சவூதி அரேபியாவில் பணிபுரிபவர்கள் பீதியடைய வேண்டாம் - இந்தியா
சவூதியில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் உட்பட இந்தியர்கள் எவரும் பீதியடைய வேண்டாம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி பல வெளிநாட்டினர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பலர் அங்கு வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, கேரளத்திலிருந்து மட்டும் 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் சவூதியில் வேலை செய்து வருகின்றனர்.
இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறும் போது, "இந்தியாவுக்கும் சவூதிக்கும் நல்ல நட்புணர்வு இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் தொழிலாளர் கொள்கையில் மாற்றம் செய்ய சவூதி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது.
சவூதியில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வரும் கேரள மக்களின் பணி பாதுகாப்பு குறித்து கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோனி, வயலார் ரவி, இ.அகமது ஆகியோர் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். அதனால் சவூதியில் உள்ள கேரளத்தினர் அச்சம் அடையத் தேவையில்லை." என்று உம்மன் சாண்டி கூறினார். inneram
Post a Comment