Header Ads



மக்காவில் வரலாற்று முக்கியத்துவமிக்க பகுதிகள் அகற்றப்படுவதாக குற்றச்சாட்டு



மக்கா புனித மஸ்ஜித் அல் ஹரம் பள்ளிவாசல் அபிவிருத்தி திட்டத்தில் சவூதி அரசு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை அழித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதில் மஸ்ஜித் அல் ஹரமின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் உஸ்மானிய மற்றும் அப்பாஸிய காலத்து கட்டுமானங்கள் இயந்திரங்கள் மூலம் தோண்டி அகற்றப்படும் காட்சிகள் புகைப்படமாக வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்கா பெரிய பள்ளிவாசலில் எஞ்சியிருந்த நூற்றாண்டு பழைமையான கட்டுமானங்களும் அகற்றப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி மன்னரின் பல பில்லியன் டொலர் திட்டத்தில் மக்கா பெரிய பள்ளிவாசல் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் அதிக ஹஜ் யாத்திரிகர்களுக்கு வசதி செய்து கொடுக்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த அபிவிருத்தி திட்டத்தால் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அழிக்கப்படுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதில் மொஹமத் நபி தனது மிஹ்ராஜ் பயணத்தை ஆரம்பித்த இடமும் இந்த அபிவிருத்தி பணியால் அழிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தவிர மஸ்ஜித் அல் ஹரமில் மொஹமத் நபி மற்றும் அவர்களது தோழர்கள் தொடர்பில் உஸ்மானிய மற்றும் அப்பாஸிய காலத்தில் அமைக்கப்பட்ட எழுத்தணிகளும் அகற்றப்பட்டுள்ளன.

மக்கா புனித பெரிய பள்ளிவாசலை விரிவுபடுத்தும் திட்டத்தை ஒசாமா பின் லாடனின் குடும்பத்தின் பின்லாடன் கட்டுமான நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு பொறுப்பாக மன்னர் அப்துல்லாவால் மஸ்ஜித் அல் ஹரம் பள்ளிவாசலின் இமாம் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ் நியமிக்கப் பட்டுள்ளார்.

எனினும் இந்த அபிவிருத்தி பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இடிக்காமல் அமைதியான முறையில் முன்னெடுக்க முடியும் என இஸ்லாமிய பாரம்பரிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் இர்பான் அல் அலாவி வலியுறுத்தியுள்ளார்.

“அகற்றப்பட்டிருக்கும் பல பகுதிகளும் நபியவர்கள் தொழுத மற்றும் அமர்ந்திருந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இந்த வரலாற்று தகவல்கள் அகற்றப்பட்டிருக்கிறது. புதிதாக அங்கு செல்லும் முஸ்லிம்களுக்கு இந்த பகுதிகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி எந்த துப்பும் கிடைக்கப்போவதில்லை. 

வரலாற்று பாரம்பரியங்களை அழிக்காமல் மக்கா மற்றும் மதீனாவில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்” என்று அலாவி சுட்டிக்காட்டியுள்ளார். சவூதி அரசு ஏற்கனவே முன்னெடுத்த அபிவிருத்தித் பணிகளின்போது மதீனாவின் மஸ்ஜித் அல் நபவி பள்ளிவாசலை சுற்றி இருந்த உலகின் மிகப் பழைய மூன்று பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன. 

வொஷிங்டனை மையமாகக் கொண்டு செயற்படும் நிறுவனம் வெளியிட்ட தரவில், மக்கா மற்றும் மதீனா நகரங்களில் கடைத் தெருக்கள், வானளாவிய ஆடம்பர ஹோட்டல்கள் விரிவாக்கும் நோக்கில் கடந்த 20 ஆண்டுகளில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 95 வீதமான கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மக்காவில் இருக்கும் ஜபல் ஒமர் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்காக பல தொல்லியல் இடங்கள் அழிக்கப்பட்டன. குறிப்பாக மொஹமத் நபி பிறந்த இடம் மற்றும் கதீஜா நாயகியின் வீடு அகற்றப்பட்டன. Thinaharn

3 comments:

  1. டாக்டர் இர்பான் அல் அலாவியின் கருத்து //ஏற்க தக்கதும் தூர நோக்கானதுமாகும் .....

    ReplyDelete
  2. உஸ்மானியா கிலாபத் வீழ்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாய் இருந்த இந்த அல்-சவுத் குடும்பம் அரிய பல இஸ்லாமிய அடையாளச் சின்னங்களை ஏற்கனவே அழித்தொழித்து விட்டது. அமெரிக்க ஹோட்டல்கள் கட்டுவதற்காக, இருக்கும் சில சின்னங்களையும் விட்டு வைக்க வில்லை.

    உலகில், அநேகமாக, எல்லா நாடுகளும், புதைந்து போன தமது சரித்திர சான்றுகளை அகழ்ந்து எடுப்பதில் ஆர்வம் காட்டும் வேளையில் இந்த மன்னர் குடும்பமோ பூமிக்கு மேலே இருக்கும் சான்றுகளை புதைத்துக்கொண்டிருக்கிறது.

    இவர்களின் புத்திசாலி தனத்துக்கு வேறு ஆதாரம் தேவை தானா...?

    ReplyDelete

Powered by Blogger.