எகிப்தில் திருடர்களை அடித்துக்கொன்ற மக்கள் (படங்கள்)
எகிப்து தலைநகர் கெய்ரோவில் கையும் களவுமாக பிடிபட்ட 2 திருடர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்தே கொலை செய்துள்ளனர். எகிப்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, டீசல் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இளைஞர்கள், மக்கள், அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நைல் டெல்டா பகுதி அருகில் மோட்டார் ரிக்ஷா திருட முயன்ற 2 பேரை அப்பகுதி வாசிகள் சிலர் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை அடித்து உதைத்து கால்களை கட்டி மரத்தில் தலைகீழாக தொங்க விட்டனர்.
கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் உயிரிழந்தனர். சடலங்களை காவல் நிலையம் முன்பு வீசி விட்டு தப்பிவிட்டனர். தடுக்க வந்தவர்களையும் அவர்கள் அடித்து உதைத்தனர். புகைப்படம் எடுப்பவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். பொதுமக்கள் முன்பு நடந்த இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சட்டத்தை கையில் எடுத்து 2 பேரை கொன்றவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கோரியும் பொதுமக்கள் தொடர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘திருடர்களை மக்கள் அடித்து கொலை செய்ததாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்தோம்.
ஆனால் டீசல் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி மகலா பகுதியில் மறியலில் ஈடுபட பொதுமக்கள் அனைத்து சாலைகள் மற்றும் ரயில் பாதைகளையும் அடைத்து வைத்திருந்தனர். அதனால் குறிப்பிட்ட நேரத்தில் எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. வன்முறை தாக்குதலில் இறந்தவர்கள் சமனோட் மற்றும் மாகாலாகித் சியாத் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்’ என்றனர். கடந்த ஆண்டு வடக்கு கெய்ரோவின் ஷார்க்கியா பகுதியில் கார் திருட முயன்றவரை பிடித்த ஒரு கும்பல் அவரை அடித்து உதைத்து தீயிட்டு கொளுத்தியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment