Header Ads



தமிழ்நாட்டில் இலங்கையர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் - மனோ கணேசன்


இலங்கையிலிருந்து இந்தியா சென்ற சிங்கள யாத்ரீகர்கள் மற்றும் பெளத்த தேரர்கள் மீது தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, சென்னை நகரங்களில் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தகைய வன்முறை சம்பவங்கள் தொடரா வண்ணம் இரும்பு கரங்கொண்டு உடன் தடுத்து நிறுத்துங்கள். 

இதன் மூலமே இலங்கை தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை பெற்றிட, உங்கள் அரசாங்கம் கொடுத்திடும் குரலுக்கு மென்மேலும் வலு ஏற்படும் என நான் நம்புகிறேன் என தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அனுப்பி வைத்துள்ள அவசர மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரினால் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் கடித நகல் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் நடைபெறும் இலங்கை தமிழர் தொடர்பான போராட்டங்கள் 

இலங்கையில் சொல்லொனா துன்பங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தொடர்பாக உங்களது அரசாங்கம் முன்னெடுத்து வரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளுக்காக எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.  

தற்போது நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமை பேரவை கூட்ட பின்னணியில்  தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை நடத்திட தமிழக அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இருக்கின்ற உரிமைகளை நாம் மதிக்கின்றோம்.

இலங்கையிலும் இந்திய நாட்டுக்கும், உங்களது அரசுக்கும் எதிராக அரசியல் போராட்டங்கள் இங்குள்ள சில அரசியல் கட்சியினரால் நடத்தப்படுகின்றன. 

ஆனால் இந்த போராட்டங்கள் சில சந்தர்ப்பங்களில் சட்ட வரம்பை மீறி அப்பாவி மக்கள் தாக்கப்படுவதிலும், சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதிலும் சென்று முடிவது  தொடர்பான எங்களது கவலையை நீங்கள் பகிர்ந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

கடந்த தினங்களில் தஞ்சை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் இலங்கையை சேர்ந்த பெளத்த துறவிகள் தாக்கப்பட்டுள்ளனர்.  தஞ்சை பெரிய கோவிலிலும், தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையிலும், சென்னை மத்திய ரயில் நிலையத்திலும் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றை நாம் மிக கடுமையாக கண்டிக்கின்றோம். எமது இந்த உணர்வுகளை நீங்களும் பகிர்ந்து கொள்கிறீர்கள் என நாம் நம்புகிறோம்.

இந்திய சட்டங்களின் அடிப்படையில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கமாக பல்லாண்டுகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசியல் சட்ட பின்னணியில் விடுதலை புலிகள் தொடர்பான சட்டவிரோத  தன்மையை கடுமையாக பேணும் அதேவேளையில், உங்களது அரசாங்கம் இலங்கை வாழ் அப்பாவி தமிழ் மக்களின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புகளுக்கும், பாதுகாப்பான நல்வாழ்வுக்கும் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றது.

இதற்கமைய இலங்கை வாழ் தமிழ் மக்களின் நல்வாழ்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை தருவதும், தமிழகம் வரும் அப்பாவி சிங்கள யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதும் இரண்டு வெவ்வேறு விடயங்களாக பகுத்தறிந்து மிகுந்த தூரநோக்குடன் உங்களது அஇஅதிமுக அரசாங்கம் கையாள்வதை நாம் அறிவோம்.

இந்த அடிப்படையில் இலங்கை மக்கள் குறிப்பாக யாத்ரீகர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதை இரும்புகரம் கொண்டு உடன் தடுத்து நிறுத்தும்படி நான் உங்களை வேண்டுகிறேன். இதுவே இலங்கை தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை பெற்றிட, உங்கள் அரசாங்கம் கொடுத்திடும் குரலுக்கு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்.

No comments

Powered by Blogger.