யாழ்ப்பாண முஸ்லிம்களின் உரிமைக்காக குரல்கொடுத்தவர் டக்ளஸ்தான் - சுபியான்
முஸ்லிம் மக்களாகிய நாம் யாழ்ப்பாணத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது, எமக்காகவும், எமது உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியான் மௌலவி தெரிவித்தார்.
யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள சந்தை உட்புறத்தில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு கடைத்தொகுதிகளைக் கையளிக்கும் நிகழ்விற்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வர்த்தகத்தை மடடுமல்லாது, இன உறவையும் ஐக்கியத்;தையும் ஏற்படுத்தும் வகையில் கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து எதிர்காலத்தில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக வரலாற்றைக் கொண்டவர்களாக முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வந்த நிலையில் 1990ம் ஆண்டு புலிகள் அமைப்பால் துப்பாக்கி முனையில் இரண்டு மணிநேர கால அவகாசத்தில் கட்டாயத்தின் பேரில் நாம் வெளியேற்றப்பட்டோம்.
அவ்வேளையில் எமக்கான உரிமைக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்றும், உண்மைக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுத்த உத்தமர் அமைச்சர் அவர்கள் என்றும் சுட்டிக் காட்டினார்.
அதுமட்டுமன்றி, யுத்தத்திற்கு பின்னரான அமைதிச் சூழலால் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற யாழ்ப்பாணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தது மட்டுமன்றி, முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றம், அடிப்படை வசதிகளுக்கு தீர்வு காண்பது போன்ற விடயங்களிலும் அக்கறையுடன் உழைத்து வருபவர் அமைச்சர் அவர்களே என்றும், அந்த வகையில் நடைபாதை வியாபாரிகளுக்காக முஸ்லிம்களுக்கு மாற்றீடாக சந்தையின் உட்புறமாக கடைத்தொகுதிகளை அமைக்கவும் அரும்பாடுபட்டு உழைத்தார் என்றும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்புரைக்கமைய மாநகர சபையால் புதிதாக அமைக்கப்பட்ட 29 கடைகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறந்து வைத்து கையளிக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், கடந்தகால அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டல்கள் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே உறவில் இடைவெளி இருந்து விட்ட போதிலும் மீண்டும் ஒரு நல்லுறவு ஏற்படக்கூடியதொரு சூழல் தோன்றியுள்ளது.
அத்துடன், முஸ்லிம் மக்களது ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமென்று தெரிவித்த அமைச்சர், வர்த்தகர்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள், பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இதன்போது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனான் ஆகியோர் உடனிருந்தனர்.
டக்ளஸ் முஸ்லிகளுக்கு உதவி புரிந்த தமிழ் அமைச்சர் என்பதை எம்மால் மறுக்க முடியாது, ஆனால் இந்தச் செய்தியின் மூலம் ஒரு உண்மை மறைக்கப்படுவதற்கு இடம்தர முடியாது. 1990களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட 582 முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின, 1000ற்கும் அதிகமான முஸ்லிம் வர்த்தகர்கள் யாழ் மாநகர சபைக்கு வரி செலுத்தும் வியாபாரிகளாக இருந்தனர், இந்நிலையில் முஸ்லிம்களின் எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வெளியேறினார்கள் 2010 ஆண்டு முதல் நடைபாதை வியாபாரம் செய்துவந்த 70ற்கும் அதிகமான முஸ்லிம் வர்த்தகர்கள் கடுமையான பல கட்டங்களைத் தாண்டி வந்திருக்கின்றார்கள் என்பது உண்மையாகும். ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் இவர்கள் வியாபாரம் செய்தார்கள் அப்போது அங்கே மாநகரசபை ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு 5அடிக்கு 4 அடி விஸ்த்தீரனமுள்ள 30கடைகளை நிர்மானித்து அவை அனைத்தையும் நடைபாதை வியாபாரத்தில் எவ்வித அனுபவமும் இல்லாத தமிழ் வியாபாரிகளுக்கு வழங்கி முஸ்லிம்களை நட்டாற்றில் விட்டது. அதன் பின்னர் முனீஸ்வரர் கோயிலுக்கு அண்மையில் முஸ்லிம்கள் வியாபாரிகள் வியாபாரம் செய்தனர் அங்கு வந்த மாநகர சபை அங்கிருந்தும் முஸ்லிம்களை வெளியேற்றி தமிழ் வியாபாரிகளுக்கு கடைகளை வழங்கியது, இதன் பின்னர் பொலிஸாருடன் இணைந்து எங்கெல்லாம் நடைபாதை வியாபாரம் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று முஸ்லிம்களை அச்சுறுத்தி கைது செய்து அவர்களது வியாபாரப்பொருட்களை சேதமாக்கி அவர்களுக்கு பலத்த நஷ்டங்களை உண்டுபண்ணியது. இதன்போதெல்லாம் முஸ்லிம்கள் சார்பாகப் பேசிய மாநகர சபை உறுப்பினர்களுக்கு பொய்யான உறுதிமொழிகள் வழங்கப்பட்டன, எதுவும் நடக்காது என்ற தருணத்தில் யாழ் முஸ்லிம் நடைபாதை வியாபாரிகள் சகோ. சியானாஸ் தலைமையில் யாழ் மாநகர மேயரை சந்தித்து இது குறித்து விவாதித்தனர், அடுத்து யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தின் பொதுக்கூட்டத்தின்போதும் அதன் முக்கிய உறுப்பினராகிய தாஹிர் (சியானாஸ்) அவர்கள் கடுமையாக வாதாரி முஸ்லிம் வர்த்தகர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்ற விரும்புகின்றீர்களா என அமைச்சரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். இதன்போது அமைச்சர் அவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் எனக்கூறி நிலைமையை சமாளித்தார். இதன் பின்னர் அடையாளப்படுத்தப்பட்ட யாழ் பழைய சந்தைத் தொகுதியில் 22 கடைகளும் யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் 23 கடைகளுமாக 45 கடைகளை முஸ்லிம்களுக்கு மாநகர சபை பெற்றுத்தருமென உறுதிமொழி வழங்கப்பட்டது. இதனை யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் சட்டத்தரனி எம்.எம்.றமீஸ் அமைச்சருடன் நிகழ்த்திய விஷேட கலந்துரையாடலின் போது உறுதிசெய்துகொண்டார். இதன் பின்னர் கடைகளை நிர்மானிக்கும் பொறுப்பு மாநகர சபையால் நிர்மானத்துறையினர்க்கு வழங்கப்பட்டது. கடைகளை வழங்கிவைக்கும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 3 மாநகர சபை உறுப்பினர்களும் பிரதி முதல்வர் உட்பட புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள், அது மாத்திரமல்ல யாழ்ப்பாணம் முஸ்லிம் வர்த்தகர்கள் சார்பான பிரதிநிதி எம்.யூ.எம் தாஹிர் அவர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது சுயநல சுயேட்சை அரசியல் நடத்தும் ஒரு சிலரின் குத்துவெட்டு நடவடிக்கையாகவும் இருக்க முடியும், எனினும் இது விடயத்தில் ஈடுபாடுகாட்டியவ்ர்களை இவ்விடத்தில் நாம் ஞாபகப்படுத்த வேண்டும், அது தர்மமாகும்
ReplyDelete