Header Ads



'ஜெரூசலத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' - கட்டார்


(Tn) கட்டாரில் ஆரம்பமான அரபு லீக் மாநாட்டில் சிரிய அரச எதிர்ப்பாளர்களின் தேசிய கூட்டணிக்கு சிரிய நாட்டு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

சிரிய எதிர்த்தரப்பு தலைவர் அஹமத் மெவஸ் அல் காதிப்பை உள்ளடக்கிய தூதுக் குழு கரகோசத்திற்கு மத்தியில் சிரிய நாட்டு கொடியுடனான ஆசனங்களில் அமர்ந்தனர். எனினும் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் அரசு அரபு லீக்கின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு கொள்ளைக்கார கும்பலுக்கு சிரிய ஆசனத்தை வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

அரச எதிர்ப்பாளர்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்ட பஷர் அல் அஸாத் அரசு 2011 ஆம் ஆண்டு அரபு லீக்கிலிருந்து இடை நீக்கப்பட்டது.

இந்நிலையில் டோஹாவில் நேற்று ஆரம்பமான இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்க எதிர்த் தரப்பினருக்கு கட்டார் நாட்டு எமிர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் சிரிய எதிர்த்தரப்பினரின் தலைவர் காதிப் மற்றும் எதிர்ப்பாளர்களின் பிரதமராக நியமிக்கப்பட்ட கஸ்ஸான் ஹிட்டோ உட்பட மேலும் இரு பிரதான எதிர்த்தரப்பு பிரமுகர்கள் அரபு லீக் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய எதிர்த் தரப்பு தலைவர் காதிப், தமது சுதந்திரத்திற்காக சிரிய மக்கள் தனது சொந்த இரத்தத்தை சிந்தி வருகின்றனர் என்றார். இதில் மோதலை தடுக்க முக்கிய பங்கு வகிக்குமாறு அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்த காதிப் சிரிய கிளர்ச்சியாளர் வசமிருக்கும் பகுதிகளை பாதுகாக்க நிலத்திலிருந்து வானைத் தாக்கும் ஏவுகணைகளை தந்து உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதில் அரபு லீக் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கட்டார் நாட்டு தலைவர் கலிபா அல்தானி, ஜெரூசலத்தின் அரபு மக்களை பாதுகாக்க ஒரு பில்லியன் டொலர் நிதியை திரட்டும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிதிக்காக கட்டார் 250 மில்லியன் டொலர்களை வழங்கும் எனவும் அவர் கூறினார். “ஜெரூசலத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அரபு நாடுகள் இதற்காக தீவிரமாக செயற்படவேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

அரபு லீக்கின் மாநாட்டில் சிரியாவில் தொடரும் மோதல் மற்றும் ஆப்கான் அரசின் தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.