இலங்கைக்கு அருகில்வந்த அவுஸ்திரேலிய உளவு விமானத்தை விரட்டிய ஈரான் போர் கப்பல்
இலங்கை கடற்பரப்பை அண்டி கண்காணிப்பில் ஈடுபட்ட அவுஸ்ரேலிய உளவு விமானத்தை ஈரானிய போர்க்கப்பல் ஒன்று எச்சரித்து விரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை கரையை அண்டியதாக பயணம் செய்து கொண்டிருந்த ஈரானியக் கடற்படையின் 24வது கப்பல்களின் அணியை படம்பிடிக்க முயன்ற அவுஸ்ரேலியக் கண்காணிப்பு விமானத்தையே, தாம் எச்சரித்து விரட்டியதாக ஈரானியக் கடற்படையின் உயர் அதிகாரியான கொமாண்டர் சியாவோஸ் ஜாரே தெரிவித்துள்ளார்.
“ஈரானியக் கப்பற்படை அணியில் ‘கார்க்‘ உலங்குவானூர்தி தாங்கி கப்பல் ஒன்றும், ‘சபாலன்‘ நாசகாரி கப்பல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், அவுஸ்ரேலிய கண்காணிப்பு விமானம் தனது பாதையை மாறிக் கொண்டது.
ஆனால், நீர்மூழ்கிகளை கண்டறியும் கருவிகளை கடலில் வீசியது. ஈரானியக் கடற்படையினரால் அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டன. அனைத்துலக ஒழுங்குமுறைகளுக்கு அமைய, ஈரானியக்கப்பற்படை ஆழ்கடல் வழியாகவே பயணம் செய்தது.” என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் 4ம் நாள் இந்தக் கப்பல்கள் சீனாவின் சகாங்ஜியாகங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டிருந்தன. ஈரானிய வணிகக்கப்பல்கள் மற்றும் எண்ணெய் தாங்கிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, அண்மைக்காலத்தில் அனைத்துலக கடலில் ஈரானியக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அனைத்துலக கடற்பரப்பில் பயணம் செய்யும் ஈரானிய போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை தமது இடைத்தங்கல் நிலையாகப் பயன்படுத்தி வருகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள போதிலும், அந்த நாட்டுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கமான உறவு காரணமாக, ஈரானியப் போர்க்கப்பல்களுக்கு தமது கடற்பரப்பை பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment