அஸ்வர் எம்.பி. தலைமை தாங்கலாமா..? பாராளுமன்றத்தில் சர்ச்சை வெடித்தது
(தினகரன்) பாராளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் எம். பி. க்களுக்கு சவால் விட முடியாது. தலைமை தாங்கும் எம்.பிக்களை அவமதிக்க வேண்டாம் என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. சபைக்கு தலைமை தாங்குவது தொடர்பில் எதிர்க்கட்சி எம். பி. க்கள் எழுப்பிய சர்ச்சையின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐ. தே. க. எம். பி. ரவி கருணாநாயக்க உரையாற்றிக் கொண்டிருந்த போது குழுக்களின் பிரதித் தலைவர் சந்ரகுமார் முருகேசு சபைக்கு தலைமை வகித்தார். சபைக்கு தலைமை தாங்குவதற்கு அவர் ஏ. எச். எம். அஸ்வர் எம். பி யை பிரேரித்தார்.
ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. சபைக்கு தலைமை தாங்குவதற்கு ரவி கருணாநாயக்க எம். பி. அடங்கலான எதிர்க்கட்சி எம். பி. க்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். அஸ்வர் எம். பி. யை சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினராக நியமிப்பதில்லை என சபாநாயகர் தீர்ப்பு வழங்கியுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல எம். பி. குறிப்பிட்டார்.
சபாநாயகர் அவ்வாறு எதுவித தீர்ப்பும் வழங்கவில்லை. அது தவறான கருத்தாகும். இதற்கு முன்னரும் நான் 3 தடவை சபைக்கு தலைமை வகித்தேன். அப்பொழுது யாரும் ஆட்சேபனை செய்யவில்லையென ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. தெரிவித்தார். எம். பி. ஒருவர் பிரேரித்ததாக அஸ்வர் எம். பி. தலைமை தாங்குவதாகவும் வெளிநபர்கள் யாரும் அவரை பிரேரிக்கவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன குறிப்பிட்டார்.
இது தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து சபைக்கு தலைமை வகித்த ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. சபையை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். 3.25 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை 3.30 க்கு மீண்டும் கூடியது.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி சபைக்கு தலைமை தாங்கினார். மீண்டும் உரையாற்றிய ரவி கருணாநாயக்க எம். பி. தலைமை வகித்த அஸ்வர் எம். பி. குறித்து குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இதன் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஆளும் தரப்பு பிரதம கொரடா தினேஷ் குண வர்தன சபாநாயகரோ, பிரதி சபாநாயகரோ, குழுக்களின் பிரதித் தலைவரோ இல்லாத சமயத்தில் நியமிக்க தலைமை தாங்கும் எம். பி. க்களின் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களை அவமதிப்பதை ஏற்க முடியாது. பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டே பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். தலைமை தாங்கும் எம். பி. க்கு மோசமான வசனங்களைக் கொண்டு விமர்சிக்க இடமளிக்க முடியாது என்றார். ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. கூறியதாவது:-
குழுக்களின் பிரதித் தலைவரே என்னை தலைமை தாங்க அழைத்தார். ஆனால், ரவி கருணாநாயக்க எம். பி. தலைமையை விமர்சிக்க முயல்கிறார். நான் சபைக்கு தலைமை வகிக்கக் கூடாது என சபாநாயகர் ஒரு போதும் அறிவிக்கவும் இல்லை அவ்வாறு எனக்கு ஒரு போதும் தெரிவிக்கவும் இல்லை என்றார். இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் எதிர்க்கட்சி எம். பி. க்களுக்குமிடையில் சூடான விவாதம் ஏற்பட்டது.
இந்த சர்ச்சை தொடர்பில் பிரதி சபாநாயகர் எதுவித கருத்தும் கூறவில்லை.
Post a Comment