இலங்கையை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் - சீனா திட்டவட்டம்
இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க தமது நாடு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும், உதவிகளை வழங்கும் என்றும் மகிந்த ராஜபக்சவிடம், சீனாவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து நேற்றுக்காலை கொழும்பு திரும்பிய மகிந்த ராஜபக்ச, சீனாவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக் தெரிவித்தார்.
இதன்போது இலங்கையின் தேசிய இறையாண்மை மற்றும் பூகோள ஒருமைப்பாடு குறித்த விவகாரங்களில் சீனா தொடர்ந்தும் உறுதியான ஆதரவை அளிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, சுதந்திரம், இறைமை, பூகோள ஒருமைப்பாடு, என்பனவற்றைப் பாதுகாப்பதற்கு சீனா உறுதியான ஆதரவை அளிக்கும் என்றும், சீனாவின் இயல்புக்கேற்ற வகையில் இலங்கைக்கு தவிகளை வழங்க விரும்புவதாகவும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கத்தைக் குறைக்கும் நோக்கில், ஜப்பான் காய்களை நகர்த்தி வருகிறது. கடந்தவாரம் ஜப்பானுக்கு சென்ற மகிந்த ராஜபக்சவுடன், ஜப்பானியப் பிரதமர் நடத்திய பேச்சுக்களின் போது, இந்தியப் பெருங்கடலில், சிறிலங்காவுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாடு எட்டப்பட்டது.
இந்தநிலையிலேயே மகிந்த ராஜபக்ச இலங்கை திரும்பியவுடன் சீன அதிபரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார்.
Post a Comment