இளைஞர் மாநாடு
இலங்கை முஸ்லிம் மாணவர்களின் கல்வி மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (ஒம்சட் சிறிலங்கா) நாடளாவிய ரீதியில் முஸ்லிம் இளைஞர்களை ஒன்று திரட்டி ' தாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம் வளப்படுத்துவோம்' எனும் தொனிப் பொருளில் (16.03.2013) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இளைஞர் மாநாட்டினை நடாத்தியது.
இவ்வருடம் க.பொ.த (உ/த) பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌவரவிக்கப்படுவதுடன், ஒம்செட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களது சேவைநலன் பாராட்டும், மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
அமைப்பின் தலைவர் Dr. M.T.M. அலவி தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டிற்கு பிரதம அதிதிகளாக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். M.H.M.. ஷமீல் மற்றும் சிரேஷ்ட ஒளிபரப்பாளர் B.H.அப்துல் ஹமீட் ஆகியோரும் விஷேட அதிதிகளாக முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட கழகத் தலைவர் M. அமானுல்லா, ஸலாமா நிறுவனத்தின் தலைவர் நியாஸ் மொஹிதீன், MFCD பணிப்பாளர் சபை உறுப்பினர் Dr. சைபுல் இஸ்லாம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
AUMSA, ஜம்இய்யதுத் தலபா, ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்
மாநாட்டுப் பிரகடனம்
கல்விக்கும் அபிவிருத்திக்குமான முஸ்லிம் மாணவர் அமைப்பு 2013.03.16 அன்று கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடாத்திய இளைஞர் மாநாட்டின் போது வெளியிடப்பட்ட பிரகடனம்.
வளம் நிறைந்த நமது தாய் நாடான இலங்கையை நாம் மிக ஆழமாக நேசிக்கிறோம். போரினால் அழிவடைந்த இந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அந்த உயர்ந்த பொறுப்பை நமது தோள்களில் சுமப்போமென இந்த மாநாட்டில் உறுதி கூறுகிறோம். கண்ணியமும், மகிழ்ச்சியும், சமாதான சகவாழ்வும் நிலவும் அபிவிருத்தியடைந்த புதிய இலங்கையே எமது மகத்தான கனவாகும்.
அறிவும் விழிப்புணர்வும்தான் மாற்றத்தினதும் முன்னேற்றத்தினதும் முதன்மை அம்சங்களாகும். கல்வியொன்றே நமது மிகப் பெரிய சொத்து. அதன் மூலம் எதிர்காலத்தை உறுதியுடன் எதிர்கொள்ளும், ஆற்றல்மிக்க கல்விச் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக உறுதி பூணுகிறோம்.
உயர்ந்த பண்பாட்டுப் பெறுமானங்களும் இஸ்லாமிய விழுமியங்களுமே எமது அடிநாதமாக அமைந்துள்ளன. பண்பாட்டு வீழ்ச்சியிலிருந்தும், சீரழிவிலிருந்தும் சமூகத்தையும் நாட்டையும் பாதுகாக்கும் பெரும்பணியில் நாமும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவோம். சமூக மாற்றத்தின் முக்கிய பங்காளிகள் என்ற வகையில், நமது பொறுப்புணர்ச்சியையும், ஆர்வத்தையும் மிகுந்த அக்கறையுடன் வெளிப்படுத்துகின்றோம்.
இலங்கை பல இனங்கள், மதங்கள், பண்பாடுகள் நிறைந்த பூமி. இந்த மண்ணில் சமாதானம், சகவாழ்வு, சமூக நல்லிணக்கம் என்பவற்றை நிலைநிறுத்த வேண்டிய கடப்பாட்டை மீளவும் உறுதி செய்கிறோம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இங்கு பேணப்பட்டு வந்த மேன்மைமிக்க சகவாழ்வும் பரஸ்பர மதிப்புணர்வும் நமது நாட்டின் உயர் கலாச்சாரத்தின் செழுமைமிக்க பக்கங்களாகும். எந்த சவால்களுக்கு மத்தியிலும் இந்த மகத்தான பண்பாட்டு விழுமியங்கள் தொடர்ந்தும் நிலைத்திருக்க எம்மாலான அனைத்துவித முயற்சிகளையும் செய்வோம்.
பரஸ்பர புரிந்துணர்வு, அன்புணர்வு, சகிப்புத்தன்மை, மதிப்புணர்வு, மார்க்க விழுமியங்கள் என்பனவே நமது சமூக வாழ்வின் அடிப்படைகளாகும். உரையாடலும் ஒத்துழைப்பும் இன்றி, புத்தெழுச்சியோ புதுப்பண்பாடோ தோற்றம் பெறாது. மற்றவரைப் புரிந்து மதிக்கின்ற, ஒன்றிணைந்து பங்களிக்கின்ற புதிய இலங்கையை நோக்கி நமது இளைய தலைமுறையைப் புடம்போடுவோம்.
முன்வந்து இயங்குகின்ற, அர்ப்பணிப்பு மிக்க, சமூக மாற்றத்திற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கின்ற இஸ்லாமியப் பெறுமானங்களில் இளைஞர்களை வார்த்தெடுப்போம். இந்தப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் அவர்களது முயற்சிகளையும் மதிக்கிறோம்;. இந்த பாரிய பணியில் ஒன்றிணைந்து செயற்படும் எமது விருப்பை இந்த மாநாட்டில் மீளவும் வலியுறுத்துகிறோம்.
தாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம், வளப்படுத்துவோம். வலுவான இளைஞர் சமூகம் ஒன்றாய் மாறுவோம்.
Post a Comment