இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா, பொருளாதார தடை விதிக்காதாம்
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரின் போது, அரசபடையினரால் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்படி, அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,
அவர்கள் நடைமுறைப்படுத்தாத திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள் அனைத்துலக சமூகத்தின் சொல்லைக் கேட்க வேண்டும். உங்களுக்குத் தெரியும், நாம் முன்வைத்த தீர்மானத்தை வரவேற்று 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
தனது சொந்த மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலில் இன்னமும் நிறைவேற்றப்படாத விவகாரங்களுக்குப் பதிலளிப்பதற்கு இலங்கை அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவை,தீர்மானம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு நாம் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தோம். வொசிங்டனுக்கு வந்த மூத்த அதிகாரி உள்ளிட்டோரிடம், நாம் மிகத்தெளிவாகவே கூறியிருந்தோம். நீங்கள் முன்னே அடியெடுத்து வைக்காவிட்டால் நாம் இதேபோன்று மீண்டும் தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று அவர்களிடம் கூறியிருந்தோம்.
அது ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்தது. ஆனால் எந்த முன்னேற்றத்தையும் நாம் காணவில்லை. மீண்டும், இலங்கை என்ன முடிவுகளை எடுக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும். நாம் முன்னரே கூறியது போன்று, அவர்கள் எதையும் செய்யவில்லையென்று அனைத்துலக சமூகம் கருதினால், நாம் அடுத்த அடிகளை எடுத்து வைக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ள போதிலும், இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கும் எண்ணம் ஏதும் அமெரிக்கா அரசாங்கத்துக்குக் கிடையாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கல் ஜே சிசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நல்லிணக்க முயற்சிகளையும், மனிதஉரிமைகளையும் பாதுகாப்பது தான், ஐ. நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கான காரணம். நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பொதுமக்கள், சமூக அமைப்புகள், சிறுபான்மையினரின் உதவியை நாட வேண்டும்.
ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், கருத்து சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். போர் முடிவுக்கு வந்தபின்னர், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தப் பரப்புகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அமைதி, ஐக்கியம், அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment