Header Ads



பிக்குகளின் குற்றங்களை விசாரிக்க தனி பொலிஸ் பிரிவு - ஜனாதிபதியிடம் வலியுறுத்து

இலங்கையின் பௌத்த சாசனத்தில் இருந்து கொண்டு சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பிக்குமார்களை இனங்காண்பதற்கும் நாட்டில் காவியுடையணிந்து வேஷமிட்டுத் திரியும் பிக்குமார்களைக் கைது செய்யவும் 2300 வருடம் பழைமை வாய்ந்த இலங்கையின் பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கும் தனிப்பட்ட பொலிஸ் படைப்பிரிவொன்று உருவாக்கப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொட ஹத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

கொழும்பு 5 இல் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜெயந்தி  மாளிகையில் திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையின் 2300 வருடம் பழைமை வாய்ந்த பௌத்த சாசனத்தின் கௌரவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில தனிப்பட்ட தனிநபர்களும் அமைப்புகளும் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் மரபாகத் திகழும் பௌத்த சாசனத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தடுப்பதற்கும் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்பவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் பொதுபலசேனா அமைப்பு சீருடையில்லாத பொலிஸாக செயற்படும்.

மாளிகாவத்தை தொடர் மாடி குடியிருப்பில் தங்கியிருந்து கடந்த ஐந்து வருடங்களாக குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த போலி பிக்கு ஒருவர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. குறித்த நபர் தான் நாட்டின் முன்னணி பௌத்த அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகிப்பதாகக் கூறி அப்பகுதி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். அது மட்டுமல்லாது அந்நபர் பிக்கு வேடமிட்டுக் கொண்டு சில சட்டவிரோதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுபலசேனா அமைப்பினர் பொலிஸாருடன் இந்த நபரின் வீட்டினை முற்றுகையிட்ட போது போலியான இறப்பர் முத்திரைகள் போலி  டிக்கட்டுகள் மற்றும் துறவறம் பூண்டமைக்கான போலி ஆவணங்கள் என பல சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நபரைப் போன்று இலங்கையில் சிலர் காவி வேடமிட்டுக்கொண்டு பௌத்த மக்களை ஏமாற்றிவருவதோடு மட்டுமல்லாமல் பௌத்த சாசனத்தினை நிர்மூலமாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பிக்குவேடம் பூண்டு நாட்டு மக்களை ஏமாற்றும் நபர்களினதும் பிக்கு அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளினதும் காவியுடை துகில் உரியப்பட்டு சட்டத்தின் மூலமாக தண்டனை பெற்றுத்தர பொதுபலசேனா செயற்படும் பிக்கு வேடமிட்டு பௌத்த சாசனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நபர்களை இனங்கண்டு பௌத்த சாசனத்தினைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எமது அமைப்பின் பிரதான கொள்கையின் அடிப்படையில் பொதுபலசேனா அமைப்பினர் எதிர்காலத்தில் சீருடையணியாத பொலிஸாக இந்நாட்டில் செயற்படுவர்.

அத்துடன் ஜனாதிபதியிடம் ஒரு வேண்டுகோளை நாம் முன்வைக்கவுள்ளோம். புத்த பிக்குகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் குற்றவியல் சம்பவங்களை விசாரிப்பதற்கு  தனிப்பட்ட பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்பட வேண்டும். பௌத்த கொள்கைகளை நன்றாக கற்றுத்தேர்ந்த பௌத்தர்கள் அப்பொலிஸ் பிரிவில் இடம்பெற வேண்டும். இந்தப் பொலிஸ் பிரிவினூடாக நாட்டின் பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும்.

1 comment:

  1. appady enru parthaal ungalai thaan muthal kaythu vendum!

    ReplyDelete

Powered by Blogger.