சுரணையற்றவர்களின் அரசியல்...!
காலம் என்பது மிகப்பெரும் ஆசான், அதன் ஒவ்வொரு கணங்களிலும் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. ஆனால், துரதிஷ்டவசமாக காலத்தின் பாடங்களை நாம் கவனிப்பதேயில்லை. அதனால், வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற பல பரீட்சைகளில் தோல்வியடைந்து விடுகின்றோம். கடைசியில், நமது தோல்விக்கான பழியினை காலத்தின் மீது சுமத்தி விடுகின்றோம்.
காலம் இப்போதும் மிகப் பெரும் புத்தகத்தை நம்முன் விரித்து வைத்திருக்கின்றது. வழமைபோல் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மீண்டும் ஒரு முறை இழக்காமல் இருப்பதென்பது நமது கைகளில்தான் உள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் போக்குகள் நாட்டில் குறைந்தபாடில்லை. பொதுபலசேனாவுக்கு மறைவிலிருந்து உதவிய பல கரங்கள் வெளியில் வரத் துவங்கியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே நேரடியாகச் சென்று பொதுபல சேனாவினரின் தலைமைத்துவப் பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்து விட்டு வந்துள்ளார். இதனூடாக அரச தரப்பினரும் - பாதுகாப்புச் செயலாளரும் சொல்வதற்கு விரும்பிய ஏராளமான விடயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொதுபலசேனா என்பது – 'பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு' என்பதை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தப் 'பாம்பிடம்' சேட்டை வைத்துக் கொள்வதென்பது 'பரமசிவனை'ப் பகைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்பதை பாதுகாப்பு செயலாளர் கோட்டா புரிய வைத்துள்ளார். அதனால், அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் 'கப்சிப்' ஆகி விட்டார்கள். அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தவர்களையும் இப்போது காணோம்.
ஹலால் விடயத்தில் முஸ்லிம்கள் நாட்டில் அனுபவித்து வந்த உரிமை பறித்தெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், சாதாரண முஸ்லிம் பிரஜைகள் வெளிக்காட்டும் உணர்வுகளைப் போலாவது, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தவில்லை என்பது கவலைதரும் விடயமாகும்.
இப்போது, முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்திலும் பொதுபலசேனா கை வைத்துள்ளது. முஸ்லிம்களுக்கென்று இந்த நாட்டிலுள்ள சட்டங்களும் ரத்துச் செய்யப்பட வேண்டுமென்று பொதுபலசேனா கோசமெழுப்பி வருகிறது. ஒரு சமூகத்துக்கென்று தனியானதொரு சட்டம் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது பொதுபலசேனாவின் வாதமாகும். ஆனால், முஸ்லிம்களின் தலைவர்களாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளிடமிருந்து – இது தொடர்பிலும் எந்தவிதமான எதிர்வினைகளும் இதுவரை எழவில்லை.
இலங்கையில், முஸ்லிம்களுக்கென்று மட்டுமே தனியான சட்டங்கள் இருப்பதுபோல் ஒரு தோற்றப்பாட்டையும், பிரசாரத்தினையும் மேற்கொண்டு வருவதானது பொதுபல சேனாவினரின் 'வேண்டுமென்ற' சூழ்ச்சியாகும். இலங்கையிலுள்ள முஸ்லிம்ளுக்கென்று 'முஸ்லிம் தனியார் சட்டம்' உள்ளதைப் போல், மலைநாட்டு சிங்களவர்களுக்கென 'கண்டிய சட்டமு'ம், வடமாகாண தழிழர்களுக்கென 'தேசவழமைச் சட்டமு'ம் உள்ளதை நாம் அறிவோம். பொதுபல சேனாவுக்கும் இது தெரியாமல் இல்லை. மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து அவர்கள் நடத்திவரும் பிரசாரங்களில் இதுவுமொன்று - அவ்வளவுதான்.
ஹலால் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அவசரப்பட்டிருக்காமல் விட்டிருந்தால் - நாங்கள் 'பொளந்து கட்டியிருப்போம்' என்கிற தொனியில் பேசிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இப்போது மருந்துக்கும் காணவில்லை. வெளிப்படையாகச் சொன்னால், இந்த அரசுடன் முஸ்லிம்கள் கொதிப்பில் உள்ளனர். ஆட்சியில் இணைந்துள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக அரசிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே முஸ்லிம்களின் பெரும்பான்மை மனநிலையாக உள்ளது.
ஆனால், எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் இதற்குத் தயாராக இல்லை போலவே தெரிகிறது. அரசிலிருந்து விலகுவதற்கு - ஒன்றில் இவர்கள் அச்சப்படுகின்றனர். அல்லது கவலைப்படுகின்றார்கள்.
அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டால் எங்கே தங்கள் 'வண்டவாளங்களை' ஆட்சியாளர்கள் 'குடைவதற்கு'த் தொடங்கிவிடுவார்களோ என்பது – அச்சத்துக்கான காரணமாகும். மற்றையது, அரசை விட்டு விலகினால், இப்போது 'ஓசி'யில் அனுபவித்துக் கொண்டிருக்கும் சொகுசுகளையெல்லாம் இழந்து விடுவோமே என்பது - கவலைக்கான காரணமாகும்.
'மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை' என்பார்கள். 'எவர் வந்து குடைந்தாலும், என்னிடமிருந்து எடுக்க - எந்தவிதமான அழுக்குகளும் இல்லை' என்கிற துணிவு இருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்ப்பினர்களால் மட்டுமே அரசை விட்டு விலகுதல் என்பது சாத்தியமாகும். அப்படி விலகாமல் அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருப்போரின் 'குதிர்'களுக்குள் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் ஒழித்து வைக்கப்பட்டுள்ளதாகவே மக்கள் சந்தேகிக்கின்றனர்.
முஸ்லிம்கள் விவகாரத்தில் ஆட்சியாளர்கள் நடந்து கொள்ளும் முறைமைக்கு எதிரான தமது அதிருப்தியினை வெளிப்படுத்துவதற்குக் கூட, அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை. அரசோடு இணைந்துள்ள முஸ்லிம் - மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியாளர்களிடமிருந்து கொஞ்சம் விலகி நின்றாவது தமது அதிருப்திகளை வெளிப்படுத்துவார்களா என்று பார்த்தால் - அதுவும் இல்லை.
மத்தள விமான நிலையத் திறப்பு விழா, 'தயட்ட கிருள்ள' நிகழ்வுகளில் முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் தொடக்கம் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை - முண்டியடித்துக் கொண்டு முகம்காட்டுகின்றனர். போதவில்லையென்று, முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இத்தனை கொடுமைகள் நடக்கின்றபோதும் ஒருவார்த்தை கூடப் பேசமாமல் - தாம் மௌனித்து இருப்பதற்கும், வெட்கம் கெட்டு நடப்பதற்கும் நியாயங்களை வேறு இவர்கள் கற்பித்து வருகின்றனர்.
தமது நியாயபூர்வமான கோபத்தினை நாகரீகமான வழியில் கூட வெளிக்காட்ட முடியாதவர்களைத்தான் தங்களுடைய அரசியல் தலைவர்களாக முஸ்லிம் சமூகம் தேர்வு செய்து வைத்துள்ளது. உண்மையில், இவர்கள் நமக்கான தலைவர்களே அல்லர். அரசியலின் மிக முக்கியமான பக்கங்களை - தமிழர்களிடமிருந்து முஸ்லிம்கள் கற்க வேண்டியிருக்கிறது. இதைச் சொல்வதிலோ – ஏற்றுக் கொள்வதிலோ வெட்கப்படத் தேவையில்லை. இத்தனை துயரங்களை அனுபவித்த பிறகும், விலைபோகாமல், சுரணையுள்ள அரசியல் செய்வதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முடிகிறது என்றால் - ஏன் முஸ்லிம் தலைமைகளுக்கு முடியாது!
முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட கட்சி என்றும், முஸ்லிம்களுக்கான அரசியல் அடையாளம் தாங்கள்தான் என்னும் கூவி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் கூட, இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக - நாட்டில் நடந்து வரும் எந்தவொரு செயற்பாட்டினைக் கண்டித்தும் மு.காங்கிரஸ் உருப்படியாக எதுவுமே செய்யவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் தூசு படிந்த சில சொற்கள் இருக்கின்றன. 'ஆப்பிழுத்த குரங்கு', 'பூதம்', 'பலவீனமான மக்கள்', 'பலமான அரசு' – என்று அந்தச் சொற்களின் பட்டியல் நீளமானது. தனது தொப்பிக்குள்ளிருந்து திரும்பத் திரும்ப – பூக்கொத்து, புறா, முயல் போன்றவற்றை வெளியே எடுத்து வித்தை காட்டும் - ஒரு மாயாஜாலக்காரனைப் போல், மு.காங்கிரஸ் தலைவரும் சில தினங்களுக்கு முன்னர் தன்னிடமுள்ள சொற்களை தூசு தட்டி எடுத்து – ஊடகங்களில் பரப்பியிருந்தார். ஆனால், ஒரு எறும்பு சுமக்கும் உணவுப் பருக்கையை விடவும், தலைவரின் சொற்கள் பாரமற்றவை.
நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிவரும் சமகாலப் பிரச்சினைகள் குறித்து, முஸ்லிம் பிரதிநிதிகள் ஊடகங்களில் இவ்வாறு அறிக்கைகளாக அட்டைக் கத்தி வீசுவதால் - ஆகப்போவது ஒன்றுமில்லை. இவர்கள் ஏடுகளில் வரையும் சுரைக்காய்களை வைத்துக் கொண்டு, ஒரு சம்பல் கூட சமைக்க முடியாது என்பதை - இந்த அறிக்கை மன்னர்களே அறிவார்கள். இருந்தும், 'நாங்களும் சும்மாயிருக்கவில்லை' என்று காட்டுவதற்காகவும், அதனூடாக தமக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்காகவும் - இவர்கள் இப்படி அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் 18 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில ஐந்து பேர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள். கிழக்கு மாகாணசபையிலும் முதலமைச்சர் உட்பட 04 முஸ்லிம்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்கின்றனர். மேற்சொன்னவர்களில் 02 மத்திய அமைச்சர்களும், கிழக்கு மாகாண அமைச்சர்கள் இருவரும் மு.காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், நாட்டில் நடைபெற்றுவரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் தொடர்பில் இவர்கள் அனைவரும் 'சர்வத்தினை'யும் பொத்திக் கொண்டே இருக்கின்றனர்.
ஆகக்குறைந்தது, முஸ்லிம் காங்கிரஸாவாவது இவ்வாறான முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து எழுந்து நிற்கும் - என்கிற மக்களின் கடைசி நம்பிக்கையும் தவிடுபொடியாகி வருகிறது. மு.காங்கிரஸ் தலைவர் தனது உச்சபட்ச விசுவாசத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிக்காட்டும் சந்தர்ப்பமாகவே இப்போதின் நிலைவரங்களைப் பயன்படுத்தி வருகின்றாரோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.
'மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லை' என்கிற பரவலானதொரு பேச்சுக் குறித்து நீங்கள் அறிவீர்கள். மு.கா. தலைவரின் கடந்த கால அரசியல் நடத்தைகள் - ஜனாதிபதிக்கு அவ்வாறானதொரு மனநிலையினை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால், ஹக்கீமுடைய 'பருப்பு'க்கள் அரசுக்குள் வேகுவதில்லை என்கிற மற்றொரு கதையும் உள்ளது. இவற்றினால் மனமுடைந்துபோன மு.கா. தலைவர் ஹக்கீம் - தன்னை நம்புமாறு ஜனாதிபதியிடம் பகிரங்கமாகவே பல்வேறு தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஜனாதிபதியின் நம்பிக்கையை சம்பாதித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய அரசியல் நகர்வுகளையும் ஹக்கீம் அமைத்துக் கொண்டார்.
இவ்வாறானதொரு நிலையில் - நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவிரோத நடவடிக்கைகள் பெருமளவில் இடம்பெற்று வருகின்றன. ஆனால், மேற்படி செயற்பாடுகளில் ஈடுபட்டுகின்றவர்களுக்கு எதிராக அரசும், ஆட்சியாளர்களும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. வெளிப்படையாகச் சொன்னால் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டுவரும் பொதுபலசேனாவினை ஆட்சியாளர்களே போஷித்து வருகின்றனர் என்றுதான் பலரும் நம்புகின்றனர். இவை அனைத்தினையும் மு.கா. தலைவர் ஹக்கீமும் அறிவார். ஆயினும் - ஜனாதிபதிக்கு தன்னுடைய விசுவாசத்தினை வெளிப்படுத்துவற்கு மு.கா. தலைவர் ஹக்கீம் இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்டுத்திக் கொள்கின்றாரோ என்கிற சந்தேகம் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கே ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரி நடிக்கும் வடிவேலுவின் நகைச்சுவையே இந்த இடத்தில் நமது நினைவுக்கு வருகிறது. தன்னை விசுவாசத்துக்குரிய ஒருவராக ஜனாதிபதியிடம் காட்டிக் கொள்வதற்காக வேண்டி, முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் அனைத்தினையும் பொறுத்துக் கொண்டு, வாய் மூடி, ஜனாதிபதியின் பின்னால் இழுபட்டுக் கொண்டு திரியும் மு.கா. தலைவர் ஹக்கீம் - தனது சமூகத்துக்குச் செய்வது மிகப்பெரும் துரோகமாகும்.
இந்த ஆட்சியாளர்கள் பற்றியும், முஸ்லிம் பிரதிநிதிகளின் 'லட்சணம்' குறித்தும் அறிந்து கொள்வதற்குரிய அற்புதமானதொரு சந்தர்ப்பத்தினை காலம் நமக்குத் தந்திருக்கின்றது. கற்றுக் கொள்வதற்கு இதில் - ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. கற்பதற்கான சந்தர்ப்பத்தை மீண்டும் ஒரு முறை இழக்காமல் இருப்பதென்பது நமது கைகளில்தான் உள்ளது.
தமது சமூகக்துக்கும், தமக்கும் மரியாதையில்லாத ஓர் அரசில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகள் எதையும் சாதிக்கப் போவதில்லை. மதியாதோரின் வாசலை மிதியாமல் இருப்பதே ரோசமுள்ளவர்களின் பண்பாகும்.
ஆனால், ரோசம் கெட்டோன் - ராசாவிலும் பெரியோன் என்பார்கள். மக்களைப் பற்றியோ – மக்களின் அபிப்பிராயங்கள் குறித்தோ அவர்களுக்கு அக்கறை கிடையாது!
please write shot & sweet.... this is tooo long
ReplyDeleteநாக்குல நரம்பு இருந்தாத்தானே போடுற கொச்சிக்காய் உறைக்கும்.
ReplyDeleteNitharsanam
ReplyDeleteஇந்த ஆட்சியாளர்கள் பற்றியும், முஸ்லிம் பிரதிநிதிகளின் 'லட்சணம்' குறித்தும் அறிந்து கொள்வதற்குரிய அற்புதமானதொரு சந்தர்ப்பத்தினை காலம் நமக்குத் தந்திருக்கின்றது. கற்றுக் கொள்வதற்கு இதில் - ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. கற்பதற்கான சந்தர்ப்பத்தை மீண்டும் ஒரு முறை இழக்காமல் இருப்பதென்பது நமது கைகளில்தான் உள்ளது.
ReplyDeleteஇனிமேலும் யாரும் ரவூப் ஹக்கிமை நம்பவேண்டாம். இவர் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு குரல்கொடுக்கமாட்டார் மாறாக இவர் கூட்டத்தோடு அந்தக்கூட்டமாக செல்லப்பிள்ளையாக தன் சுய நலத்திற்காக பாட்டுப்பாடுபவர்தான் இவர். முஸ்லிம்களே அல்லாஹ்வுக்காக ரவூப் ஹக்கீமை நம்பாதீர்கள் இனிமேலும் இவரை தேர்தல் நேரங்களில் ஏதாவது மனதை மாற்றுமளவுக்கு எதையாவது பேசிக்கொண்டு கண்டிப்பாக உங்களிடம் வருவார் அந்த நேரத்துக்காக மட்டும் இன்ஸா அல்லாஹ் காத்திருந்து அவர் முகத்தில் கரியைப்பூசுவோம் இதை அனைவரும் ஞாபகத்தில் கண்டிப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்தவிடயம் தற்போது நமக்கேற்பட்டுள்ள இக்கட்டான சூழ் நிலைக்கு யார் அரசுடன் போரட வல்லமை பெற்றுள்ள ஒரு முஸ்லிம் தலைவர் இருக்கின்றார் என் கவனிப்போம், யார் பதவிகளை துச்சமென்றெண்ணி தூக்கி வீசியெறிகிண்றார் என்று கவனிப்போம், பத்திரிக்கைகளிலொ கூட்டங்களிலோ அறிக்கைவிடும் தலைவர்களையும் அவர்களின் அறிக்கைகளையும் நாம் கணக்கில் எடுக்கத்தேவையில்லை அதனால் ஒருபோதும் நமக்கொரு இலாபமுமில்லை.
தற்போது நாம் கவனிக்கவேண்டியது யார் தற்போதுள்ள பிரச்சினைகளுக்காக குரல் மட்டும் கொடுக்காமல் செயல் பட்டுள்ளார் என்று பார்க்கவேண்டும்.
அந்தவகையில் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக தற்போது செயல்படுவது ஒரேயொருவர்தான் அது சகோதரர் ஆஸாத் சாலிதான் அவர் முஸ்லிம்களுக்கா என்றும் போராட இறைவன் அவருக்கு ஆற்றலைக்கொடுத்திருப்பதை நம்மால் கவனிக்க முடிகின்றது.
ஆஸாதலிதான் முஸ்லிம்களின் பிரச்சினைய வெளியுலகிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்தார் அதனால் அரசாங்கத்தால் ஏற்பட்ட பின்விழைவுகளை நாம் அறிந்தோம் இருப்பினும் அவர் இன்னும் சழைக்கவில்லை.
ஆனால் நமக்காக குரல் கொடுத்தார், அவரை முஸ்லிம்கள் எதிர்கவேண்டுமென்பதற்காக பலவகையான உள்குத்தல்களும் முஸ்லிம்கள் அவரை எதிர்கக்கூடிய காரணங்களையும் கண்டுபிடித்து பொய்யாகச்சோடித்து அவரை முஸ்லிம்களிடமிருந்து முதலில் எதிர்ப்பையுண்டாக்குவதில் குறியாகவுள்ளதையிட்டு நாம் மிகவும் நுணுக்கமாகச்சிந்தித்துச் செயல்படவேண்டும்.
ஆகவே தற்போதுள்ள தலைவர்களை நம்பி நாம் கெட்டத் போதும் இனி அவர்களை ஒருபோதும் நம்பிவிடக்கூடாது.
தற்போது நமக்கு யார் உதவிக்காக நிற்கின்றாரோ அவருக்கு நம் ஒத்துழைப்பையும் உதவிகளையும் செய்யவேண்டும் கண்டிப்பாக அது அரசியல் இலாபமாக இருக்கட்டும் செயல்பாட்டில் காட்டுகின்றார்களாவென்று பார்ப்போம் நமது ஆதரவை காட்டுவோம்.
நன்றாக சிந்திப்போம்.