Header Ads



நெருக்கடி நிலையைப் போக்க புத்திஜீவிகள் முன்வருவார்களா..?


1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூலை கலவரத்தின் பின்னர் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் பல் வேறுவிதத்திலும் துன்பங்களை அனுபவிக்க நேரிட்டது. அரசியல், பொருளாதார, கல்வி, வர்த்தகம், தொழில்வாய்ப்பு, சுதந்திரமான நடமாட்டம், மத விடயங்கள் என்று எல்லா செயற்பாடுகளிலும் கட்டுப்பாடுகளையும் தொந்தரவுகளையும் எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. நாடளாவிய ரீதியில் சாதா ரண தமிழ் மகன் ஒருவர் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்பட்டது. எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதி என்ற அடிப்படையில் சந்தேகக் கண் கொண்டு நோக்கும் நிலை ஏற்பட்டது. வடக்கில் விடுதலைப் புலிகளால் அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் நாட்டில் வாழும் எல்லாத் தமிழர்களையும் பயங்கரவாதிகளாக்கி சந்தேகத்துடனே பார்க்கும் நிலைமை காணப்பட்டது.

உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் புறந்தள்ளப்பட்டனர். நாட்டின் முக்கியமான இடங்களில் பல பதவிகளில் இருந்த தமிழர்கள் நீக்கப்பட்டதோடு ஒதுக்கப்பட்டனர். நாடளாவிய ரீதியில் தமிழர் எதிர்ப்பு நிலைமை காணப்பட்டதால் அவர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர். இதன் விளை வாக சுமார் 5 இலட்சம் அளவிலான புத்திஜீவிகள் இந்நாட்டை விட்டு புலம்பெயர்ந்தனர். இவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தஞ்சம் வழங்கியதால் இன்றும் அவர்கள் அந்நாடுகளில் இருந்து கொண்டு இலங்கைக்கு சவால் விட்டவர்களாக உள்ளனர். அதன் விளைவே இலங்கைப்பிரச்சினை ஐ.நா. அமைப்பு வரை செல்லும் அளவிற்கு தமிழர் பலம் பெற்றனர். அரசாங்கம் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து இந்நாட்டில் அமைதியை ஏற்படுத்தினாலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களால் தொடர்ந்து இலங்கைக்கு மானசீக ரீதியாக அச்சுறுத்தல் இருந்துகொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.

இத்தகைய ஒருநிலை ஏற்படக்காரணம் இந்நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சிங்களவர்களும் பேரினவாத தமிழர் எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கு ஊதுகுழலாக அமைந்த ஊடகங்களும் உதாசீனப் போக்குடைய அரசியல் தலைவர்களுமாவர். இது இந்நாட்டின் கடந்த கால கறைபடிந்த வரலாறாகும். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை அவதானிக்கையில் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கும் அப்படியான ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு முகம் கொடுக்க நேரிடுமா என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. பொதுபல சேனா, சிங்ஹலயே ராவய, ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய பிக்குகள் முன்னணி போன்ற அமைப்புக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஆரம்பத்தில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட விற்பனை பொருட்களுக்கு எதிராக ஆரம்பித்த எதிர்ப்பு செயற்பாடுகள் இன்று முஸ்லிம்களின் கல்வி, மதவிடயங்கள், ஹஜ் பிரயாணம், மத்ரசாக்கள், அன்றாட மத செயற்பாடுகள், இஸ்லாமிய உடை அணிந்த நிலையில் முஸ்லிம் பெண்களின் வெளி நடமாட்டம், வக்ப் சட்டங்கள், இஸ்லாமிய கலாசார விவகாரங்கள் என்று அனைத்திலும் இந்த பௌத்த தீவிரவாத அமைப்புகள் தலையிட்டு இடையூறு உண்டுபண்ணும் அளவிற்கு உக்கிரமடைந்து விட்டன.அவர்களின் வேண்டுதலின் அடிப்படையில் அந்த அமைப்புக்களின் கோரிக்கைகளின் பிரகாரம் முஸ்லிம்களும் அஞ்சி ஒதுங்கிப்போனால் 1200 வருடகால வரலாற்றைக் கொண்ட பேசா மடந்தைகளாக பௌத்தர்களுக்கு அஞ்சி வாழவேண்டிய ஒரு நிலை ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இவ்வாறு தீவிரமடைந்து செல்கையில் அரசாங்கம் மௌனம் சாதிப்பதும் இந்த அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு அரச அங்கீகாரம் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தை முஸ்லிம்கள் மத்தி யில் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலைமை தொடருமானால் இந்நாட்டில் முஸ்லிம்களது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. இந்நிலையில் இந்நாட்டில் வாழும் புத்திஜீவி களது பொறுப்பு எத்தகையது என்று சிந்தித்தால் அவர்கள் இவ்வாறானதொரு நிலையில் மௌனம் சாதித்தால் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமமானதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற இன்றைய மிக மோசமான நிலைமைகளுக்கு எதிராக ஜே.வி.பி., சோசலிச கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.தே.க. வின் ஓரிரு பிரதிநிதிகள் அவர்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகை செயற்பாடுகள் திட்டமிட்ட அடிப்படையிலா முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒதுக்கல் என்று அவர்கள் கண்டித்திருப்பது முஸ்லிம்களுக்கு ஒருவகையில் நிம்மதியளிப்பதாக உள்ளபோதும் பௌத்த தரப்பை சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் இந்நாட்டில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் ஆகியோர் வாய்மூடி மௌனிகளாக இருப்பதும் இந்த தீவிரவாத அமைப்புக்கள் முன்னெடுக்கும் இஸ்லாமிய எதிர்ப்பால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மோசமான விளைவுகளைச் சுட்டிக்காட்டி கண்டிக்காமல் இருப்பது முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்களை இந்நாட்டின் பெரும்பான்மையினர் அங்கீகரிப்பதில்லை என்பது உண்மை. அவர்கள் மௌனமாக இருப்பது அதனை அங்கீகரிக்கின்றது என்ற உணர்வினையே ஏற்படுத்துகின்றது. எனவேதான் இந்தக் கடும் போக்காளர்களது செயற்பாடுகளை அங்கீகரிக்காதிருக்கும் சக்திகளது குரல் பலமாக ஒலிக்கப்பட வேண்டும் என்று நாம் கூறுகின்றோம். முப்பது வருட யுத்தத்தினால் நாம் கண்ட இழப்புக்கள் அழிவுகள் மீண்டும் ஏற்படாதிருப்பதன் மூலம் மட்டுமே இந்த நாடு சுபீட்சத்தைக் காணலாம். எனவே, இலங்கைமீது பற்றுள்ள சகலரும் இந்த கடும் போக்காளர்களது செயற்பாடுகள் குறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தவேண்டும்.

இந்நாட்டில் வாழும் எல்லா இனங்களுக்கும் அவர்களது மத உரிமைகள் சுதந்திரங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவற்றுக்காக குரல் எழுப்பவும் பூரண உரிமையும் சுதந்திரமும் இருக்கின்ற அதே நேரம் அந்த செயற்பாடுகளால் ஏனைய இனங்களின் சுதந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. அவ் வாறே அந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஏனைய இனங்களை தூற்றி இம்சைப்படுத்தவும் கூடாது. அவ்வாறே ஏனைய மதங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு, களங்கம் எற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதையும் அனுமதிக்க முடியாது.

முஸ்லிம்களை பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் என்றும் இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு தூபமிடுபவர்கள் என்றும் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொதுபலசேனா மும்முரமாக முஸ்லிம் எதிர்ப்பை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு பக்கபலமாக ஜாதிக ஹெல உருமய, சிங்ஹலயே ராவய ஆகிய அமைப்புக்களும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. எதிர்வரும் சனியன்று காலியில் நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் தலைமையக திறப்பு விழாவிற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் அந்த அமைப்பு அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்கின்ற நெருக்கம் எதிர்காலத்தில் அதன் தீவிர முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு அரச அங்கீகாரம் வழங்கு வதாக அமையக் கூடாது. காரணம் அந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ள உத்தியோகபூர்வமற்ற பொலிஸ்படை நாடளாவிய ரீதி யில் முஸ்லிம்களுக்கு எதிரான எத்தகைய வன்முறைகளிலும் ஈடுபடலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துடனான நெருக்கம் அதன் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக அமையலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

1 comment:

  1. உண்மையான கருத்து எமது சமூகம் இன்னும் நானா நீயா என்று போட்டி போடுகிறதே தவிர தனது தார்மீகப் பொறுப்புக்களை உணர்ந்து செயற்பாட முன்வருவதுல்லை இஸ்லாமிய அமைப்புக்கள் தனது பெயரை எங்கே பதிக்கலாம் என்று சிந்திப்பதை விட்டு விட்டு சமூகத்திற்கு எம்மால் என்ன நல்லது செய்யலாம் எனறு சிந்திக்க வேண்டும் எல்லோரும் பேசுபவர்களாக இருக்கின்றார்கள் செயற்படுபவர் எவரையும் காணவில்லை தான் ஏன் அடுத்தவனின் சொல்லிக்கு வேலை செய்ய வேண்டும் என்ற கருவமும் அகங்காரமும் இந்த கருவமும் அககங்காரமும் நாளை எமது சமூகத்தைப் பாதுகாக்கப் போவதில்லை தற்போதைய தலைமைத்துவங்கள் சிந்தித்து செயற்படாவிட்டால் நளைய சந்ததியினர் உங்களை ஒரு போதும் மன்னிக்காது.

    ReplyDelete

Powered by Blogger.