எல்லாம் தெரியும். எங்க சமுதாயத்தில் அநேகருக்கு சினிமா ஸ்டார் உரைகள் தான் தெரியும். உறங்கும் சமுதாயம்...
ReplyDelete