Header Ads



அமெரிக்கா எம்மீது தடைகளை விதிக்கமுடியாது - கோத்தா சீற்றம்



விடுதலைப் புலிகளுடனான முப்பதாண்டுப் போரில், இலங்கை சுமார் 30 ஆயிரம் படையினரை இழந்ததாகவும், 20 ஆயிரம் படையினர் உடல் உறுப்புகளை இழந்து நிரந்தர பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் இந்தக் காலப்பகுதியில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

காலியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், ‘போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?‘ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

அவர் தனது நீண்ட உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது- 

“விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களின் பரப்புரை இயந்திரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்தும் முழுஅளவில் செயற்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மூலம் வெளிநாட்டு அரசாங்கங்கள் பலவற்றை தமது கைக்குள் போட்டுக் கொண்டு புலி ஆதரவாளர்கள் பிரச்சினை கொடுக்கின்றனர். 

அனைத்துலக ஊடகங்களும், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்து நடத்துகின்றன.  சில அனைத்துலக அமைப்புகள் புலிகளுடன் தொடர்புடைய குழுக்களின் நன்கொடையை பெறுவதை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளன. சில நிறுவனங்கள் விடுதலைப் புலிகளின் பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகின்றன. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை போன்ற அனைத்துலக அமைப்புகள் கூட, இலங்கை விடயத்தில் சில சக்திவாய்ந்த நாடுகள் மற்றும் அவற்றின் கூட்டாளிகளால் இருநிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் செல்வாக்குச் செலுத்துகின்றனர். அந்த நாடுகளின் பெரும்பாலான தீர்மானங்களில் தமிழ் வாக்குகள் செல்வாக்கு செலுத்துகின்றன. 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரித்தானியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டின் தொகுதியில் 3000 தமிழ் வாக்களார்கள் உள்ளனர். 

இந்தியாவின் பிரதமர் ஒருவரையும், ஆயிரம் இந்திய அமைதிப்படையினரையும் புலிகள் கொலை செய்த போதும், தமிழ்நாட்டின் அழுத்தங்கள் காரணமாக அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.  அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் புலிகள் செய்த கொடுமைகளை நன்றாக அறிந்துள்ள போதிலும், தொடர்ந்தும் மௌனமாக இருக்கின்றன. 

அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை தோற்கடித்ததை மதிக்க வேண்டும். வெவ்வேறு நாடுகளை வெவ்வேறு விதமாக அணுக முடியாது. இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்க முடியாது. தமது தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது போனால், இலங்கை மீது தடைகள் விதிக்கப்படும் என்று மக்கள் பேசிக் கொள்வதாக சில செய்திகளைப் படித்தேன். 

அவர்கள் தனிப்பட்ட நாடுகளை இலக்கு வைக்க முடியாது. இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் உள்ளன.  அமெரிக்காவினான் எம் மீது தடைகளை விதிக்க முடியாது. அது சாத்தியமில்லை. ரஸ்யாவும், சீனாவும் எமக்கு ஆதரவாக உள்ளன.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. இப்படித்தான் சதாமும் கொஞ்ச காலமாக விலாசிக் கொன்டிருந்தார். இன்று மர்கும் சதாமாகி விட்டார். எதற்கும் கொஞ்சம் தடடி விளயாடுங்க சேர்.

    ReplyDelete

Powered by Blogger.