வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தமிழ் மொழியையும் இணைக்க கோரிக்கை
(மூதூர் முறாசில்)
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சமரசப் பிரிவில் தமிழ் மொழி தெரிந்த உத்தியோகத்தர் ஒருவரை கடமையில் ஈடுபடுத்துமாறு மூதூர் பீஸ் ஹோம் நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கடிம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சமரசப் பரிவில் தமிழ் மொழி தெரிந்த உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் இல்லாததினால் அப்பிரிவிற்கு வரும் தமிழ்மொழி பேசும் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
வெளிநாடு சென்றுள்ள தமது உறவினர்கள் சம்பந்தமான பிரச்சினைகளை முறையிட்டு அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் குறித்த பிரிவை நாடிவரும் தமிழ்மொழி பேசும் மக்கள் தமது பிரச்சினையை உரிய முறையில் தெரியப்படுத்தமுடியாது திரும்பிவரும் நிலைமை அண்மைக்காலமாக தொடர்ந்து வருகின்றது.
அவ்வாறு செல்பவர்களில் சிலர் இருமொழிகளில் பேசக்கூடியவர்களை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அழைத்துச் செல்வதினால் அவர்களுக்கான செலவீனத்தையும் சுமக்க வேண்டிய தேவை ஏற்படுவதுடன் நேரவிரயமும் ஏற்படுகிறது.
மூதூரைச் சேர்ந்த றிஸானா நபீக்கிற்கு ஏற்பட்ட சம்பவத்தின் பின்பு வெளிநாடுகளில் தொழில் புரிந்துவரும்; தமதுதொடர்பில் இல்லாத அல்லது பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான உறவினர்கள் சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்வதற்கும் அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் உறவினர்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதனால் வேலை வாய்ப்புப் பணியகத்தின் சமரசப் பிரிவிற்கு நாளாந்தம் ஏராளமான தமிழ்மொழி பேசும் மக்களும் வருகை தந்தவண்ணமுள்ளனர்.
எனவே, மிகவும் சிரமத்திற்குள்ளாகி வரும் இம்மக்களின் நிலைமையைக் கவனத்திற் கொண்டு தமிழ்மொழி தெரிந்த ஒருவரையாவது குறித்த பிரிவில் தினமும் கடமையில் ஈடுபடுத்துவதற்கு ஆவன செய்யுமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு, நலனோம்பல் அமைச்சர் டிலான் பெரேரா, தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Post a Comment