தமிழ்நாட்டில் பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல் - அஸாத் சாலி கண்டனம்
தேசிய ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளர் அஸாத் சாலி கண்டனம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது மிகவும் அநாகரிகமான ஒரு செயலாகும். தமிழ்நாட்டின் சில அரசியல் வாதிகளால் தவறான முறையில் வழி நடத்தப்படும் ஒரு கும்பலே இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல், கலாசார மற்றும் சமய ரீதியான பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இந்தப் பிரச்சினைகளின் பின்னணியில் ஆளும் தரப்பின் முக்கிய சில அதிகாரிகளின் தயவுடன் கூடிய ஒரு சில பௌத்த பிக்குமாரும் உள்ளனர் என்பதையும் நாம் மறுக்க முடியாது. மிகக் குறைந்த அளவிலான ஒரு சிறு பிரிவினர் மட்டுமே இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் பெரும்பாலான பௌத்த மதகுருமார் அதிலும் குறிப்பாக பிரதான பௌத்த மதப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட மதகுருமார் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக உள்ளனர்.அவர்கள் சிறுபான்மையின மக்களை தமது சகோதரர்களாகக் கருதி ஆதரித்து வருகின்றனர். இதுதான் யதார்த்தம். சிறுபான்மையின மக்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், அவர்களின் சமய மற்றும் கலாசார சுதந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு சூழலில் அறியாமை காரணமாகவும், மற்றவர்களால் தூண்டிவிடப்பட்டதன் விளைவாகவும் பௌத்த பிக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிலைமை மேலும் மோசமடையவே வழிவகுக்கும்.
எது எவ்வாறு இருப்பினும் அரசியல் ரீதியான எதிர்ப்புக்களை வெளிக்காட்டவும், அரசியல் இலக்குகளை அடையவும், தமது அரசியல் போராட்டங்களின் பக்கம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும் வன்முறையை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்துவதும் பின்பற்றுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதை யார் எங்கு எந்த வடிவத்தில் செய்தாலும் அதை நாம்
அனுமதிக்க முடியாது. நாகரிகமான ஒரு சமூகத்தின் பிரஜைகள் என்ற வகையில் இதற்கு எதிராகக் குரல் கொடுப்பது எம் எல்லோரினதும் கடமையாகும்.
சமயத் தலைவர்கள் கௌரவத்துக்கு உரியவர்கள். அவர்களுக்குரிய பிரத்தியேகமான உடையில் நாம் அவர்களை அடையாளம் காணுகின்ற போது அவர்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் சரி அதற்கான மரியாதையை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. தமிழ்நாட்டுக்கு மாணவர்களாகவும், வணக்க வழிபாடுகளுக்காகவும் வருகின்ற மதத் துறவிகளை தாக்குவதன் மூலம் யாரும் எதையும் சாதித்து விட முடியாது. மாறாக தமிழ் நாட்டு மக்களுக்கு இவ்வாறான செயல்கள் தலை குனிவையே ஏற்படுத்தும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்தி இனி மேலும் இவ்வாறான செயல்கள் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு நோக்கங்களுக்காக இந்தியா செல்லும் இலங்கை பௌத்த பிக்குகளின் பாதுகாப்பில் அரசாங்கமும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
இது ஒரு முஸ்லிம் இதுதான் எப்போதும் ஒரு இஸ்லாமியரின் கொள்கையும் கோட்பாடும். என்னசெய்வது தற்போது இலங்கையில் வன்முறைகளை உண்டாக்கும் பிக்குகளினால்தான் இந்தியாவில் இவர்கள் தாக்கப்ப்டுகின்றார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் எல்லாம் பிக்குதானே என்று பிச்சு உதறிட்டார்கள். பொதுபலசேன ஜாதிக ஹெல உறுமய போன்ற பிக்குகளின் மதவெறித்தனமான செயல்பாடுகள்காரணமாகத்தான் இப்படி நடக்கின்றது எவ்வளவோ பிரச்சினைகள் முன்பெல்லாம் நடந்துள்ளன அப்போதெல்லாம் இப்படி பிக்குகளைத்தாக்குமளவிற்கு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் எப்போது பொதுபலசேன போன்ற கும்பல்கள் பிக்குகளின் ஆடையுடன் தமது இனவெறியில் ஈடுபட்டார்களொ அன்றிலிருந்துதான் பெளத்தர்களுக்கும் குளப்பமான நிலை. இதற்கு தீர்வு பெளத்தர்கள் கையில்தானுள்ளது. பொதுபலசேன போன்றகுளுக்களை முன்வைத்து காரியங்களை சாதிப்பது யார்? காவி உடைகளை ஏன் அதற்குத்தெரிவு செய்த்தார்கள்? என்பதற்குப் பதிலை எமது பெளத சகோதரர்களூம் உண்மையான் பெளத்த பிக்குகளூமே இதற்குரிய பதில்களை பெற முயற்சிக்கவேண்டும். நாட்டில் இதுபோன்ற அடாவடித்தனமான் நடவடிக்கைகள் நடக்கும்போது பெரும்பான்மை இன மக்கள்தான் யோசித்துச்செயல்படவேண்டும்.
ReplyDelete