தலையிடாதே..! வடகொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை - பதற்றமும் தொடருகிறது
தென்கொரியா மற்றும் வடகொரியாவுக்கு இடையே, கடந்த, 1950 முதல் நடந்த போர், அமெரிக்காவின் தலையீட்டால், முடிவுக்கு வந்தது. இன்று வரை இருநாடுகளும், பகைநாடுகளாகவே உள்ளன.
பொருளாதார தடை: இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம், தொலைதூர ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த ஏவுகணை, 10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. கடந்த மாதம், மூன்றாவது அணுகுண்டு சோதனையை, அந்நாடு நடத்தியது. இதனால், வடகொரியா மீது, பொருளாதார தடைகளை அமெரிக்கா, தீவிரப்படுத்தியது. தென் கொரியாவையும், பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களையும், தாக்கி அழிக்கப் போவதாக, வட கொரிய அதிபர், கிம்ஜோங் உன், எச்சரித்தார். அமெரிக்க நகரங்களை, ஏவுகணைகள் தாக்கி அழிப்பது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோவையும், வடகொரியா வெளியிட்டது. இரண்டு அமெரிக்க போர் விமானங்கள், நேற்று முன்தினம், தென் கொரியாவுக்கு வந்தன. ரேடார்களில் சிக்காமல் தாழ்வாக பறக்கும் திறன் கொண்ட இவ்விமானங்கள், அணுகுண்டுகளை வீசி தாக்கும் திறன் கொண்டவை என, தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கொரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு பதில் தாக்குதல் நடத்த, அமெரிக்கா தயாராக உள்ளது, என, இதன் மூலம், வடகொரியாவுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை: ""பொறுப்பற்ற வகையிலான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடுமானால், ஹவாய், குவாம் போன்ற பசிபிக் பகுதிகள் மற்றும் தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது, கடும் தாக்குதல் நடத்தப்படும்,'' என, வடகொரிய அதிபர், கிம்ஜோங் உன் எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த, வடகொரியா, ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. ராணுவ உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட அவசர ஆலோசனைக்கு பின், இம்முடிவை எடுத்தாக, கிம்ஜோங் தெரிவித்துள்ளார். இதனால், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் எச்சரிக்கையை, தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், சக் ஹேகல் கூறியுள்ளார்.
ரஷ்யா கவலை: வடகொரியாவின் இந்த அறிவிப்பு, எல்லை மீறி விட்டதை காட்டுவதாக, ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர், செர்கி லாவ்ராவ் கூறியதாவது: வடகொரியா மீது எடுக்கப்பட்டுள்ள, ஒரு தலைபட்சமான நடவடிக்கைகள் தான், அந்நாடு, ராணுவ நடவடிக்கையில் இறங்க காரணமாகியுள்ளது. தற்போது, கட்டுப்பாட்டை இழந்துள்ள இவ்விவகாரம், போர் சூழலை உருவாக்கி விடும் என்பதை எளிதாக உணர முடிகிறது. எனவே, இச்சூழலில், சம்பந்தப்பட்ட நாடுகள், தங்கள் பகையை தீர்த்துக்கொள்ள, ராணுவ பலத்தை காட்ட முயல வேண்டாம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, அந்நாடுகள் முயற்சிசெய்ய வேண்டும். இவ்வாறு, செர்கி கூறினார்.
Post a Comment