இலங்கைக்கு எதிரான தீர்மானம் - ஜெனீவாவில் சமர்ப்பித்தது இலங்கை
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைபை அமெரிக்கா நேற்று முறைப்படியாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில் சமர்ப்பித்துள்ளது.
‘சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல்‘ என்ற தலைப்பில் இந்தத் தீர்மான வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் அமெரிக்கா சமரப்பித்துள்ள தீர்மான வரைபை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கவனமாக ஆராய்ந்து வருவதாகவும், ஆய்வு செய்த பின்னர் அதற்கு பதிலளிக்கப்படும் என்றும் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தீர்மான வரைபு, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி வரையப்பட்ட தேசிய செயற்திட்டத்தில், அனைத்துலக மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து பொருத்தமான வகையில் பதிலளிக்கப்படவில்லை என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட தனது பொதுவான கடப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் இந்த தீர்மான வரைவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகளை சிறிலங்கா அரசுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும், நீதியை நிலைநாட்டுவதற்கான அணுகுமுறையின் மற்றொரு பகுதியாக, உண்மை கண்டறியும் பொறிமுறையை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாகவும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையையும் இந்த தீர்மான வரைபு வரவேற்றுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்தின் தொழில்நுட்பக்குழுவுக்கு வசதிகளை செய்து கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள இந்த தீர்மான வரைபில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடல்களையும், ஒத்துழைப்புகளையும் அதிகரிக்க ஊக்குவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை விரைவாகவும், காத்திரமான முறையிலும் நடைமுறைப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுவதற்காக தனது சட்டரீதியான கடமைகளைகளை நிறைவேற்ற எல்லா மேலதிக நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும், அனைத்துலக சட்டமீறல்கள் குறித்த விசாரணைகள் உள்ளிட்ட நேர்மையான, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நம்பகமான - சுதந்திரமான – நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மான வரைபு வலியுறுத்தியுள்ளது.
Post a Comment