Header Ads



உள்ளுர் அரசியல்வாதி நூலக கட்டிடத்தின் மேல் ஏறி உண்ணாவிரதம் (படங்கள்)



நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெறுகின்ற மண் அகழ்வினை கண்டித்து நாவிதன்வெளி பிரதேச சபை துணைத் தவிசாளர் பிரதேச சபை நூலக கட்டிடத்தின் மேல் ஏறி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். நேற்று திங்கட்கிழமை காலை 8.30 தொடக்கம் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை துணைத் தவிசாளர் ஏ.ஆனந்தன் ஆரம்பித்துள்ளார். அவருடன் பிரதேச சபை உறுப்பினர் பி. சுதர்ஷனும் உண்ணாவிரதம் அனுஷ்டிக்கின்றார். 

சபையின் தீர்மானங்கள் தவிசாளரினால் குழிதோண்டி புதைக்கப்பட்டு எமது வீதிகளில் கனரக வாகனங்கள் மண் எடுத்துச் செல்வதை நிறுத்துமாறும் கனரக வாகனத்தை அனுமதிக்காது உள்ளூர் தேவைக்கு உழவு இயந்திரத்தில் மண் ஏற்றுவதை உடன் அமுல்படுத்துமாறும் மண் ஏற்றும் ஆள் அடியனால்( கனரக வாகனம்) மாணவர்களுக்கு மரண பயம், சபையில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைத் தவிசாளர் அலட்சியப்படுத்துகின்றார் என்ற கருத்துகளைத் தெரிவித்தே துணை முதல்வர் ஏ.ஆனந்தன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். மாடிக்கட்டிடத்தில் உண்ணாவிரதத்தைத் தொடரும் பிரதி தவிசாளர் ஏ.ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில்; 

கடந்த 2012/ 8/28 ஆம் திகதி நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபை விசேட கூட்டத்தில் பிரதேச செயலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய அமைப்புகள், மத்திய முகாம் சவளக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட சபை தவிசாளர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இரண்டு தொன்னுக்கு குறைந்த வாகனத்தை மண் ஏற்றுவதற்கு நாவிதன்வெளி பிரதேசத்தில் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. 

இந்த விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை 2012/ 08/30 ஆம் திகதிய 17 ஆவது சபை அமர்வின் போது நிறைவேற்றப்பட்டு அதன் பிரதிகள் அம்பாறை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு 02.10.2012 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானங்களையெல்லாம் பிரதேச சபை தவிசாளர் உதாசீனம் செய்து சபைத் தீர்மானங்களை நிறைவேற்றாமல் குழிதோண்டிப் புதைக்கின்றார். இதனைக் கண்டித்தே இந்த உண்ணாவிரதம் ஆரம்பித்ததாக துணைத் தவிசாளர் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மண் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்கும் வரை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லையென ஆனந்தன் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதம் தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் எஸ். குணரத்னம் கருத்து தெரிவிக்கையில்; 

நாவிதன்வெளி பிரதேசசபை 2006.4.15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னரே இப்பிரதேசத்தில் மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது. எமது நாவிதன்வெளி பிரதேசம் மண் வளம் நிறைந்த பகுதியாகும். கடந்த சுனாமி கட்டுமானப் பணிகளுக்கும் வீதி அபிவிருத்திக்கும் எமது பகுதி மண்ணே பயன்பட்டு வந்தது. இதற்கான அனுமதியை பிரதேச சபை வழங்கவில்லை. 

மாறாக கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளரும் சுற்றாடல் அதிகார சபையுமே வழங்கி வருகிறது. பிரதேச சபை மண் அகழ்வுக்கு அனுமதி வழங்காத நிலையில், என்னை தடுக்கவேண்டும் என்று கூறி உண்ணாவிரத செயற்பாட்டில் இறங்கியிருப்பது எமக்குள் கட்சி சார்ந்த பிரச்சினையாகவே நான் கருதுகின்றேன். இது எனக்கு எதிரான தனிப்பட்ட எதிர்ப்பாகும்.கடந்த காலத்தில் பிரதி தவிசாளரும் குறித்த பிரதேசத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டவர் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.