Header Ads



மட்டக்களப்பில் அங்காடி வியாபாரத்திற்கு முழுமையாக தடை - வியாபாரிகள் விசனம்


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் அங்காடி வியாபாரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அங்காடி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது விடயமாக அங்காடி வியாபாரிகளில் ஒருவரான ஹயாத்து முகம்மது முகம்மது பாறுக் என்பவர் தெரிவிக்கையில்

நான் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பஸ் நிலையத்திற்கு முன்னால் மாநகர ஆணையாளர் திரு நவநீதன் அவர்களின் காலம் தொடக்கம் அங்காடி வியாபாரம் செய்து வந்தேன.; அத்துடன் என்னைப்போன்று சுமார் பத்திற்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள் அவ்விடத்தில் தினமும் வியாபாரம் செய்து வந்தனர்.

அத்துடன் அவ்விடத்தில் வியாபாரம் செய்வதற்கு தினமும் மாநகர சபைக்கு 50 ரூபாய் வியாபார வரி செலுத்தியும் வந்தோம் அவ்வாறு வியாபாரம் செய்யும் போது இடையிடையே பொலிஸாரின் தலையீடு ஏற்பட்டதுடன் சில சமயங்களில் நீதிமன்ற வழக்குகளுக்கும் முகம் கொடுத்தும் வந்தோம்.

அது விடயமாக மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் றம்ழான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று முதல்வரின் உதவியுடன் பொலிஸாருடன் பேசி எமது வியாபாரத்தினை அவ்விடத்தில் செய்வதற்கு முழுமையாக ஏற்பாடு செய்து தந்ததுடன் எதிர் காலத்தில் பொலிஸாரின் தலையீடு இன்றி எமது வியாபாரத்தினை செய்வதற்கு உறுப்பினர் றம்ழான் அவர்கள் முதல்வருடன் பேசி மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான பஸ் நிலையத்திற்கு முன்னால் இருந்த காணியை துப்பரவு செய்து பெற்றுத்தந்து அக்காணிக்குல் 11 அங்காடி வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு முதல்வரின் எழுத்து மூலமான அனுமதியையும் பெற்றுத்தந்தார்.

அன்று முதல் எதுவித பிரச்சினைகளும் இன்றி எமது வியாபாரத்தினை செய்து வந்தோம். கடந்த 17ம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை கலைக்கப்பட்டதும் மாநகர சபையின் தற்போதைய மக்கள் பிரதி நிதிகள் அற்ற நிருவாகம் எமது கஸ்ட நிலையை ஒரு வீதமேனும் சிந்திக்காமல் எதுவித முன்னறிவித்தல்களும் இன்றி திடிரென நாம் வியாபாரம் செய்து வந்த இடத்திற்கு கொங்ரீட் கட்டைகள் இட்டு முற்கம்பி வேலியை அடித்;து விட்டனர்.

இதனால் 11 அங்காடி வியாபாரிகளும் வியாபாரம் செய்வதற்கு இடமின்றி வியாபாரம் செய்யமுடியாமல் மிகவும் கஸ்டப்படுகின்றோம் எங்களிடம் வசதியில்லை இருந்தால் ஒரு கடையை குத்தகைக்குப் பெற்று நடாத்த முடியும் எமது வசதிக்கேற்ப 15 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்து வந்த எம்மை திடிரென தடை செய்து குறித்த காணியை எதுவித தேவைக்கும் பயன்படுத்தாமல் முற்கம்பி வேலியிட்டு அடைத்து வைத்துள்ளனர். இதனால் எமது வியாபாரம் மாத்திரமன்றி மாநகர சபைக்கும் தினமும் 550 ரூபாய் நஸ்டம் ஏற்பட்டுள்ளது.  

கொழும்பு, கண்டி, நுவரேலியா, போன்ற மிகவும் நெரிசலான மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அங்காடி வியாபாரத்திற்கென தனியான இடம் வழங்கப்பட்டுள்ளது அதனால் அதிகளவான அங்காடி வியாபாரிகள் நண்மையடைவதுடன் மாநகர சபைகளும் அதிகளவான வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடிகின்றது

ஆனால் மட்டக்களப்பு மாநகர சபை தனது வருமானத்தையும் பார்க்காமல் அங்காடி ஏழை வியாபாரிகளையும் கவனத்தில் கொள்ளாமல் தடை செய்தமை எமது குடும்பங்களின் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.