யூதர்களும் நாஸிகளும், பௌத்த படையணியும் முஸ்லிம்களும்..!
(GTN) முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கையினால் மேற்கொள்ளப்படும் நலிவான நல்லிணக்க முயற்சி, அகற்றப்படுவதற்கு அரிதான மிகப் பெரிய முட்டுக்கட்டையை எதிர்நோக்கியிருக்கிறது. வளர்ந்து வரும் சிங்கள பெளத்த தேசியவாதம், அதாவது BBS எனப்படும் பெளத்த படையணி எற்கனவே சிதைந்துபோயுள்ள சமூதாயத்தை மேலும் சின்னாபின்னமாக்கும் வகையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம் வர்த்தகர்களின் விலையுயர்வுகளினால் பாதிக்கப்படும் சிங்கள வர்த்தகர்களைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு பெளத்த படையணி முஸ்லிம் சமுதாயத்தை இலக்குவைத்து வீதிகளில் இறங்கியுள்ளது. “கோயில் காணியில்” பள்ளிவாசல்களைக் கட்டியதாக முஸ்லிம்களுக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கை, இன்று பெளத்த பிக்குகள் ஒன்றாகக்கூடி இந்தப் பள்ளிவாசல்கள் அமைந்துள்ள கட்டிடங்களைத் தகர்க்கும் நோக்கில் ஒன்று திரளுமளவிற்கு வலுப்பெற்றிருக்கிறது. இவற்றினைக் கண்டும் காணாததுபோன்று செயற்பட்ட அதிகாரிகள், இப்போது இந்தப் பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் அவர்கள் இன்னமும் ஒரு நிலைப்பாட்டினை எடுக்கவில்லை.
இந்த முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சனை தற்போது பௌத்த படையணி ஹலால் உணவுகளைத் தடைசெய்யும்படி கோரும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த அமைப்பின் கருத்துப்படி, ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் மேலதிக செலவானது நுகர்வோர் மீது திணிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது,
முஸ்லிம் வர்த்தகர்களின் நடவடிக்கைகளினால், சிங்கள வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேலும் தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் பெளத்த படையணியைச் சேர்ந்த பெளத்த பிக்குகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஹலால் உணவு தொடர்பான விவாதம் ஒருபுறம் இருக்க, பௌத்த படையணியின் செயற்பாடுகள் இருண்ட யுகத்திலிருந்து தற்போது மீண்டுள்ள இலங்கையை மீண்டுமொரு நெருக்கடியான எதிர்காலத்திற்கே இட்டுச்செல்லும் என்பது தெளிவாகப் புலனாகிறது. முதற்பார்வையில், பௌத்த படையணி இலங்கை வாழ் சிங்கள மக்களுடைய ஒட்டுமொத்த சனத்தொகையின் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கலாம். ஆனால் அதன் செயற்பாடுகளை சற்று நுணுக்கமாக அணுகி ஆராய்ந்தோமானால், இந்த அமைப்பிற்கும் 1930 களில் ஜேர்மனியில் பயங்கரமான நாஸிசம் தோற்றம் பெற்றதற்கும் ஆச்சரியத்தக்க வகையில் பல ஒற்றுமைகள் இருப்பதனை அவதானிக்கலாம்.
அப்போதுதான் முதலாம் உலகப் போரில் தோற்கடிக்கப்பட்ட ஜேர்மனி, வெற்றிபெற்ற கூட்டணிநாடுகள் விதித்த இழப்பீட்டுக் கட்டணங்களை செலுத்தியதன் காரணமாகவும், அப்போது நிலவிய உலகப் பொருளாதார அமுக்கம் காரணமாகவும், மிகவும் மோசமான பொருளாதார அழுத்தங்களைச் சந்தித்து வந்தது.
அவமானப்பட்டு வங்குரோத்து நிலையிலிருந்த ஜேர்மானிய மக்கள் தமது துரதிஷ்டத்திற்கு வேறு யாரையாவது பழிகூறத் துடித்துக்கொண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலை நாசிஸ் இனவாதிகளுக்குத் தமது தலைகளை உயர்த்தவும், அதுவரை இடம்பெற்ற எல்லாவற்றிற்கும் ஜூதர்களை வசைகூறவும் சரியானதொரு களத்தினை அமைத்துக்கொடுத்தது.
அந்தப் பெரிய போரில் ஜேர்மனி கண்ட தோல்வியினூடாக ஜூதர்கள் தமது செல்வங்களைப் பெருக்கிக்கொண்டனர் என்றும், ஜூதர்கள் தமது செல்வச் சிறப்பிற்காகவும், ஸ்திரத்தன்மைக்காகவும் ஜேர்மானிய நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றனர் என்றும் இனவாத நாஸிகள் குற்றஞ்சாட்டினர்.
அதேபோலவே, இலங்கையிலும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு எதிரான யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட பின்னரும் கூட, இராணுவத்தினர் யுத்தத்தினை நடாத்திய முறை தொடர்பில் நீதிவிசாரணையொன்று நடைபெற வேண்டும் என்று அதிகரித்துவரும் சர்வதேச அழுத்தங்கள் குறித்து உள்நாட்டில் ஒருவகையான எதிர்ப்பு உனர்வலையொன்று வளர்ந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, பொருளாதார வளர்ச்சி குறித்து அரசு தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு மாறாக அபரிமிதமாக அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுகளுடன் இலங்கைப் பொருளாதாரம் மிகவும் பாரியளவில் வீழ்ச்சி கண்டுவருகிறது.
ஜூதர்களுக்கு எதிராக நாஸிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களைப் போலவே, பௌத்த படையணியும் முஸ்லிம்களினால் சிங்கள மக்களின் வியாபார நடவடிக்கைகள் மோசமாகப் பாதிப்படைந்து வருவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
1938 ஆம் ஆண்டு நவம்பர் 9ம், 10ம் திகதி இரவில் கிறிஸ்டோல்னச்ட் (அல்லது நொருங்கிய கண்ணாடிகளின் இரவு) என்ற நிகழ்வின்போது ஜூத இனமக்களின் வர்த்தக நிலையங்கள், வியாபார மையங்கள் நாஸி துணைப்படைகளினாலும், பொதுமக்களினாலும் கடுமையான தாக்குதல்களுக்குள்ளாகின. ஆனால் அதிகாரிகள் அதில் தலையிட்டுத் தடுத்து நிறுத்தாது வாளாவிருந்தனர். இறுதியில் நகரின் தெருக்களெங்கும் ஜூதர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய கட்டிடங்களுடைய சாளரங்களின் நொருக்கப்பட்ட கண்ணாடிகள் குவிந்து கிடந்தன.
1983 இல் தமிழருக்கெதிரான இனக்கலவரத்தின்போது சுமார் ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு, மேலும் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறியபோது கிறிஸ்டோல்னச்ட் இன் இலங்கை வடிவத்தை இலங்கை அனுபவித்தது. பௌத்த படையணியின் நடவடிக்கைகள் இந்த மட்டத்திற்கு இன்னமும் வரவில்லையென்றாலும், மஹரகமவில் “நோ லிமிட்” வர்த்த நிறுவனம் மீதான தாக்குதல் உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் வியாபார ஸ்தலங்கள் மீதான தாக்குதல்களும், நாடாளாவிய ரீதியில் முஸ்லிம் வணக்கத் தலங்கள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்கள் என்பன மிகவும் அபாயகரமான அறிகுறிகளாகும். அதிகாரிகள் இதனைக் கண்டு வாளாவிருப்பதும், சில சந்தர்ப்பங்களில் அரச அங்கத்தவர்கள் இந்த அமைப்பிற்கு ஆதரவாகச் செயற்படுவதும், எதிர்காலத்தில் மேலும் மேலும் இனவாதத்தைத் தூண்டுவதற்கே வழிகோலும்.
அரசியல் ரீதியாக நோக்கினால்கூட முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேச உணர்வுகள் காரணமாக இலங்கைக்கு இழப்புக்களே அதிகம். இலங்கையின் மீது சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துக்கொண்டு செல்லும் இந்தநிலையில், அதிலிருந்து இலங்கை தன்னைத் தற்பாதுகாத்துக் கொள்ளுவதற்கான சந்தர்ப்பங்களை இழந்துகொண்டே போகிறது. கடந்தவருடம் அமெரிக்காவின் தலைமையில் இலங்கைக்கு எதிராகக் கொணரப்பட்ட தீர்மானங்கள், இலங்கையைத் தனிமைப்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டதாக ஆட்சியாளர்கள் திரிபு படுத்துகிறார்கள். அந்தத் தீர்மானங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டபோதிலும், இலங்கைக்கு இஸ்லாமிய நாடுகளே ஆதரவு வழங்கின. இம்முறை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சுமார் 15 இஸ்லாமிய அங்கத்துவ நாடுகள் இருப்பதனால் இலங்கை தன்னை முஸ்லிம் சமூகத்திலிருந்து அந்நியப்பட்ட ஒருநாடுகளில் ஒன்றாகக் காட்டிக்கொள்ள முடியாது.
நிதி ரீதியாகப் பார்த்தாலும்கூட, இலங்கையின் நலிவடைந்து செல்லும் பொருளாதாரம் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் வீட்டுப் பணிப்பெண்களின் வருவாயிலேயே இன்னமும் தங்கியிருக்கிறது. உள்நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைக் காரணம்காட்டி இந்த நாடுகள் இலங்கையிலிருந்து பணிப்பெண்கள் வருவதைத் தடைசெய்தால், நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தின் பெரும்பாகம் தடைப்பட்டுவிடும். அதுமட்டுமல்லாது, உள்நாட்டில் முஸ்லிம் சமூகத்தினருக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் ஏற்கனவே பணிபுரியும் வீட்டுப்பணிப்பெண்களை வேண்டாத விளைவுகளைச் சந்திக்கும் அபாயத்தில் நிச்சயமாகத் தள்ளிவிடும்.
1980 களில் மிகப்பெரிய அளவிலான தமிழர்களின் வெளியேற்றத்தினால் இலங்கைச் சமுதாயம் ஏற்கனவே கலாச்சார ரீதியாகவும், புத்திஜீவிகளையும் பெருமளவில் இழந்து நிற்கிறது. பல்தேசிய இனங்களைக்கொண்ட ஒரு நாடு என்று பெருமைகொள்ளும் இலங்கை, இவ்வாறு இனரீதியான உணர்வுகளைத் தூண்டுவது எதிர்காலத்தை மேன்மேலும் சீரழிக்கும் என்பதில் ஐயமேதும் கிடையாது. இனவாதத்தினால் உந்தப்பட்ட தேசியவாதம் நாட்டின் மூன்று தசாப்தங்களை ஏற்கனவே காவுகொண்டுவிட்டது. ஆனால், யுத்தம் நிறைவடைந்து சுமார் நான்கு வருடங்கள் கழிந்த பின்னரும் இலங்கை அதே பாதையில் பயணிப்பதுபோலத் தென்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது.
Post a Comment