Header Ads



அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட ஈரானை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - இஸ்ரேல்


ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எஹுத் பராக் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்று வரும் அமெரிக்கா-இஸ்ரேல் பொது விவகாரங்களுக்கான செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது,

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதை ஈரான் மறுத்து வருகிறது. 

ஆனால் கடந்த வாரம் கஜகஸ்தானில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் யுரேனிய செறிவூட்டல் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளின் உயர் அதிகாரிகள் ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட ஈரானை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதை மீறி அணு ஆயுதங்களைத் தயாரித்தால் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

சுமுகமாகப் பேசித் தீர்க்க இன்னும் காலம் இருக்கிறது. ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படாது எனக் கருதுகிறோம் என்றார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்தாவிட்டால் அந்த நாட்டின் அணு உலைகள் மீது குண்டு வீசுவோம் என்று இஸ்ரேல் ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தூதராக அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு உயர் அதிகாரிகள், ஜெருசலேம் நகரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூவுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இஸ்ரேலுக்கு இன்னும் இரண்டு வாரங்களில் செல்லவுள்ளார் ஒபாமா. அப்போது இஸ்ரேல்-பாலஸ்தீன உறவு, ஈரான் விவகாரம், சிரியாவின் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

1 comment:

  1. நீங்கல் சொல்லிக்கொண்டிருங்கல். அவர்கல் வேலையை முடித்தும் இருப்பார்கல்....!

    ReplyDelete

Powered by Blogger.