தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தாதீர்கள் - அமைச்சர் றிசாத்
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று 21-03-2013 மாலை ஆற்றிய உரையின் தொகுப்பு
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இந்த மீளக் குடியமர்த்துதல் அதிகாரசபை சம்பந்தமான விவாதத்திலே கலந்துகொண்டு அதனை மேலும் மூன்று வருடகாலத்துக்கு நீடிப்பது தொடர்பாக உரையாற்றுவதில் நான் சந்தோஷப்படுகின்றேன். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த பொழுது இந்த அதிகாரசபையை உருவாக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ அவர்களும் அந்த அதிகாரசபையை அமைப்பதற்கு எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள். இன்று அந்த அதிகாரசபை 6 வருடங்களைப் பூர்த்திசெய்துள்ள நிலையில் அதனை மேலும் மூன்று வருட காலத்துக்கு நீடிப்பதற்கான ஏற்பாட்டை மீள்குடியேற்ற அமைச்சர் மாண்புமிகு குணரத்ன வீரக்கோன் அவர்கள் எடுத்துள்ளார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சகலருடனும் கலந்து பேசி மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் செயற்படுகின்ற, நீண்டகால அரசியல் அனுபவமுள்ள ஓர் அரசியல்வாதி. அவ்வாறே, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் அவர்களும் நீண்ட காலமாக என்னுடன் பணியாற்றிய ஒரு திறமைவாய்ந்த நிருவாகி. எனவே, அவர்கள் இருவரும் இந்த அமைச்சின் பணிகளை மீண்டும் எதிர்வரும் மூன்று வருட காலத்துக்கு நல்ல முறையிலே முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென வேண்டிக்கொள்கின்றேன்.
ஹரின் பர்னாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் இச்சபையிலே உரையாற்றிய வேளையில், இங்கேயுள்ள 18 தமிழ் உறுப்பினர்களில் 16 முஸ்லிம் உறுப்பினர்கள் ஆளுங்கட்சியில் இருக்கின்ற பொழுதிலும் புத்தளத்திலே அகதிகளாக இருந்த முஸ்லிம் மக்கள் ஏன் மீள்குடியேற்றப்படவில்லை எனக் கேட்டிருந்தார். அதேபோன்று சற்று முன்னர் இச்சபையிலே உரையாற்றிய அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் அடைகின்ற துன்பங்களையும் வேதனைகளையும் அவர் தான் நேரடியாகச் சென்று பார்வையிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் அவா்களே! 23 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மக்கள் தமது விருப்பத்தின் பேரில் சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறியவா்களல்லர். அந்த மண்ணில் வாழவேண்டுமென்ற ஆசையுடன் மண்ணின் மகிமையைப் பேணி கெளரவத்துடன் வாழ்ந்த அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் எந்தவொரு காரணமுமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு மணித்தியால அவகாசத்திலும் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து 48 மணி நேர அவகாசத்திலும் தமது எந்தவொரு உடமையையும் கொண்டுசெல்ல முடியாத நிலையிலே கடல் வழியாகப் பயணம் செய்து புத்தளத்திலே 168 முகாம்களிலும் அனுராதபுரத்திலே 12 முகாம்களிலும் எஞ்சியோர் பாணந்துறை,களுத்துறை, மட்டக்குளி, நீர்கொழும்பு, குருநாகல் போன்ற பல பிரதேசங்களிலும் அகதிகளாகச் சிதறி வாழ்ந்தனர்.
முசலி, மாந்தை, மடு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் 23 வருட காலத்துக்குப் பின்னர் அவர்களது கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டபொழுது அவை காடுகளாகவே காட்சியளித்தன. கடந்த 23 வருட காலமும் அம்மக்கள் அப்பிரதேசங்களிலே வாழாத காணத்தினால் அந்தக்காணிகளில் எந்த அபிவிருத்தியும் செய்யக்கூடிய சூழல் இருக்கவில்லை. யுத்த காலத்தில் அப்பிரதேசத்திலுள்ள பொதுக்கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டதால் அவை இன்று காடுகளாகக் காட்சியளிக்கின்றன. தற்போது தமது காணிகளைத் துப்புரவு செய்து குடியேறுவதற்கு நாதியற்ற சமூகமாகவே அம்மக்கள் இருக்கின்றார்கள். இன்று பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எவரும் இல்லாத துர்ப்பாக்கிய நிலையிலேயே அவர்கள் வாழ்கின்றார்கள்.
அங்கே வேப்பங்குளம் என்ற ஒரு பாரம்பரிய கிராமம் இருக்கின்றது. இன்றுகாலை அந்தக் கிராம மக்கள் தங்களுடைய காணியைத் துப்பரவு செய்யச் சென்றபொழுது அங்கிருக்கின்ற இராணுவத்தினர் அவர்களைத் தடுக்கின்றார்கள் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். அன்றைய காலத்தில் புலிகள் அவர்களைத் துரத்தினார்கள்; இன்று அந்தக் கிராம மக்கள் அங்கு சென்றபோது, காடுகளை அழிக்க வேண்டாமென்று சொல்லி இராணுவத்தினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருப்பதாக நான் அறிகிறேன். இன்று இராணுவத்தினர் இந்த மீள்குடியேற்றத்தை மறைமுகமாகத் தடுக்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை அந்தப் பிரதேசத்திலே ஏற்பட்டிருக்கின்றது. அந்த மக்கள் எங்களிடம் கேட்கின்றார்கள், "சில பஸ்களை அனுப்பி விடுங்கள். நாங்கள் அத்தனைபேரும் மீண்டும் புத்தளத்துக்கு அல்லது எங்கேயாவது போய் வாழ்கிறோம்" என்று. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக அந்த மக்கள் இருக்கின்றார்கள். இங்கு பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சொன்னதுபோல வேறு யாரிடமும் சென்று இவர்களுடைய பிரச்சினை பற்றி நாங்கள் முறையிடுவதில்லை. "அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்" என்று நாங்கள் ஜனாதிபதி அவர்களிடம்தான் சொல்லியிருக்கிறோம். அதைப்போல அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ அவர்களிடமும் நாங்கள் இதுபற்றிப் பேசியிருக்கிறோம். கடந்த வரவு செலவுத்திட்டத்தின்போது உங்களுடைய அமைச்சின் குழுநிலை விவாதத்திலும் கூட நான் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மீள்குடியேற்றத்தை ஓரிரு நாட்களிலே செய்துவிட முடியாது. நீங்கள் ஒரு திறமைசாலி! அனுபவமுள்ள ஓர் அரசியல்வாதி! நீங்கள் இது சம்பந்தமாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, காணி இல்லாதவர்கள் யார்? அவர்களுக்கு ஏன் காணி இல்லை? என்பதைக் கண்டறியுங்கள். உதாரணமாக, பெரியமடு போன்ற கிராமங்களில் இவர்கள் இருந்த காணிகளிலே பிற குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதால், இவர்களுக்குக் காணி இல்லாத நிலை! முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களிலே அந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த மக்கள் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் அங்கு சென்று பார்த்தபொழுது, அந்தக் கிராமங்களிலே யுத்த காலத்தில் அகதிகளாக அலைந்து திரிந்து கஷ்டப்பட்ட மக்கள் குடியேறியிருப்பதைக் காண முடிந்தது. இன்று அந்தக் கிராமங்களிலே ஒரு துண்டு வெற்று நிலம்கூட இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கே அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், கிராம சேவகர் என எல்லோரும் இணைந்து அந்த மக்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கி அந்தப் பிரதேசத்தில் இரண்டு இடங்களை அவர்கள் குடியேறுவதற்காக அடையாளப்படுத்தியிருந்தார்கள். அங்கு குடியேறச் சென்ற மூவாயிரம் குடும்பங்களில் 1,400 குடும்பங்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கையெடுத்தபொழுது சில தமிழ் ஊடகங்கள் மிக மோசமாக எழுதின. தமிழ் ஊடகங்களைத்தான் முஸ்லிம் சமூகத்தினரும் நாடுகின்றார்கள். 10 வீதமான தமிழ்பேசும் முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள். அவர்களும் இந்தத் தமிழ் ஊடகங்களை நம்பியே இருக்கின்றார்கள். இந்த ஊடகங்கள் முஸ்லிம் - தமிழ் உறவைச் சிதைக்கின்ற முறையில் எழுதுகின்றன. முஸ்லிம்களுடைய ஒரு சின்ன விடயத்தைக்கூட பெரிதுபடுத்திக் காட்டுகின்றன.
"முல்லைத்தீவிலே 1,455 குடும்பங்களுக்கு காணி கொடுக்கப்படுகிறது" என்று ஒரு தமிழ்ப் பத்திரிகை தலைப்பிட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்கள் தலைப்பைப் பிழையாக எழுதி, அங்குள்ள உண்மை நிலைமையைச் சொல்ல மறுக்கின்றார்கள். புலிகள் செய்த தவறுக்காக அப்பாவித் தமிழ் மக்களை நாங்கள் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. கெளரவ சுமந்திரன் அவர்கள் இங்கு பேசினார். இந்த விடயங்களை நாங்கள் அவரிடத்திலே கூறியபொழுது இதிலுள்ள நியாயங்களை அவர் புரிந்துகொண்டார். அப்படி நியாயங்களைப் புரிந்துகொள்கின்ற ஓர் உறுப்பினராக நாங்கள் அவரையும் அவருடைய கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா போன்றவர்களையும் பார்க்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இன்று நீங்கள் இருக்கின்றீர்கள். புலிகள் செய்த தவறை அன்று ஒரு சில தமிழ்த் தலைவர்கள் இந்திய வீடமைப்புத் திட்டத்திலே முஸ்லிம்களையும் உள்வாங்குமாறு இந்திய தூதுவருக்கு சம்பந்தன் ஐயா அவர்கள் கடிதம் எழுதியதாக கெளரவ சுமந்திரன் அவர்கள் சொன்னார். அதற்காக நாங்கள் உங்களுக்கு எங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
.அதனோடு நின்றுவிடக்கூடாது. தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து வாழ முடியாது. யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த முஸ்லிம் சமூகத்தையும் அந்த மண்ணிலே வாழவைப்பதற்கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகின்ற விடயத்திலே நீங்களும் உங்களுடைய கால நேரத்தைச் சற்று செலவழிக்க வேண்டும். அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் இருக்கின்றன? என்பதைப் பார்க்க வேண்டும். பிற மாவட்டங்களைச் சோ்ந்த எந்தவொரு முஸ்லிம் நபரையும் வட மாகாணத்தில் கொண்டுபோய் குடியேற்றுவதற்கு நாங்களே உடன்பட மாட்டோம். அதற்காக எந்தவிதமான உதவியையும் செய்ய மாட்டோம். அப்படி யாரும் அங்கு வரவும் மாட்டார்கள். அங்கு யார் வாழ்ந்தார்களோ அவர்களுடைய பெயர்கள் 2009ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பிலே இருக்கின்றன. அங்குள்ள எந்தக் கிராமங்களைச் சோ்ந்தவர்களாயினும் அவர்களை அங்கு குடியமர்த்துவதற்கு நீங்கள் உதவ வேண்டும்.
எனவே, அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் முன்வந்து செயற்பட வேண்டுமென்று நான் வேண்டுகின்றேன். கெளரவ அமைச்சர் குணரத்ன வீரக்கோன் அவர்களே, நீங்கள் இரவு பகலாக பாடுபட்டு நடவடிக்கைகளைச் செயற்படுத்துகின்ற ஓர் அமைச்சர். இந்த ஓரிலட்சம் மக்களையும் எவ்வாறு குடியமர்த்துவது? இவர்களுடைய பிரச்சினை என்ன? இவர்களுடைய தேவைகள் என்ன? என்பவற்றையெல்லாம் நீங்கள் அறிந்து அத்தனை பேரையும் உங்களுடைய பதவிக்காலத்திலேயே குடியமர்த்துவீர்களென நாங்கள் எதிர்பார்க்கின்றோம். என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தொகுப்பு-இர்ஷாத் றஹ்மத்துல்லா
Post a Comment