பேரினவாதத்தின் 'கத்திச் சண்டை'
'அவலை நினைத்து உரலை இடித்தல்' என்பதன் அர்த்தத்தை நீங்கள் அறிவீர்கள். அது அவசரப் புத்திக்காரர்களின் அல்லது அறியாமையில் மூழ்கியிருப்போரின் செயலாகும்.
பௌத்தத்தின் பாதுகாவலர்களாகக் கூறிக்கொண்டு, முஸ்லிம்களின் சமயச் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகளைப் போட்டுக் கொண்டு திரியும் பொது பல சேனா என்கிற அமைப்பின் நடவடிக்கைகளுக்கும் - 'அவலை நினைத்து உரலை இடிப்பதற்கும்' வித்தியாசங்கள் எதுவுமில்லை.
பொது பல சேனா என்கின்ற அமைப்பின் ஆபத்தான செயற்பாடுகள் குறித்து கடந்த வாரக் கட்டுரையில் நாம் விபரித்திருந்தோம்.
காக்கி உடையணிந்தவர்களின் கைகளில் இருக்க வேண்டிய அதிகாரமானது, இன்று - காவி உடையணிந்தவர்களின் கைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகிறது. காக்கிகளின் வேலைகளை காவிகள் செய்வதற்கு முயற்சிக்கின்றன. காவிகள் செய்வதையெல்லாம் காக்கிகள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றன. இது மிகவும் ஆபத்தானதொரு நிலைவரமாகும் என்று கடந்த வாரக் கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருந்ததை சற்று நினைவுபடுத்திப் கொள்ளுங்கள்.
நாம் எழுதியிருந்ததை அப்படியே நிரூபிக்கும் வகையில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசர தேரர் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். அதாவதுள, 'பொது பல சேனா எனும் தமது அமைப்பு - நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையாகும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது அபாயகரமானதொரு கூற்றாகும். நாளை - பாதாள உலகக் குழுவினர், கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் என்று தடியெடுத்தோரெல்லோரும் 'நாங்களும் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர்தான்' என்று கூறிக்கொண்டு களத்தில் குதிக்கக் கூடும்.
பொது பல சேனாவினரின் மேற்படி அறிவிப்பானது சட்டத்துக்கு முரணனானதாகும். இவர்களின் நீதியும், அநீதியும் - இலங்கையின் சட்டம் ஒழுங்குகளுக்கு வெகு தூரத்தில் உள்ளவை. ஆனாலும், அரசு இது தொடர்பில் எதுவும் செய்வதாக இல்லை. பொது பல சேனாவினரின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆட்சியாளர்களின் மௌனித்தல் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்த மௌனத்தை - சம்மதத்தின் அறிகுறியாகவே பலரும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
தெமட்டகொட பகுதியில் முஸ்லிம் நபரொருவரின் மாடுகளை அறுக்கும் தொழுவமொன்றுக்குள் பொது பல சேனா அமைப்பினர் கடந்த 01 ஆம் திகதியன்று புகுந்து, எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டமை குறித்து சென்ற வாரம் எழுதியிருந்தோம். அந்தத் தொழுவத்தில் போலியான வைத்தியச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாடுகள் அறுக்கப்பட்டு வருகின்றன என்று பொது பல சேனாவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால், குறித்த தொழுவமானது சட்ட ரீதியாகவே இயங்கி வருவதாகவும், பொது பல சேனாவினர் தெரிவித்ததைப் போன்று, அந்தத் தொழுவத்தில் சட்டவிரோதமாக மாடுகள் அறுக்கப்படவில்லை எனவும் தெமட்டகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் அபேசேகர தெரிவித்துள்ளார்.
இதனூடாக, 'உத்தியோகபூர்வமற்ற காவல் துறையினரின்' குற்றச்சாட்டினை உத்தியோகபூர்வ காவல்துறையினர் மறுத்துள்ளனர். 'உத்தியோகபூர்வமற்றவர்'களின் செயற்பாடுகளில் நீதி இல்லை என்பதை 'உத்தியோகபூர்வமானவர்கள்' நிரூபித்துள்ளனர். இது கவனத்துக்குரியதொரு விடயமாகும்.
பொது பல சேனா அமைப்பின் இந்த 'உத்தியோகப்பற்றற்ற பொலிஸ்காரத்தனத்தினை' அரசு தொடர்ந்து அனுமதிக்குமாயின் அது தேவையற்ற பல பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்பதை நாம் மீள - மீள அழுத்திக் கூற விரும்புகின்றோம். 'நேற்று' தெமட்டகொட தொழுவத்துக்குள் புகுந்த பொது பல சேனாவினர் - 'நாளை' நமது படுக்கையறைக்குள்ளும் இதே சண்டித்தனத்துடன் நுழைந்து 'நீங்கள் சட்ட ரீதியான கணவன் மனைவிதானா?' என்று நம்மை விசாரிக்கத் தொடங்குவார்கள். நடக்கின்றவற்றினைக் கவனிக்கின்றபோது, நாட்டில் 'எதுவும்' நடக்கலாம் என்கிற நியாயபூர்வமான பீதி மக்களைத் தொற்றிக் கொள்கிறது.
இன்னொருபுறம் பொது பல சேனா அமைப்புக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையில் 'உறவுகள்' இருப்பதாக பலவேறு தரப்புக்களிலிருந்தும் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பது போல் - சில செய்திகள் நம்மை வந்து சேர்கின்றன. இதில் முக்கியமானது, பொது பல சேனாவினரின் பௌத்த தலைமைத்துவ நிறுவகமொன்றினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளார் என ஊடகங்களில் வெளிவரும் செய்திகளாகும்.
பொது பலசேனாவினர் காலி பிரதேசத்தில் பௌத்த தலைமைத்துவ நிறுவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இதன் திறப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொடாபய ராஜபக்ஷ பிரதம அதியாகக் கலந்து கொண்டு, நிறுவகத்தைத் திறந்து வைப்பார் என்பதே ஊடகங்களில் வரும் செய்திகளாகும்.
பௌத்தம், பௌத்த வரலாறு, பௌத்த இலக்கியம் உள்ளிட்ட சமயம் சார்ந்த பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொடுப்பதே மேற்படி 'பௌத்த தலைமைத்துவ நிறுவகத்தின்' நோக்கமாகும் எனத் தெரியவருகிறது.
ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உண்மையானால், மேற்படி பௌத்த தலைமைத்துவ நிறுவகத்தை நேற்று சனிக்கிழமை கோட்டா திறந்து வைத்திருப்பார். (இந்தக் கட்டுரை சனிக்கிழமைக்கு முன்னர் எழுதப்பட்டது)
மேற்படி பௌத்த தலைமைத்துவ நிறுவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை – பொது பல சேனா அமைப்பினர் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளதாக 'ஏசியன் ரிபியுன்' என்கிற ஆங்கில இணையத் தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையொன்று கூறுகிறது. அருண விதாரண என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.
அவைகளில் சில
* பொது பல சேனா தொண்டர் படை: எந்தவொரு பௌத்தரும் இதில் இணைந்து கொள்ள முடியும். பௌத்தத்தினைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்ட அமைப்பினைப் படிப்படியாக உருவாக்குவதே இதன் நோக்கம் என சந்தேகிக்கப்படுகிறது.
* பொது பல சேனா சுகாதார மேம்பாட்டுத் திட்டம்: பௌத்த மக்களிடையே இலங்கை முறைப்படி உடல் மற்றும் மனநல பயிற்சிகளை வழங்குவது.
* பொது பல சேனா சட்ட உதவி அமைப்பு: பௌத்தர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், தேவையானபோது அவர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
* பொது பல சேனா பௌத்த அபிவிருத்தி வங்கி: பௌத்தர்களின் வர்த்தகத்தை விருத்தியடையச் செய்வதற்கு இந்த வங்கி உதவும். சில சர்வதேசச் சந்தையினை பௌத்தர்களுக்காக அவர்கள் திறந்து கொடுப்பார்கள்.
பொது பல சேனா அமைப்பின் இப்படியான இன்னும் பல திட்டங்களை அந்தக் கட்டுரை விபரித்துச் சொல்கிறது.
இதில் பகிடி என்னவென்றால், இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கிணங்க இலங்கையில் செயற்பட்டு வரும் வங்கிகளுக்கு எதிராக பொது பல சேனாவினர் கருத்துத் தெரிவித்து வருவதும், அவ்வாறான வங்கி முறைகள் தேவையற்றவை எனவும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில்தான் 'பொது பல சேனா பௌத்த அபிவிருத்தி வங்கி'களை - அவர்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளார்கள்.
இது எந்தவகையில் நியாயம் என்று புரியவேயில்லை. முஸ்லிம்களின் மத செயற்பாடுகளுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு திரிகின்ற பொது பல சேனாவினர், பௌத்தர்கள் மட்டும் - தமது மத அடிப்படையில் அனைத்தினையும் மேற்கொள்ளலாம் என்று கூறுவது மிகப்பெரிய அடிப்படை மற்றும் மனித உரிமை மீறல்களாகும். கேட்டால், 'இது பௌத்த நாடு. பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நாடு. எனவே, சிறுபான்மையினரின் மத விழுமியங்களையெல்லாம் இங்கே செயற்படுத்த முடியாது' என்று பேரினவாதச் செயற்பாட்டாளர்கள் சண்டித்தனம் செய்கின்றனர்.
இதை இன்னும் வெளிப்படையாவும், பேரினவாத வெறி உச்சந்தலைக்கு ஏறிய நிலையிலும், பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசர தேரர் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, 'இந்த நாட்டு சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதாக இருந்தால் முஸ்லிம்கள் இங்கு வாழலாம். அல்லது அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்று அவர் மிகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
உண்மையில், 'இந்த நாட்டு சட்ட திட்டங்கள்' என்கிற பதத்தினூடாக, பொது பல சேனாவின் செயலாளர் கூற முயற்சித்திருப்பது - 'பௌத்த பேரினவாதிகளின்' அல்லது 'உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினரின்' சட்டமாகும். கிட்டத்தட்ட 'பௌத்த பேரினவாதத்தின் அமைகளாக வாழ்தல்' என்பதே அதற்கான மறைமுக விளக்கமாகும்.
ஏனெனில், இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குக்கு இந்த நாட்டுப் பிரஜையொருவர் கட்டுப்படாமல் போவாரேயானால், அவரைத் தண்டிப்பதற்கென இந்த நாட்டில் முறையான சட்டங்கள் உள்ளன. சட்டத்தினை மீறுவோரும் அதற்குக் கட்டுப்படாதோரும் நீதிமன்றங்களின் முன்பாக நிறுத்தப்படுவார்கள். குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனைகளை வழங்கும். இதுவே நமது நாட்டின் சட்ட முறைமையாகும்.
ஆனால், 'இந்த நாட்டு சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ முடியாது விட்டால், நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என்று இந்த நாட்டிலுள்ள சமூகமொன்றினை நபரொருவர் மிகப் பகிரங்கமாக அச்சுறுத்துவதானது பாரியதொரு குற்றமாகும்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசினுடைய அரசியலமைப்பானது தன்னுடைய நாட்டு பிரஜைகளின் மதம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட விடயங்களில் அவர்களுக்கான சுதந்திரங்கள் குறித்து விபரிக்கின்றது. அந்தவகையில்,
* அரசியலமைப்பின் 10 ஆவது பிரிவு பின்வருமாறு கூறுகிறது, 'ஆளொவ்வொருவரும், தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுவதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்'.
* அரசியலமைப்பின் 14(உ) பிரிவு இவ்வாறு கூறுகிறது. 'தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும், சாதனையிலும், போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரத்துக்கு ஒவ்வொரு பிரஜையும் உரித்துடையவராவார்.
* பிரிவு 14(ஊ) இவ்வாறு விபரிக்கின்றது. தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து தனது சொந்தக் கலாசாரத்தை அனுபவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், அத்துடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்குமான சுதந்திரத்துக்கு ஒவ்வொரு பிரஜையும் உரித்துடையவாராவார்.
நமது நாட்டின் அரசியல் அமைப்பானது நாட்டினுடைய 'தாய் சட்டம்' ஆகும். அந்தவகையில், தாய் சட்டத்தின் வழியாக இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மத, கலாசார சுதந்திரங்களை - நாட்டின் முஸ்லிம் சமூகத்தவர்கள் அனுபவிப்பதற்கு பொது பல சேனாவினர் அச்சுறுத்தலாகவும், தடையாகவும் உள்ளனர். அந்தவகையில், தாய் சட்டத்துக்குக் கட்டுப்படாமல், அதற்கு எதிராகச் செயற்பட்ட குற்றத்துக்காக பொது பல சேனா அமைப்பினர்தான் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.
சட்டம் இவ்வாறு ஒருபுறமிருக்க, பௌத்த மதத்தின் பாதுகாவலர்களாக தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள பொது பல சேனாவின் 'துறவி'கள் - பௌத்தத்தின் வழியில்தான் நடக்கின்றார்களா என்பதையும் அவர்கள் சுய விசாரணை செய்து கொள்தல் வேண்டும். புத்தரின் போதனைகள் அன்பும், கருணையும் நிறைந்தவை. 'மற்றவரை விசாரணை செய்யும் நீதிபதி ஆகாதீர்கள். மற்றவரைக் கண்டிக்காதீர்கள். மற்றவர் குறைகளைக் கண்டிப்பவர் தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறார்' என்பது புத்தரின் அறிவுரையாகும். ஆனால், இன்றைய நாட்களில் பொழுது விடிந்தால் - முஸ்லிம்கள் குறித்து குற்றம் பிடிப்பதும், கூறுவதுமே பொது பல சேன அமைப்பிலுள்ள பௌத்த தேரர்களின் தொழிலாகிப் போய் விட்டது.
அவரவர் - தங்கள் மதங்களைப் போஷிப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் அடுத்தவரின் மத நம்பிக்கைளுக்கு எதிராகச் செயற்படுவதென்பது கண்களைக் கட்டிக் கொண்டு கத்திச் சண்டை போடுவதுற்கு ஒப்பானதாகும். பல சமயங்களில் நமது கத்தியே நமது கழுத்தில் இறங்கி விடும் அபாயம்தான் இந்தச் 'சண்டை'யில் அதிகமதிகமாகும்!
இதிலிருந்து பொதுபலசேன அமைப்பு என்றால் காவியுடையணிந்த காடயர்கள் என்பது உறுதிப்படுத்தப்படுவதுடன், கொதாப்ப ராஜபக்ஸதான் அதை தலைமைதாங்கி நடத்திவருகிறார் என்பதையும் புரிந்துகொள்வோம் இன்று இல்லையென்றாலும் ஒருனாள் இதுதான் உண்மையென்று புரியாதவர்களும் புரிந்துகொளவோம்.... இன்ஸா அல்லாஹ்....
ReplyDeleteThamby
ReplyDeleteThey never understand any thing because they don't have very important part in their head. We must go with such people living in Srilanka to solve these problems.
And please try to avoid some words when write article.