இலங்கை நாட்டின் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்..!
(எஸ். ஹமீத்)
ஜனாதிபதி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அழைக்கும்..வணக்கம்..ஆயுபோவன்.
முதன் முதலாக தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது தங்களைப் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணம் இந்த நாட்டு மக்களிடையே இருந்தது. குறிப்பாக, மிக அதிகளவான மக்கள் தமது தாய் நாட்டின் அதி உத்தம ஜனாதிபதியாகத் தாங்கள்தான் வர வேண்டுமென்று விரும்பினார்கள்.
இலங்கைத் திரு நாட்டின் ஜனாதிபதியாவதற்கான சகல தகுதிகளும் தங்களிடம் இருந்தது என்பதை மறுப்பார் இலர். கல்வி, செல்வம், வீரம், கடமை உணர்வு, சேவை மனப்பான்மை, அரசியல் அனுபவம், தலைமைத்துவப் பண்புகள் போன்ற அனைத்தையும் கொண்ட ஒருவராகவே தாங்கள் இருந்தீர்கள்.ஜனாதிபதித் தேர்தலில் தங்களோடு போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தாங்கள் மிக உயரத்தில் இருந்தீர்கள். இபோதும் நான் மேற்குறிப்பிட்ட அனைத்துத் தகுதிகளுடனும்தான் இருக்கிறீர்கள். அதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
இந்த நாட்டின் சிங்கள மக்கள் மட்டுமல்ல, அதிகமான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களை ஜனாதிபதியாக்க வேண்டுமென்று பாடுபட்டு உழைத்தார்கள். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தங்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்கள்; தமது பெறுமதி மிக்க வாக்குகளைத் தங்களுக்கு வழங்கித் தங்களை இந்த தேசத்தின் அதியுச்ச பதவியில் அமர்த்தினார்கள்.
மற்றைய வேட்பாளர்களை விடுத்துத் தங்களைத் தேர்வு செய்வதற்கு சிங்கள மக்களுக்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு மிகச் சில காரணங்களே இருந்தன. அந்தக் காரணங்களில் மிகப் பிரதானமானது, தாங்கள்தான் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்து உரிய பாதுகாப்பை வழங்கக் கூடிய தலைவர் என்பது.
உள்நாட்டுப் போரினால் சொல்ல முடியாத சோகங்களுடனும் இழப்புகளுடனும் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் சமூகம், அதிலிருந்து விடுபட்டு, சுதந்திரமானதும் சுகமானதுமான வாழ்க்கையொன்றை வாழ்வதற்கான தமது ஏக்கத்தைத் தாங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்று திடமாக நம்பியது. அவ்வாறே, பல வழிகளிலும் பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகமும் கூடவே சிங்கள சமூகமும் எதிர்பார்த்தது.
தாங்களும் ஜனாதிபதி ஆனீர்கள். மக்களுக்கான தங்கள் சேவைகளைச் செய்ய ஆரம்பித்தீர்கள்.
நமது இலங்கைத் திரு நாட்டின் சாபக்கேடான உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமென்ற திட சங்கற்பத்துடன் தங்கள் பயணம் ஆரம்பித்தது. பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்தி விடலாம் என்ற தங்கள் ஆரம்ப முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதற்கான காரணங்களை இங்கே ஆராய்ந்து கொண்டிருக்க நான் விரும்பவில்லை. ஆனால்,பேச்சுவார்த்தைகள் மூலம் யுத்தமின்றி, இரத்தமின்றிப் பெற்றிருக்க வேண்டிய சமாதானம் விரும்பத்தகாத போர் மூலம், பல்லாயிரக் கணக்கான உயிர், உடைமை இழப்புகளோடு 'போர் முடிந்தது' என்னும் பெயரில், ஒரு முழுமையற்ற சமாதானமாக அடையப்பட்டது மிகத் துரதிருஷ்டமானதுதான்.
'வேறு வழி இருக்கவில்லை' என்பது தங்கள் தரப்பு நியாயமாக இருக்கலாம். ஆனால், பல்லாயிரக் கணக்கான மக்களும் ஆயிரக் கணக்கான இராணுவத்தினரும், கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிந்து போவதை ஓரளவாவது தவிர்த்துப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வழிகளைப் பின்பற்றியிருக்கலாம் என்பது வேறு பல தரப்பினரின் கருத்தாக இருக்கிறது. எனினும் இந்த விடயங்கள் பற்றியும் இந்த நேரத்தில் எனது செறிவைச் செலுத்த நான் முனையவில்லை. எவ்வாறாயினும், யுத்தம் முடிந்ததே என்ற மகிழ்ச்சியும், அழிவு நேர்ந்ததே என்ற துயரமும் என் மனதில் இருக்கின்றன.
அதி மேதகு ஜனாதிபதி அவர்களே...! சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக அழிவுகளைச் சந்தித்தும், இறுதியில் அது சமாதானமாக இல்லாமல் வெறும் 'போர் முடிவு' என்னும் பெயரோடு மட்டும் இன்று காணப்படும் ஒரு சூழ்நிலையின் மீது கவனத்தைச் செலுத்துவதே எனது இந்தக் கடிதத்தின் தலையாய நோக்கமாக இருக்கிறது.
உணமையிலேயே போர் முடிந்ததது. ஆனால் உறுதியான, நிலையான சமாதானம் வந்து விட்டதா...? நாட்டில் சகல மக்களும் சந்தோஷமாக, சக வாழ்வு வாழ்கின்றார்களா..? எல்லா மக்களும் தமக்குரிய உரிமைகளை அனுபவிக்கின்றார்களா...? அனைத்து இனங்களும் தமது மொழி, கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை அச்சமில்லாமல் பின்பற்றி வாழும் சூழல் நாட்டில் நிலவுகிறதா...? மாறுபட்ட மத நம்பிக்கை கொண்ட மக்கள் சமூகத்திற்கிடையே உணமையான இணக்கப்பாடு காணப்படுகிறதா...?
மேற்குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் 'இல்லை..இல்லை..இல்லை' என்ற ஒரு விடைதான் வருகிறது. ஏன் இப்படியான ஒரு விடை கிடைக்க வேண்டும்..? இந்த விடை வருவதற்கான அக, புற காரணிகள் எவை..?
ஜனாதிபதி அவர்களே...!
மேலேயுள்ள 'இல்லை..இல்லை..இல்லை..' என்று வந்த விடைகளையெல்லாம் 'ஆம்!ஆம்!ஆம்!' என்று மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு, இந்த நாட்டின் ஜனாதிபதியான தங்களுக்கே உண்டு என்ற எனது தாழ்மையான கருத்தைத் தாங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அத்தோடு, மக்கள் ஏன் மக்களிலிருந்து தூரமாகிறார்கள்...? மக்களில் குறிப்பிட்ட சாரார் ஏன் அரசாங்கத்திலிருந்தும், அதன் அதிபரிடமிருந்தும் அந்நியமாகிப் போக ஆரம்பிக்கிறார்கள்..? பரஸ்பரப் புரிந்துணர்வும் நம்பிக்கையும் கொண்டு ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு மக்களிடையேயுள்ள தடைகள் என்னென்ன...? இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள அடிப்படை உரிமைகளை அவர்களுக்குக் கிடைக்காமல் செய்வோர் யார்...? ஏன்..? போன்ற வினாக்களுக்கான விடைகளையும் ஆராய்ந்து கண்டு பிடித்து உரிய நடவடிக்கைகளை விரைவாகவும் மிக உறுதியாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று மிக்க பணிவுடன் தங்களிடம் விண்ணப்பிக்கிறேன். அபோதுதான் 'போர் முடிவு' என்று நாம் பெற்றிருக்கும் தற்காலிக பெறுபேற்றிலிருந்து மீண்டு, 'சமாதானம்' என்ற மிகச் சிறந்த நிலையான பெறுபேற்றை அடைய முடியும்.
இனங்களிடையேயும் மதங்களிடையேயும் பிரிவினைகளையும் குரோதங்களையும் உருவாக்க எத்தனிக்கும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனக்குரித்தான அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரங்களுடனும் வாழும் மகத்தான சந்தர்ப்பத்தை வழங்கியாக வேண்டும்.
இலங்கை நாட்டின் அதியுச்ச பதவியில் இருக்கும் அதியுன்னத ஜனாதிபதியாகிய தாங்கள், உங்கள் மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மிக்க வினயமுடன் வேண்டிக் கொள்கின்றேன். இது தங்களால் மட்டுமே முடியும். இதற்கான அனைத்து சக்தியும் திறமையும் தங்களிடம் நிறையவே இருக்கின்றன.
ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கைத் திருநாட்டை ஆக்கிக் காட்ட வேண்டுமென்ற தங்களின் ஆசை, கனவு நிறைவேற வேண்டுமென்றால், இன்னொரு போரோ அல்லது இனக் கலவரங்களோ இந்த நாட்டில் ஏற்பட இடமளிக்க முடியாது. தங்களின் ஆசையையும் கனவையும் தமது ஆசையாகவும் கனவாகவும் இலங்கையின் ஒவ்வொரு பொது மகனும் தங்களது உள்ளத்தில் ஏந்தி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உழைப்பதற்குரிய வாய்ப்புகளையும் வசதிகளையும் தாங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதற்குரிய மனோ நிலைமைகளையும் அவர்களிடம் உருவாக்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
தங்கள் பணிவுள்ள,
இலங்கைக் குடிமகன்.
avardan solluhenrara nattel oru peraccenayyum illay enru neengal eppade solverhal sudanderam illay enru
ReplyDeleteGood to here but he can't stop bcause it is done by his brother
ReplyDelete