Header Ads



பக்கவாதத்திற்கு நோய் நிவாரணியாகும் மீன் எண்ணெய்


பக்கவாத நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும், பாதிப்பை குறைக்க, மீன் எண்ணெய், சிறந்த மருந்தாக அமையும் என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளையில் ஏற்படும் பாதிப்புகள், பக்கவாதம், நினைவாற்றல் குறைவு மற்றும் நரம்பு மண்டலத்தை தாக்கும், "பார்கின்சன்' உள்ளிட்ட நோய்களுக்கு, காரணமாக அமைகின்றன. இந்நிலையில், மீன் எண்ணெயில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மருந்து, இந்த நோய்களை தீர்க்க உதவும் என, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின், கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் லூசியானா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி வகை மீன்களில், அதிக அளவில் காணப்படும், "ஒமேகா-3' எண்ணெயை கொண்டு தயாரான இந்த மருந்தை, ஊசி மூலம், மூளை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தினால், அவர்களின் உடல் மற்றும் மன நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தற்பொழுது பக்கவாத நோயாளிகளுக்கு, ஒரே ஒரு மருந்து தான் தரப்படுகிறது. பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட, மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்குள், அந்த மருந்தை உட்கொண்டால் மட்டுமே, நோயின் பாதிப்பு குறையும். இந்த மருந்து, மூளைக்கு ரத்தம் பாயாமல் தடுக்கும் மூளை கட்டிகளை கரைக்கும் தன்மை கொண்டது.

எனினும், ரத்தம் இழப்பதால், மூளை செல்கள் இறந்து போவதை, இந்த மருந்தால் தடுக்க முடியாது.

ஆனால், "மீன் எண்ணெயில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மருந்து, மூளை செல்கள் இறந்து போவதை தடுக்கும்' என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிப்பு ஏற்பட்டு, பல நாட்கள் கழித்து, இந்த மருந்து கொடுக்கப்பட்டாலும், நோயாளிகளின் உடல் மற்றும் மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். "முதற்கட்டமாக, எலிகளின் உடலில், இந்த மருந்து செலுத்தப்பட்டு, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. விரைவில், மனிதர்களின் உடலில் இம்மருந்து, சோதிக்கப்படும்' என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.