Header Ads



முஸ்லிம் எம்.பி.க்கள், உலமா சபை அவசர சந்திப்பு - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்மட்டக் குழு மற்றும் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மத்தியில் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருப்பதாக அமைச்சர் எம்.எச்.எம்.பௌஸி அவர்கள் அழைப்பு விடுத்ததையடுத்து மேற்படி சந்திப்பு நேற்று 2013.03.18 திங்கட் கிழமை மாலை தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாயல் மேல் மாடியில் நடைபெற்றது.

ஜம்இய்யாவின் உயர்மட்டக் குழு உலமாக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். ஹலால் விவகாரம் தொடர்ந்தும் அமைதியின்மைக்கு காரணமாக இருப்பதாகவும் இது சம்பந்தமான பூரண தெளிவையும் தீர்க்கமான முடிவையும் எடுப்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகவும் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கௌரவ அமைச்சர் எம்.எச்.எம் பௌஸி கூறினார்கள். 

இது சம்பந்தமாக அங்கு வருகை தந்திருந்தோர் பல்வேறு கருத்துக்களைக் கூறினர். ஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை முற்றாக நிறுத்தவேண்டும் என சிலர் வேண்டிக் கொண்டனர். ஜம்இய்யா தற்பொழுது எடுத்திருக்கும் முடிவு மிகச் சரியானது எனவே நாம் ஹலால் விவகாரத்தை விட்டு விட்டு அன்றாடம் உருவாகி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வையோசிப்போம் என்று மற்றும் சிலர் கூறினர். ஹலால் விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு சரியானதே எனினும் அதனை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கான ஏற்பாட்டை நாம் செய்ய வேண்டும் என்று வேறும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். 

ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் றிஷ்வி முப்தி அவர்கள் ஜம்இய்யா ஹலால் விடயமாக இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இத்தீர்மானம் எடுப்பதற்கான காரணங்களையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியதுடன் அமைச்சரவை உப குழுவின் முஸ்லிம் அங்கத்தவர்களோடு கலந்தாலோசித்து இணக்கம் கண்ட பிறகு ஹலால் விடயத்தில்  எடுக்கப்பட்ட இறுதித் தீர்மானத்தையும் தெளிவு படுத்தினார்கள். 

அவையாவன : 

1)            ஹலால் சான்றிதழைப் பெறும் நிறுவனங்கள் அவர்களது உற்பத்திப் பொருட்களில் ஹலால் சின்னத்தை கட்டாயம் பொறிக்க வேண்டும் என முன்னர் வேண்டப்பட்டிருந்தனர். ஆனால் அது இப்பொழுது அவர்களது விருப்பத்துக்கு விடப்படுகிறது.

2)            ஹலால் சான்றிதழ் வழங்குவதுதொடர்பான செலவுகளை ஜம்இய்யத்துல் உலமா சான்றிதழ் பெறும் நிறுவனங்களிடமிருந்தே அறவிட்டு இப்பணியைச் செய்து வந்தபோதிலும் இதனை இலவசமாகச் செய்ய ஜம்இய்யா இப்பொழுது முன்வந்துள்ளது. 

நேற்றைய கூட்டத்தில் (அதாவது 2013.03.18) பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்கள் ஏக மனதாக எடுக்கப்பட்டன.

1) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சம்பந்தமாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டை வர்த்தக சம்மேளனத் தலைவரிடமிருந்து உத்தியோக பூர்வ கடிதமொன்றைப் பெற்று அக்கடிதம் அமைச்சரவை உப குழுவிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். 

2) நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதோருக்கு எவ்வித சங்கடத்தையும் ஏற்படுத்தா வண்ணம் நல்லதொரு முடிவை அமைச்சர் எம்.எச்.எம்.பௌஸி அவர்களின் தலைமையில் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுத்தரல்  வேண்டும். 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் விடயத்தில் தங்களால் முடியுமான அனைத்து அர்ப்பணிப்புக்களையும் விட்டுக்கொடுப்புகளையும் செய்திருக்கின்றது.

முதலாவதாக : முஸ்லிம் நிறுவனங்களுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்குவதாகத் தீர்மானித்தது

இரண்டாவதாக: எழுபதுக்கு முப்பது என்ற விகிதாசார அடிப்படையில் ஹலால் சான்றிதழை வழங்கத் தீர்மானித்தது. 

மூன்றாவதாக : ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுச் செய்யுமாறு வேண்டிக் கொண்டது. 

நான்காம் கட்டமாக, மேற்படி தீர்மானத்தை எடுத்தது என்பதையும் ஜம்இய்யத்துல் உலமா பொது மக்களுக்கு இவ்விடத்தில் ஞாபகப் படுத்திக் கொள்கிறது. 

மேலும், அமைச்சர் பௌசி அவர்களது தலைமையில் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் கட்சிவேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டு எடுக்கின்ற எந்தவொரு முடிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றது என்பதையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது. 

அஷ்-ஷைக் எம்.எம் அஹ்மத் முபாறக்
தேசிய பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  

5 comments:

  1. முடிவுகள் நல்லதாகதான் இருக்கிறது ஆனால் அரசாங்கத்திடம் ஹலால் சான்றிதழ் வழங்க செல்வதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. அரசியல் புகுந்தது விட்டது இனி இருக்கும் ஹலால் முறையும் முற்றாக நிறுத்த படபோகுது.....பாருங்கள் சகோதரர்

    ReplyDelete
  3. ஜமிய்யதுல் உலமா என்னென்ன செய்யவேண்டுமோ அவைகளையெல்லாம் நல்லபடியாக செய்துவருகின்றது. நாம் செய்யவேண்டியது நமது மனம் விரும்பியோ விரும்பாமலொ ஜமிய்யதுல் உலமாசபைக்கு கட்டுப்படுவது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது. இது இலங்கையில் வாழும் அனத்து முஸ்லிம்களுக்கும் உரிய செய்தி.

    இரண்டாவது சொல்லவேண்டுமென்றால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மெளனம், இது மெளனமல்ல என்னவோ நடக்கின்றது அதன்காரணம் என்ன ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக நீங்கள் யாரும் குரல்கொடுக்காமல் இருக்கிறிர்கள் தற்போது நாட்டில் நடக்கும் இனவெறியர்களின் செயற்பாடுகளுக்கெதிராக எமது நாட்டிலுள்ள முஸ்லிம், இந்து, பெளத்தர்கள் அனைவரினது கண்டனங்களும் கவலைகளும் வெளிப்பட்டுள்ளன ஆனால் இதுவரைக்கும் ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பு வழங்கப்படவில்லை????

    ReplyDelete
  4. அரசியல் திட்டங்கள் ACJU வின் கன்காணிப்பின்கீழ் வருமிடத்து அது சிர்ந்ததொரு தீர்வாகவே அமையும் அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் முசஸ்லிம்களுக்குக்கிடைக்கும்.

    ReplyDelete
  5. Appe Anna saiyanum andru sollringa mr themamimma

    ReplyDelete

Powered by Blogger.