கிழக்கு மாகாணத்தில் 'தெயட்ட கிருள'க்கு எதிராக துண்டுப்பிரசுரம்
(அபு தீனா)
ஈமானிய உள்ளங்கள் பேரவையினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் காணப்பட்ட துண்டுப்பிரசுரம் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் வரை 'தெயட்ட கிருள'நிகழ்வினை பகிஷ்கரிப்போம்.
அரசில் ஒட்டியிருக்கும் சுரணை கெட்ட முஸ்லிம் அரசியல் வாதிகளும் மற்றும் அரசுக்கு ஆமா சாமி போடும் சமய பெரியார்களும். மக்களே விழித்தெழுவது எப்போது?
இலங்கையில் தொன்று தொட்டு மிக கண்ணியமாக வாழும் நாம் அண்மைக்காலமாக எமது மார்க்கம் மற்றும் கலாசார ரீதியான பல அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நச்சுக்கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆசீர்வாதம் வழங்கி வருகின்றது.
கடந்த ஜெனீவா பிரேரனையின் போது எமது முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் நாடுகளிடம் கேட்ட வாழ்வுப் பிச்சையின் காரணமாக அந்தப் பிரேரணையில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதே போன்று இம்முறையும் எமது தாய்நாட்டை காட்டிக் கொடுத்து வரலாற்று தவறினை செய்யக் கூடாது என்பதற்காக எமக்கு என்ன நடந்தாலும் நாம் தாய் நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் என்பதை காட்டியிருக்கின்றோம்.
மாறாக இன்று எமது நிலை என்ன? அரசாங்கத்தினாலும் பேரினவாதிகளாலும் தலையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய நாங்கள் காலின் கீழ் போட்டு மிதிக்கப்படுவதுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கின்றது.
இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியுமாக இருந்தும், எமது சமூகத்தில் இருக்கும் எட்டப்பர்களான முஸ்லிம் அரசியல் தலைவர்களின் செயல்களும் சில மதப் பெரியார்களின் ஆழ்ந்த மௌனங்களும்தான் எம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுவரை 16 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருக்கின்றன, இந்நாட்டின் இழி பிறவிகள் குருநாகலில் பன்றி உருவில் இறைவன் பெயரை எழுதி பவனி வந்தனர், ஹலால் எனும் மார்க்கச் சட்டம் முஸ்லிம்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளது, அன்மையில் மன்னம்பிட்டியில் பெண் தபால் அதிபரின் ஹிஜாப் உடையை களைய முற்பட்டுள்ளனர், கண்டி-கல்ஹின்னை பிரதேச மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவரின் தொப்பியை ஒருவன் பலவந்தமாக அபகரித்து அதனை கீழே போட்டு மிதித்து அவமதித்துள்ளான். அடுத்து காழி நீதிமன்ற, ஜெய்லாணி என்பன குறிவைக்கப்பட்டுள்ளன. வீடு புகுந்து தாக்கும் அளவிற்கு இன்று நிலமை மோசமாக மாறியுள்ளது. எமது சகோதரிகள் ஹபாய் உடை அணிந்து வெளியிடங்களில் பயனம் செல்ல முடியாமல் உள்ளது. இதனால் பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்கள், தொழில்களுக்கு செல்லும் எமது பெண்கள் பாரிய அச்சத்தில் உள்ளனர்.
காவியுடையனிந்த பயங்கரவாதிகளினால் இன்று எமக்கு ஆபாத்துள்ளது என மேடைகளில் முழங்கி, பின் காவியுடையிடம் மன்னிப்புக் கேட்ட அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களே!, நோன்பு காலத்தில் கஞ்சிப் பானைக்குள் சண்டித்தனம் காட்டும் அமைச்சர் அதாவுல்லா அவர்களே!, முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என வீறாப்புப் பேசிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களே!, எனக்கு தந்திருக்கும் பொருளாதார பிரதியமைச்சு இந்நாட்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்த கௌரவம் எனச் சொன்ன பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே! மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் முஸ்லிம் முழு மந்திரி பஷீர் சேகுதாவூத் அவர்களே!, எல்லாத்துக்கும் மேலாக இலங்கையின் முதலாவது முஸ்லீம் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களே!, நீங்கள் அனைவரும் ஒரு முஸ்லிம் தாயின் வயிற்றில் பிறந்து கலிமாச் சொல்லி மறுமை பற்றிய பயம் கொண்ட முஸ்லிம்களாக இருப்பீர்களேயானால்! பிர்அவுன் முன்னிலையில் தைரியமாக பேசிய மூஸா நபியை பாதுகாத்த அல்லாஹ் நம்மையும் பாதுகாப்பான் என்ற நம்பிக்கை உங்களுக்கும் இருந்தால்!!
தற்காலிகமாகவேனும் இந்த அரசை விட்டு வெளியேற்றுங்கள். உங்கள் அமானிதம் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள், கிழக்கு மாகாண சபையிலும் உங்கள் ஆதரவினை விலக்கிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வை முன்னிறுத்தி தைரியமாக சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுங்கள், மக்கள் ஆனையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பேசுவதற்காவது வாயைத் திறங்கள் தலைவரின் வாரிசுகள் தாம்தான் என்று பீத்திக்கொள்ளும் அரசியல் தலைகளே ஒரு முறையேனும் உங்களிடம் ஒப்படைத்த அமானிதத்தினை நினைத்துப் பாருங்கள்.
எமது தலைவர்கள் திருந்துவார்கள் என்ற பகல் கணவுகளை கலைத்து விட்டு நாமும் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் பாராளுமன்றத்திற்கு நேரடியாகச் நாம் செல்லவில்லை. நாம்தான் அவர்களை அனுப்பி வைத்தோம்.
ஆகவே நாட்டின் சிறுபான்மையினராக இருக்கும் நாம் நமக்கெதிராக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைக் கூட்டத்தின் பிற்போக்கு கொள்கைகளை ஜனநாயக ரீதியில் முறியடிக்க தேயட்ட கிருள நிகழ்வினை பகிஷ்கரிப்பதன் மூலம் அரசினை வலியுறுத்துவோம்.
Post a Comment