Header Ads



முகம் நெற்றியில் வலியா..?


கேட்பதற்கு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால், மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 5 சதவிகித மக்கள் இந்த வலியினால் அவதிப்படுகிறார்கள். இத்தகைய விசித்திர வலியைப் பற்றி, அதற்கான தீர்வுகள், சிகிச்சைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

‘‘முகம் மற்றும் நெற்றிப்பகுதியில் ஏற்படுகிற இந்த வலியினால் நடுத்தர வயதினரும் முதியோரும்  அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வலிக்கு ‘ட்ரைஜெமினல் நியூரால்ஜியா’ என்று பெயர். ஒரு பக்கமாக வலி ஏற்படும். பொதுவாக வலது பக்கத்தில் வலியை உணர்வார்கள். தாடை, கன்னங்களிலும் வலி இருக்கும். எரிச்சல் அல்லது மின்சாரம் தாக்கியது போல வலிக்கும். 

அது சில நொடிகளோ அல்லது சில நிமிடங்களோ நீடிக்கும். ஆனால், விட்டு விட்டு வரும். முகத்தைத் தொட்டாலோ, காற்று பட்டாலோ, வாயை அசைத்தாலோகூட வலி அதிகமாகும். இந்த வலிக்கான சரியான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த வலிக்கு மாத்திரைகள் மட்டும்தான் தீர்வாக இருந்தது. 

நாள்பட நாள்பட நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும். அதன் பக்க விளைவுகளையும் தவிர்க்க முடியாது.  நோயாளிகளும் சரியான வலி நிவாரணம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நோயாளிகளின் தொடு உணர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இன்றைய நவீன மருத்துவத்தில் ரேடியோ அலை வரிசை சிகிச்சை முறையில், வலி ஏற்படும் நரம்புகளில் செலுத்தி, வலியை நீக்க முடியும். 

நோயாளிகளுக்கு தொடு உணர்ச்சி பாதிக்கப்படாமல் வலி மட்டும் நீங்கும். இந்த நவீன மருத்துவ முறையில், குறைந்த பட்சம் 9 முதல் 18 மாதங்கள் வரை நிவாரணம் நீடிக்கும். தவிர நரம்பு முடிச்சுகளில் இந்த ரேடியோ அலைவரிசையைச் செலுத்தி, கன்னங்கள், தாடைகள், நெற்றி முழுவதும் 6 முதல் 18 மாதங்கள் வரை வலி இல்லாமல் இருக்கச் செய்யலாம். இந்த லேட்டஸ்ட் வலி நிவாரண முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயாளிகள், மாத்திரைகளின் அளவைக் குறைக்கவோ, முற்றிலும் நிறுத்தவோகூட வாய்ப்புகள் அதிகம்...’’

No comments

Powered by Blogger.