Header Ads



இறைவனின் ஒளியை எவராலும் அணைத்து விட முடியாது..!



(A.J.M. மக்தூம் - இஹ்ஸானி)

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போர் இன்று நேற்று ஆரம்பமாகவில்லை மாற்றமாக  இஸ்லாம் இப்பிரபஞ்சத்தில் தோன்றிய நாள் முதல் அதற்கெதிரான யுத்தமும் ஆரம்பமாகிவிட்டது. அதற்கெதிரான தாக்குதல்கள் பல்வேறு கோணங்களில் முடக்கிவிடப்பட்டுள்ள போதிலும் அவற்றில் பிரதானமானவையாக பின்வருவனவற்றை அவதானிக்கலாம்.

1. முஸ்லிம்களின் உறுதியான இறை நம்பிக்கையில் (ஈமானில்)  ஆட்டம் காண செய்யும் விதமாக மார்கத்தில் சந்தேகங்களை தோற்றுவித்து நாஸ்திகம், இணைவைப்பு போன்றவற்றை அவர்கள் மத்தியில் பரவச் செய்தல்.

2. மனோஇச்சை, ஆசைகளை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு முஸ்லிம் சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்க வழிச்செய்தல்.

3. முஸ்லிம் சமூகத்தில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை பலமிழக்கச் செய்தல்.

4. பெண் உரிமை என்ற போர்வையில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான சதி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் மகத்துவத்தை இலக்கச் செய்தல்.

5. இஸ்லாத்தை காட்டுமிராண்டித் தனமானதாகவும், தீவிர வாதமாகவும், பயங்கர வாதமாகவும்  சித்தரித்தல்.

6. முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றங்களை தகர்த்தெறிய முயற்சி செய்தல் 
7. அந்நிய கலாச்சாரங்களையும், அநாகரீகங்களையும் முஸ்லிம் சமூகத்தில் பரவச் செய்தல் 

இன்று உலகில் எந்த மூலையில் எந்த சக்தி இஸ்லாத்திற் கெதிராக செயற்பட்டாலும் மேற்குறிப்பிடப் பட்டுள்ள கோணங்களை இலக்காக நோக்கி செயல் படுவதை  எளிதில் உணர்ந்து கொள்ளலாம். முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் நவீன சவால்கள் பல்வேறுவிதமான அடிப்படைகளையுடையதாக இருப்பினும் அவற்றை ஆராய்ந்து பார்க்குமிடத்து இங்கு குறிப்பிடப் பட்டுள்ள அடிப்படைகளிலோ அல்லது அவற்றில் சிலவற்றிலோ மட்டுப் படுவதை அவதானிக்கலாம். 

அத்தீய சக்திகள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அதற்கு தேவையான செயற் திட்டங்களும் அவர்களிடம் இருக்கவே செய்யும். அத்திட்டங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி உள்ளவர்கள் எப்போதோ போட்ட திட்டங்களின் மறு வடிவமாகவே அமைந்திருக்கும் என்பதும் உறுதியானதே. 

எனவே நாம் எதிர்நோக்கும் சவால்களை முதலில் இனம் கண்டால் தான் அதற்காக இஸ்லாம் சொல்லும் சரியான தீர்வை கண்டறியலாம். இது ஓரிரு தனிமனிதர்களால் சாத்தியமாகும் விடயமல்ல. மாறாக பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் குழுவினால் ஆராயப்பட வேண்டும். அப்படியாக ஆராயப் பட்டு அதற்கான தீர்வையும் கண்டறியப் பட்டபின் முஸ்லிம் சமூகத்திற்கு அது பற்றிய சரியான விழிப்புணர்வு ஊட்டுவதும் அவசியமாகும். அப்போது தான் நாம் எமக்கெதிரான சவால்களை முறியடித்து வெற்றிக் கொள்வது இலகுவாகும். 
   
இஸ்லாம் மனித சமூகத்துக்காக இறைவனால் வழங்கப் பட்டுள்ள பரிபூரண வாழ்வு நெறி. அது வாழ்வின் எல்லா கோணங்களுக்கும் வழிகாட்டுகிறது. எந்த திசையில் இருந்து இஸ்லாத்தை நோக்கினாலும் அது ஒளிமயமானதாகவே காணப் படும். அதன் ஒளியை ஊதி அணைத்திட எந்த சக்தி கங்கணம் கட்டி செயல் பட்டாலும் தோல்வியை தழுவியதே  வரலாறு கற்றுத் தரும் பாடம்.   

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (61:8,9)

2 comments:

  1. மாஸா அல்லாஹ் இவற்றனைத்துக்குமெதிராக இன்று நாம் அனைவரும் கட்சி,கொள்கை,மத்ஹப் என்ற வேற்றுமையில்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் இதை தொடர்ந்து இதே ஒற்றுமையுடன் முன்னெடுத்துச்செல்ல்வேண்டும் என்பதுதான் அனைவரதும் அவா..

    ReplyDelete
  2. உண்மையில் இஸ்லாத்துக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் வரலாற்றுற் தொடராக ஏற்பட்ட சோதனைகள் இழப்புகள் இன சுத்திகரிப்புகள் வேறு மதத்துக்கோ அல்லது சமூகத்துக்கோ ஏற்பட்டிருந்தால் அதன் வாடையையை கூட நாம் இன்று காண மாட்டோம்
    இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் அல்லாஹ் அதை தவிர எந்த வழியையும் ஏற்கமாட்டான்
    இன்னும் ஒன்று இவைகளுக்குப் பின் கட்டாயம் அவனின் உதவி உண்டு

    ReplyDelete

Powered by Blogger.