பாகிஸ்தானுக்கு செல்லாதீர்கள் - முஷாரப்புக்கு சவூதி அரேபியா புத்திமதி
பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் அதிபர் முஷாரபை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் 2009 ஆண்டு பாகிஸ்தானை விட்டுச் சென்றார். அன்று முதல் லண்டன் மற்றும் துபாயில் வசித்து வருகிறார். அவர் பாகிஸ்தான் வந்தால் கைது செய்ய அரசு தீவிரமாக உள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானில் மே மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முஷாரபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடுகிறது. கட்சிக்கு தலைமை தாங்கி தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ள முஷாரப், மார்ச் 24-ம் தேதி கராச்சிக்கு செல்வதாக அறிவித்துள்ளார். அப்போது அவரை கைது செய்யும் சூழ்நிலை இருப்பதால் அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முஷாரப் பாகிஸ்தான் சென்றால் ஆபத்து ஏற்படும் என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. நேற்று சவுதி சென்ற முஷாரபிடம், சவுதி அதிகாரிகள் இத்தகவலை கூறியுள்ளனர். மேலும் உணர்ச்சிவசப்பட்டு அவர் பாகிஸ்தான் திரும்புவதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேசமயம் முஷாரப் பாகிஸ்தான் திரும்ப முடியாவிட்டால், பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி தோல்வியைச் சந்திக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment